திருமதி ஒரு வெகுமதி, யாருக்கு? Thirumathi Oru Vegumathi, Yaarukku?

ஒரு கதை சொல்லட்டுமா?
நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் முல்லா, அவர் ஒரு நாள் மதிய வேளையில், தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.  அப்போது, அந்த வழியாக வந்த அவருடைய நண்பர்  முல்லாவைப் பார்த்ததும், அவரிடம் பேசிக்கொண்டே அருகில் அமர்ந்தார்.  
தொடர்ந்து பேசிய அவர், முல்லாவிடம், “என் மனைவி எப்போதும் கோபமாகவே பேசுகிறாள்” என்றும், “எது பேசினாலும் சண்டையாகவே மாறுகிறது”.   “நிம்மதியே இல்லை”, என்றும் கூறி வருத்தப்பட்டார். 
இதைக் கேட்ட முல்லா, அவருக்குச் சில அறிவுரைகளைக் கூறினார்.  ஆனால் நண்பரோ அதில் திருப்தி அடையாமல் மீண்டும் புலம்பினார்.  இதைக் கண்ட முல்லா வீட்டின் உள்ளே இருந்த தன் மனைவியிடம் ஒரு விளக்குக் கொண்டு வருமாறு சொன்னார்.  அதைக் கொண்டுவந்த மனைவியிடம், தனக்கும், நண்பருக்கும் பால் கொண்டுவரச் சொன்னார்.  
சிறிது நேரத்தில் அவர் கொண்டுவந்த பாலை முல்லா அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார்.  ஆனால், நண்பரோ  குடிக்க முடியாமல் முகம் சுளித்தார்.  அதோடு முல்லாவைப் பார்த்து “நீங்கள் இதை எப்படி குடிக்கிறீர்கள்” என்று ஆச்சரியமாகக் கேட்டார். 
பாலைக் குடித்து முடித்த முல்லா, “குடும்பம் என்றால் இதுதான், பட்டப்பகலில் நான் விளக்குக் கேட்டபோது என் மனைவி அமைதியாகக் கொண்டுவந்து கொடுத்தார்.  அவர் சர்க்கரை அதிகமாகப் போட்ட பாலைக் குறை சொல்லாமல் நான் குடித்தேன்.  
“ஒருவருக்கொருவர் குறை கண்டுபிடித்துத் தாழ்த்திக் கொள்வதைவிட, அனுசரித்து வாழ்வதுதான் அமைதியைத் தரும்” என்று முல்லா கூறினார்.  ஒவொன்றிலும் குறை கூறாமல், வீண் வாதங்கள் செய்யாமல் இருப்பதன் அவசியத்தை விளக்கி நண்பரை அனுப்பி வைத்தார்.
இந்த எளிமையான கதை அனைவருக்கும் தெரியும்.  ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்று யோசிக்கிறீர்களா?  
இல்லறத்தின் இனிமை என்பது மனதின் நிதானத்தைப் பொருத்து உள்ளது என்பதை நினைவுப்படுத்தவே இந்தச் சிறிய கதை. 
மேலும், இதில் இன்னொரு கருத்தும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 1.முல்லா, இந்தப் பட்டப்பகலில்  விளக்குக் கேட்கிறார் என்றால் அதில் ஏதாவது காரணம் இருக்கும், என்று ஒரு மனைவியாக கணவனிடம் உள்ள நம்பிக்கையும், 
2.தன் மனைவியின் கவனக்குறைவை அடுத்தவர் முன்பு வெளிக்காட்ட வேண்டாம், என்ற கணவனின் கவனமும், இதில் வெளிப்படுவதாகக் கருதுகிறேன்.  
குடும்பத்தில் மாறுபட்ட சிந்தனைகள் இருக்கலாம்.  வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் என்பது,  ஒருவருக்கொருவர் நம்பிக்கையும், மரியாதையும் வெளிப்படுத்துவதுதான் உண்மையான அன்பு.  இதுவே இல்லறத்தின் சிறப்பு.  
உரிமையும், கடமையும்:
நாம் வேலை செய்யும் இடங்களில், வெளி உலகத்தில், தெரிந்தவர், தெரியாதவர், பிடித்தவர், பிடிக்காதவர் என்று அனைவரையும் பொறுத்துக் கொள்கிறோம்.  அவர்களிடம் நாம் மரியாதையும், அன்பையும் காட்டுகிறோம்.  சிறு உதவிக்கு நன்றி தெரிவித்தும், சிறு சங்கடத்துக்கு வருத்தம் தெரிவித்தும், எப்போதும்  நாகரிகமாக நடந்து கொள்கிறோம்.  
ஆனால், நமக்காக  நம் வீட்டில் இருக்கும் உறவுகளிடம், அவ்வாறு நடந்து கொள்கிறோமா?  Taken for granted. என்று ஆங்கிலத்தில் கூறுவது போல அனைத்தையும் நமக்கான உரிமைகளாக மட்டும் தானே பார்க்கிறோம்.  நம்முடைய உரிமைகளை மதித்து, நமக்காக அனுசரித்து வாழும் குடும்பத்தினருக்கு “அன்பான நன்றி” தெரிவிப்பதும் நமது கடமைதானே.
தன்னுடைய வாழ்க்கைத் துணையை, “என்னுடைய (இல்லறத்தின்) சிறந்த பாதி”, அதாவது better half என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுவது வழக்கம்.  தன் வாழ்க்கைத் துணையை அறிமுகப் படுத்தும்பொழுதே,  “சிறந்த துணை” என்று கூறும் நாகரிகம், உறவின் நேர்மறை சிந்தனையை வெளிப்படுத்தி, அவ்வாறு சொல்பவரின் உயர்வையே காட்டுகிறது.  உமையொருபாகனை அறிந்த நம் நாட்டில் இதை விளக்கவும் வேண்டுமோ?
வெற்றிக்குப் பின்னால்: 
ஒருவருடைய வெற்றிக்கு, அவருடைய மனஉறுதியும், விடாமுயற்சியும், அயராத உழைப்பும்தான் முதல் காரணம்.  அவ்வாறு வெற்றி பெற்ற பின்னர், அவர் பின்னால் நிற்பவர்களின் வரிசை மிக நீளமானதாக இருக்கலாம்.  ஆனால் வெற்றிக்காக உழைக்கும் காலத்தில், நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பொறுத்துக்கொண்டு, வெற்றிக்கும் துணையாக இருப்பவரையே,  வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் என்று கூறுகின்றனர்.  
இவ்வாறு, வெற்றி பெற்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் பல  இன்னல்களைச்  சந்தித்தபோது, அவர்களின் திருமதிகள், அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்று பார்க்கலாமா?
திருமதி செல்லம்மா:
சுடர் மிகு அறிவுடன் இருந்த பாரதியை திருமணம் செய்தவர்.  தன் கணவர்  பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திடச் செய்திடுவார் என செல்லம்மாவுக்கு முன்பே தெரிந்ததோ என்னவோ,  பாரதியின் அதிரடியான நடவடிக்கைகளுக்கு அமைதியாகவே இருந்தார்.  
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, என பன்முக பட்டாசு போல் இருந்தவரை,  பொறுமையின் சிகரமாய்த் தாங்கிக் கொண்டவர் செல்லம்மா.  
எட்டயபுரம் அரண்மனை, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி போன்ற இடங்களில் கிடைத்த வேலை எதுவும் நிரந்தரம் இல்லை. மேலும், ஆங்கிலேயரை எதிர்த்து, தனது பாட்டால் புரட்சி விதைகளைத் தூவி,  தன்  வாழ்க்கை மொத்தமும் சிக்கலாக்கிக் கொண்டவர் பாரதி.  
இப்படி அக்கினி போல் இருந்தவரின் சிந்தையில் குளிர்ந்த செல்லம்மாவை என்னவென்று புகழ்வது.  ஒருவேளை பாரதியின் சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்ப செல்லம்மா ஒத்துழைப்புத் தராது மறுத்திருந்தால், பாரதியால் இத்தனை உணர்ச்சிமிகு பாடல்களை எழுதியிருக்க முடியுமா?   
“பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா” என்று பாடிய பாரதியின் அத்தனை கவிதைகளிலும் செல்லம்மாவின் மவுனமான அனுமதி நிச்சயம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.  
“உணர்வு மிக்க கவிதைகளை எழுதியவர் பாரதி.  பாரதியின் உணர்வுகளை நன்கு படித்தவர் செல்லம்மா”.  காலங்கள் கடந்த பிறகும்  பாரதிக்குத் துணையாக மட்டுமே நிற்கும் திருமதி செல்லம்மா.  பாரதிக்குத் தன்  வாழ்நாளில்  கிடைத்த மிகப் பெரிய வெகுமதி என்பது உண்மைதானே?
திருமதி யசோதரா:
இளவரசியாகப் பிறந்து, வளர்ந்து, மனதிற்கு மிகவும் பிடித்த இளவரசன் சித்தார்தனை மணந்தவர் யசோதரா.  அன்பின் அடையாளமாகப் பிறந்த பச்சிளம் குழந்தை ராகுலன், ஆடம்பரமான அரண்மனை வாழ்க்கை, என்று இன்பமான வாழ்க்கையின் அனைத்தும் இருந்தது யசோதரைக்கு.  ஆனால் சித்தார்தனின் மனமோ உள்ளொளித் தேடலில் இருந்ததால் அரண்மனை வாழ்வைத் துறந்தார். 
இந்நிலையில் கையில் சிறு குழந்தையுடன் இருந்த யசோதரையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.  கணவனின் துறவறம் பெருங்கலவரத்தை அல்லவா ஏற்படுத்தியிருக்கும்.  
ஆனால், கலங்கும் மனதைக் கட்டுப்படுத்திய அந்தப் பெண்ணரசி துறவரத்திற்கும் தன் ஆதரவை அளித்து, தானும் ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார்.  காலப்போக்கில், யசோதரா சித்தார்த்தனின்  கடுமையான முயற்சியைப் புரிந்துகொண்டு, புத்தரின் துறவிற்குப் பெருமை  சேர்த்தார்.  
உலக மக்களின் அமைதியைக் காக்க போதிக்கும் புத்தரின் பாதங்களில் தனக்கும் அமைதியைத் தேடிக்கொண்டார்.   அரண்மனையின் ஓரத்தில் சிறிய குடில் அமைத்துப் புத்த பிக்குணியாகத் துறவு வாழ்க்கை மேற்கொண்டு எளிமையாக வாழ்ந்தார்.  தன் மகன் ராகுலனை வளர்க்கும் பெரும் பொறுப்பையும் தாங்கி பொறுமையாக வாழ்ந்தார்.  
போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் துறவு, பல்வேறு சோதனைகளைக் கடந்து உயர்ந்த நிலையை அடைந்தது.  புத்தர் ஆசிய ஜோதியாக ஒளிர்ந்தார்.  “இன்று உலகம் முழுவதும் புத்தரின் புகழ் பரவி இருக்கிறது.  அதனுள்ளே பொறுமையின் திலகமான யசோதரையின் புகழும் அடங்கி இருக்கிறது”.  துறவறமே ஆனாலும் அதிலும் தன்னால் இயன்ற அளவு ஒத்துழைப்புக் கொடுத்த இந்தத் திருமதி இரு கரம் கூப்பி வணங்க தக்கவர் தானே?
திருவாளரின் திருமதி:
இன்றைய உலகிலும்  எத்தனையோ செல்லம்மாக்களும் யசோதரைகளும் மிகமிக அமைதியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  செம்மண்ணில் விழுந்த மழைத்துளி உடனே அந்த நிலத்தின் நிறத்தைப் பெறுவது போல “திருமதி” என்ற நிலை வந்தவுடன் திருவாளரின் முன்னேற்றத்தைத் தன்னுடையப் பெருமையாகக் கருதி, கணவனுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து  முழு ஈடுபாட்டுடன் உழைப்பவள் பெண்.  
இத்தகைய மனைத்தக்க மாண்புடையவளை, மனைவியாகப் பெற்றவன்,  தன் பகைவர் முன்னாலும் நிமிர்ந்த வெற்றி நடை போடுவான் என்று வள்ளுவரும் கூறுகிறார்.  இத்தகைய திருமதி அந்தத் திருவாளருக்குக் கிடைத்த வெகுமதி.
 
இல்லறமே நல்லறம்: 
தன் கல்வி, திறமை, ஆளுமை என அனைத்து நிலைகளையும் தன் குடும்பத்தின் உயர்வுக்காகப்  பயன்படுத்தும் திருமதிகள்.  ஓய்வின்றி உழைத்துத் தங்கள் அங்கீகாரத்தை நிலைநாட்டும் அமைதியான இல்லத்தரசிகள். 
தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற 
சொற்காத்து சோர்விலாள் பெண்.
சோர்வில்லாத இவர்களின் உழைப்பும் தியாகமும் பண மதிப்பில் எடை போட முடியாது.  வரவுக்குள் செலவை அடக்கி, நேர்மையான சேமிப்பும் செய்து, குடும்பத்தினரின் மனதையும், உடல்நலத்தையும் ஆரோக்கியமாகக் காத்து, குழந்தைகளின் கல்வி, பழக்க வழக்கம், பண்பு இவற்றில் கவனம் செலுத்தி இல்லத்தை ஆளும் இல்லத்தரசிகள்.  கடமையில் தன்னைக் கரைத்து, குடும்பத்தின் தரத்தை உயர்த்தும் ஒவ்வொரு திருமதியும், அந்தக் குடும்பத்திற்குக் கிடைத்த வெகுமதிதான்.    
 
நாட்டின் கண்கள்:
 
தன் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த குடிமகன்களாக இருக்க, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியவள்.  வருமானம் என்பது குடும்பத்தின் மானத்தை உயர்த்த வருவது, என்று புரிந்து கொண்டு நடக்க வேண்டியவள்.  
மாற்றார் பொருளுக்கு ஆசைப்படாமல், லஞ்சம் வாங்காமல் வாழ்வதற்கு வழிகாட்டவேண்டியவள்.  ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தினர் யாரும் லஞ்சம் வாங்கக்  கூடாது என உறுதியாக இருந்தால் நாடே நேர்மையாக மாறும்.  அவ்வாறு முறையான வருமானத்தில் பெருமையாக வாழும் பெண்ணே இந்த நாட்டுக்குக் கிடைத்த வெகுமதி.
 
உலக நாயகிகள்:
 
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் 
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காணென்று கும்மியடி 
காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் 
காரியம் யாவினும் கைகொடுத்து 
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் 
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!
என்று, தங்கள் வாழ்க்கை முழுவதும் மனித குலத்தின் மாண்பை உயர்த்த பாடுபட்ட, பாடுபடும், பெண்கள், உலக வரலாற்றின் நாயகிகள்.  இவர்கள் தடைகளைத் தகர்த்து, தரணியில் தனிப்பாதை அமைத்தவர்கள்.  இந்தத் திருமதிகள், திரு – மதிகள்!  உலகிற்குக் கிடைத்த வெகுமதிகள்.
 
மாதவம் செய்த மாதர்:
 
ஒரு பெண் மகளாக, சகோதரியாக, மருமகளாக, மனைவியாக, தாயாக  என எத்தனையோ பரிமாணங்களை அடைகிறாள்.  அவளே, அன்பாகவும்,  பொறுப்பாகவும் தன் குடும்பத்தை  வழி நடத்துகிறாள்.  
தனித்துவமாக விளங்கும், ஆற்றல் மிகுந்த பெண்ணின் பகுத்தறிவுள்ள சிந்தனைகளும், செயல்களும் சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தைத் தரும் நிலையே அந்தத் திருமதிக்குக் கிடைத்த வெகுமதி.
#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *