தன்னம்பிக்கை, தற்பெருமை.வேறுபாடுகள். Thannambikkai, Tharperumai. Verupaadugal. Diference Between Self Confidence and Boast.

தன்னம்பிக்கை:-
சுய விசாரணை:-
‘தன் வலிமையும், செயலின் வலிமையும் தெரிந்து செயல்படும் தன்மையே தன்னம்பிக்கையான செயலாக வெளிப்பட்டு வெற்றிபெறும்’. 
ஒரு செயலின் தன்மையை அறிந்து, அதில் உள்ள சவால்களையும், விளைவுகளையும் கையாளும் திறமையே தன்னம்பிக்கை ஆகும். மேலும், எதிர்பாராமல் வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும், மனவுறுதியையும் தன்னம்பிக்கையினால்தான் பெறமுடியும்.  
கணிப்பு:-
தன்னம்பிக்கை எப்போதும் நிகழ்காலத்தில் செயல்பட்டு, இன்றைய செயலின் விளைவுகளையும், எதிர்காலத்தின்  மாற்றங்களையும்  கருத்தில் கொண்டு செயல்பட வைக்கும் தன்மை உடையது.   
சமவாய்ப்பு உள்ளவர்களுடன் உழைப்பதற்கான ஊக்கம் தரக்கூடியது.  எதிர்ப்புகளை எதிர்கொண்டு, மனஉறுதியுடன் செயலாற்றும் சக்தி தரக்கூடியது.
விளைவுகள்:-
வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்றபடி மனிதன் தன்னை  வளர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை மிக அவசியம்.  சில சமயங்களில் சந்திக்கும் பின்னடைவுக்கும், தோல்விக்கும், பொறுப்பேற்று அதை சரி செய்து வெற்றிக்கு வழி காணவும், தன்னுடைய தவறுகளை (ஈகோ இல்லாமல்) உணர்ந்து சரி செய்யும் தன்மையும் தன்னம்பிக்கையினால்தான் விளைகிறது.
கிடைக்கும் வெற்றி, தோல்வியைக் குறிப்பிட்ட செயலுக்கானது என்ற தெளிவோடு மனதை நடுநிலையோடு வைத்திருக்க உதவும்.  தமக்குக் கிடைத்த அனுபவங்களை நட்புடன் பகிர்ந்து கொள்ளும் தெளிவான சிந்தனையும்  தன்னம்பிக்கையால் ஏற்படும்.
“பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.  
என்று புறநானூற்று புலவர், கணியன் பூங்குன்றனார் பாடியது போல யாரையும் தனிப்பட்ட அளவில் புகழ்வதோ, இகழ்வதோ இல்லாமல் அவர்களின் சிந்தனைகளை, செயல்களை ஆராய்ந்து எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று தெளிவு பெற ஒவ்வொரு மனிதருக்கும் மனதில் தன்னம்பிக்கை நிச்சயம் வேண்டும்.  தன்னம்பிக்கை என்பது செயல் சார்ந்த நேர்மறையான குணம் என்பதால், இது செயலைச் சிறப்பாகச் செய்ய தேவைப்படும் முக்கியமான குணமாகும்.
தற்பெருமை:-
 
தற்புகழ்ச்சி:-
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமைப்படக்கூடிய சாதனைகள் செய்தவர்கள் என்றும் பணிவுடன் நடந்துகொள்வார்கள்.  ஆனால், ஒரு சிலர் தங்களைப் பற்றி பேசும் பெருமையான பேச்சு அவர்களின் செயலை விட மிகப்பெரிதாக இருக்கும் என்று உலகப்பொதுமறைக் கூறுகிறது.
தற்பெருமை என்பது உலகம் தன்னைப் பாராட்டவில்லை என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு ஆகும்.  வாழ்க்கையில் கிடைத்த வெற்றிகள் அனைத்தும் தன்னுடைய வியூகத்தால் கிடைத்ததாகப் பெருமை பேசுவதும், தவறுகளோ, தோல்விகளோ ஏற்பட்டால் அதற்கு மற்றவர்களைக் காரணமாக்குவதும் தற்பெருமையின் அடிப்படை குணங்களாகும். 
செயல்பாடுகள்:-
தற்பெருமை பேசுவதற்கு ஏற்றபடி நிகழ்வுகளை மாற்றி, திரித்துப் பேசும் வஞ்சகத் தன்மையும், மற்றவர்கள் அடையும் புகழைத் தாங்க முடியாமல் சூழ்ச்சி செய்வதும், அவர்களின் பெருமையைக் குறைத்துப் பேசுவதும் அந்த இழிகுணத்தின் செயல்பாடுகளாகும்.
தற்பெருமைக்கு, இயல்பாகவே பணிவு இருக்காது என்பதால் தேவையானவற்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளவோ, திருத்தம் செய்துகொள்ளவோ ஆர்வம் இருக்காது.  ‘உங்களை மாதிரி நல்லவங்க, வேறயாரும் இல்லீங்க’ என்று முகஸ்துதி கூறி, கீழ்ப்படிந்து புகழ்பாடுபவர்களை மட்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, அவர்களிடம் தன் பெருமையைப் பேசும் தன்மை கொண்டது.
தற்பெருமை, தாழ்வு மனப்பான்மையின் விளைவாக ஏற்படுவதால், விரைவாகவே மனம் சோர்வடைந்து எரிச்சலாக வெளிப்படும்.  பின்னர், எல்லாவற்றிலும் குறைகளைக்கண்டு, மட்டம் தட்டியே தன்னை உயர்த்திக் கொள்ளும் தன்மையும் உண்டாகும். தன்னுடைய அனுபவங்களைத் தேவைப்படுபவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் பொறுமையோ, வழிநடத்தும் தன்மையோ இருக்காது.  
விளைவுகள்:-
மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகச் செய்யும் போலித்தனமான செயல்களால், உள்ள மதிப்பும் குறைந்து விடும்.  தன்னை  உயர்ந்தவனாகக்  காட்டிக்கொள்ளும் எண்ணத்தினால் உண்டாகும் அலட்டல் மற்றவர்களுக்கு வெறுப்பையும்,  கோபத்தையும், சலிப்பையும் ஏற்படுத்தி விடும்.
தான் மிகவும் அடக்கமானவன் என்று கூறும்போதே அவனுடைய அடக்கம் மறைந்து விடுவது போல, தற்பெருமை பேசும்போதே அந்தப் பெருமை காணாமல் போகும் என்று சான்றோர்கள் எச்சரித்துள்ளனர்.  
ஒருவர் செய்யும் வேலைதான் அவருடைய தகுதியைப் பற்றி பேசவேண்டும்.  அப்படி இல்லாமல் அவரே தற்புகழ்ச்சியாகப்  பேசினால், அந்தச் செயல் பாராட்டுக்காகவே செய்யப்பட்டது என்றும், ஆனால்  மற்றவர் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை என்றே பொருள்படும். 
நன்மை:-
அமைந்தாங் கொழுகான் அளவரியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.
தன்னை நினைந்து வியப்பவனை விரைந்து கெடுக்க அவனுடைய  தற்பெருமை எண்ணமே போதும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
உலகில் குறையில்லாத மனிதர் என யாரும் இல்லை என்று பெரியவர்கள் கூறுவார்கள்.  மனிதர்கள் இயல்பில் பல்வேறு இயலாமைகளோடு  இருக்கலாம்.  ஆனால் தற்பெருமை கொண்டவர்களுக்குத் தங்கள் (தற்பெருமை பேசும்) இயலாமையே இயல்பாகி விடுகிறது.   
வாழ்வியல்:-
 
உலக நடைமுறையில் தன்னிலை விளக்கமாகச் சில சமயங்களில் பேசவேண்டியதும் இருக்கலாம்.  அந்த நிலையிலும் தன்னம்பிகையான வெளிப்பாடுகளையே மற்றவர்களும் விரும்புவார்கள்.  அரிய செயல்கள் ஏதேனும் செய்திருந்தாலும், அவை செயல்சார்ந்த விளக்கமாக, கேட்பவரின் குறிப்பறிந்து தேவையான அளவு மட்டும் வெளிப்படுத்தினால், அதுவே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 
ஒருவர், தான் சொல்வதை வெல்லும் சொல் வேறொன்று இல்லாத வகையில் தேர்ந்தெடுத்து, தன்னுடைய செயலின் சிறப்பை வெளிப்படுத்துவதே  நாகரிகமானதாகும். 
ஒருவேளை மற்றவர்கள் புகழ்ந்தாலும், அது அச்செயலின் வெற்றிக்கு உதவியவர்களின் சார்பாகக் கிடைத்தப் பாராட்டு என்பதை ‘மனதால் உணர்ந்து’ அடக்கமாக இருப்பதே நன்மை பயக்கும். இதுவே, பதவி வரும்போதும்  பணிவுடன் இருந்து, நேர்மையாகச் செயல்படும் துணிவையும் தரும்.  
தன்னம்பிக்கை, தற்பெருமை என்ற இந்த இரு வேறுபட்ட குணங்களும் மனிதர்களிடம் இருப்பவைதான் என்றாலும், இவைகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளே மனிதர்களின் மனநிலையையும், தரத்தையும்  தீர்மானிக்கின்றன.  எனவே, மனநிறைவுடன் வாழ்வதற்குப் பண்பான குணங்களே பக்கபலமாக இருக்கும் என்ற சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவே  இந்தப் பதிவு.
 #  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *