வெற்றியின் படிக்கட்டுகள்:
வாழ்க்கை எனும் பயணத்தில், நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும் என நினைக்கிறோம். இதில் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தி குறிக்கோளை அடைவதற்கு உதவுகின்றது. ஒருவேளை பதினெட்டாவது படிக்கட்டை அடைந்த பிறகுதான் வெற்றி கிடைக்குமெனில், கீழிருந்து ஒவ்வொன்றாக ஏறித்தான் உயரத்தை எட்ட முடியும் என்பதால், வெற்றியை நோக்கி செல்லும்போது ஏறுகின்ற ஒவ்வொரு படிகட்டுமே வெற்றிக்கு உதவக்கூடியதுதான்.
முயற்சிகளின் சாட்சி:
மின்சார பல்பு கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல்பின் ஒளிரும் இழையாக இருப்பதற்கு டங்ஸ்டன் இழைதான் பொருத்தமானது என்பதை தன்னுடைய நூறாவது முயற்சியில்தான் கண்டுபிடித்தார் என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பு அவருடைய தொன்னூத்தியொன்பது முயற்சிகளும் தோல்விகள் அல்ல. அவை அனைத்தும் வெற்றியைக் கண்டுபிடிக்க உதவிய படிக்கட்டுகளே.
தோல்வி, நிராகரிப்பு, அவமரியாதை, ஏமாற்றம் போன்ற சவால்கள் தற்காலிகமானவைதான். இவை அந்தச் சூழ்நிலையில் தடைகற்கள்போல தோன்றலாம். மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற இத்தகைய சூழல்கள் சொல்லித்தரும் பாடங்கள்தான் அனுபவங்களாக நம்மை மேலும் செம்மைப்படுத்தும். அதே வகையான தோல்வி மீண்டும் ஏற்படாமல் கவனமாகச் செயல்படவைக்கும். இதனால் எந்தச் சூழ்நிலையையும் கூடுதல் பொறுப்போடு, நிதானத்துடன் கையாளும் திறமை வளரும்.
“மனதின் வலியை அறிவின் வலிமையாக மாற்றுவதுதான் அனுபவமாகும்”.
இயந்திரங்களுக்குக் கொடுக்கப்படும் மின்சார சக்தி, இயக்க ஆற்றலாக வெளிப்படுவது போல, வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலைகளும் அனுபவங்களாக வெளிப்படும். இவற்றை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் பக்குவமே வெற்றிக்குச் சிறப்பாக உதவும்.
இத்தகைய அனுபவங்களே புதிதாகச் சந்திக்கும் சூழ்நிலைகளையும் நேர்த்தியாகக் கையாளும் வல்லமையைத் தரும். சவாலான சூழ்நிலைகள் அனைத்துமே நம்மை உயர்த்துவதற்கான சில பாடங்களை உள்ளடக்கி வருகின்றன. அந்தப் பாடங்களை விழிப்போடு உணர்ந்து நம்மை நாம் சரிசெய்து கொண்டால் அதுவே நம்முடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே தோல்வி, நிராகரிப்புப் போன்றவற்றை, மனவுறுதியோடு எதிர்கொள்ளும் முறையினால் அவைகளும் வெற்றிக்கான வாய்ப்புகளாக மாறலாம்.
எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய நேர்மறையான எண்ணங்களும், முயற்சிகளுமே நம்மை ஆக்கபூர்வமாகச் செயல்படவைக்கும். மேலும், இவை நம்முடைய குறிக்கோளில் நமக்கு இருக்கும் பிடிப்பையும் உறுதிப்படுத்தி, நமது விடாமுயற்சிக்குச் சாட்சியாகவும் இருக்கும்.
இயக்கம்:
வாழ்க்கையில் ஓரளவு கணிக்கக்கூடிய ரிஸ்க் எடுத்து நேர்மையான வழியில் புது முயற்சிகள் செய்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். Comfort zone என்று சொல்லக்கூடிய சாதகமான சூழலோடு நம்மை ஒட்டிவைத்துக் கொண்டிருந்தால் தேக்க நிலை ஏற்பட்டு விட வாய்ப்புண்டு.
இயற்கை நம்மை ஓரிடத்தில் தேங்க விடாமல் தொடர்ந்து இயங்க வைக்கும் தன்மை கொண்டது. இதை புரிந்துகொண்டால் நமது பயணத்தை ஆக்கபூர்வமான குறிக்கோளை நோக்கிய பயணமாக அமைத்து, நமது சக்தியை உருப்படியாக செலவு செய்து நல்ல அனுபவங்களைப் பெற முடியும்.
Comfort zone எனும் சாதகமான சூழலிலேயே பயணிக்க விரும்பினால், பூங்காவில் நடைபயணம் போவது போல எத்தனை கிலோமீட்டர் நடந்தாலும் பயணம் ஏதும் நிகழாமல், ஆற்றல் மட்டுமே விரயமாகிக் கொண்டிருக்கும்.
இந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனவுறுதியோடு நடந்தால் அதுவே நல்ல பயணமாகி நமக்கு முன்னேற்றமான பலனைத் தரும். எனவே, நேர்மையான வாய்ப்புகளை ஆற்றலுடன் வரவேற்று, புதிய அனுபவங்களை நிதானத்துடன் எதிர்கொள்வதுதான் நம்மை புத்துணர்வோடு இயங்க வைக்கும்.
தன்னையறிதல்:
புது முயற்சிகளும், புது பலன்களும் சவால்களோடுதான் இருக்கும் என்ற புரிதலுடன், அவற்றை மனவுறுதியோடு எதிர்கொள்வதுதான் ஆக்கபூர்வமாக இருக்கும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட சூழல்கள், மனிதர்கள், வாய்ப்புகள் இவையே நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரும் காரணிகளாகும். எனவே, நம்மைப்பற்றி நாமே பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள புதிய சூழல்கள் நல்ல வாய்ப்பாக அமையும்.
வெற்றியின் வழி:
ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குப் பலவழிகள் இருப்பது போலவே, நம் நோக்கத்தை அடைவதற்கும் பல வழிகள் இருக்கக்கூடும். அவற்றில் நேர்மையான வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்பதுதான் பாதுகாப்பானது ஆகும்.
பயணத்திற்கு ஏற்றவகையில் பொருத்தமான வாகனத்தில், விழிப்புடன் பயணிப்பதுபோல, நோக்கத்திற்கு ஏற்றவகையில் திறமைகளை வளர்த்துக் கொண்டு, கவனமாக முயற்சி செய்வதே சிறந்த வாய்ப்புகளை அளிக்கும்.
மேலும், நோக்கத்திற்காக செல்லும் வழியில் உள்ள தேவையற்ற கவனயீர்ப்பு காரணிகளைக் கண்டதும் வழிமாறாமல் மனநிலையில் ஒரே நிலைப்பாட்டுடன் பயணிப்பதும் நோக்கத்தில் வெற்றியடைய உதவும் வழியாகும்.
மனநிறைவு:
நீண்ட பயணத்தில் உணவுக்காகவும், ஓய்வுக்காகவும் ஆங்காங்கே நிறுத்தங்கள் இருப்பதுபோல, வாழ்க்கைப் பயணத்திலும் அவ்வப்போது சிறுசிறு நிறுத்தங்கள் ஏற்படலாம். அதை அந்த நேரத்திற்கான பணிகளால் கடந்து, அடுத்த தொடக்கத்திற்கு முழுமையாக நம்மை ஆயத்தப்படுத்தி கொள்வதே சரியான முறையாகும்.
இதுவே பயணத்தை ஆற்றலுடன் தொடர்வதற்கான சக்தியைக் கொடுக்கும். சந்திக்கும் சூழ்நிலைகளை வெற்றிக்கு உதவும் வாய்ப்புகளாகப் பயன்படுத்தி, நம்பிக்கையோடு பயணம் செய்தால்தான் கிடைக்கும் வெற்றி முழுமையான மனநிறைவை அளிக்கும்.
# அன்பான நண்பர்கள் அனைவரும் தங்களுடைய நல்ல நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற வாழ்த்துகளுடன், நன்றிகள்.