மனதோடு சில நிமிடங்கள்: Manathodu Sila Nimidangal. Mindful Way.

மனதின் சக்தி:

மனம், நம்மோடு வளர்ந்து, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் ஒரு தோழமை.  இதுவே நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி.  இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைத்தையும் வேகமாகச் சிந்தித்து அவசர கதியில் இயங்குவதால், மனம் அடிக்கடி எண்ணங்களால் நிரம்பி விடுகிறது.  

செல்போனில் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால் தேவையற்றதை delete செய்தும், தேவையானதை save செய்தும், சுத்தம் செய்கிறோம்.  மனதையும் அதுபோல சுத்தம் செய்வதுதான் ஒரே வழி.  ஆனால் அது அத்தனை எளிதான விஷயமா. முயற்சி செய்துதான் பார்க்கலாமே!  

அமைதியான இடத்தில் அமர்ந்து தினமும் மனதோடு சில நிமிடங்கள் பேசுவோம். நம்மை நாம் சரிசெய்து கொள்ளவும், நேர்மறையான எண்ணங்களால் (சார்ஜ் செய்வது போல) மனதைப் பலப்படுத்தவும் நமக்கு சிலநிமிடங்கள் தேவைப்படும்.  இந்த  அமைதிப் பயிற்சியினால் கிடைக்கும் புத்துணர்ச்சி, அடுத்து வரும் சூழ்நிலைகளை, நாம் நம்பிக்கையோடு எதிர்கொள்ள தேவையான  சக்தியைத் தரும். 

மனதின் ஆற்றல்:

ஆற்றல் உள்ள மனதை முழுமையாக இயங்க விடாமல் சில தேவையற்ற பழக்கங்களால், பயனற்ற பொழுதுபோக்குகளால்  தேக்கப்படுத்துவது, வலிமைபெற்ற யானையை, மெல்லிய சங்கிலியால் ஒரே இடத்தில் கட்டுப்படுத்துவது போன்றதாகும்.  

மனவளர்ச்சியை  மேம்படுத்தும்  செயல்களே அறிவுத்திறனையும் வளர்க்கும் என்பதால், மனம், தன்னுள் எப்போதோ விழுந்த  எண்ணத்தை எப்போதும் ஊக்கப்படுத்தி, அதை வெற்றிகரமாகச் செயலாக்கும் வரை  ஓயாமல் தன் கடமையைத் தொடர்ந்து செய்யும் தன்மையுடையது.  

ஒரு தந்தை தன் குழந்தைகளுக்குக் கொடுத்த விளையாட்டுப் பொருள்,  ஒரு பெரிய குறிக்கோளுக்கு விதையாக அமைந்த வரலாறு இதற்குச் சான்றாக இருக்கிறது.  

ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் (Wilbur Wright மற்றும்  Orville Wright)  இருவருக்கும், அவர்களுடைய தந்தை கொடுத்த ஒரு விளையாட்டுப் பொருளைப்     பார்த்தவுடன்,   அதுபோல ஒரு பெரிய கருவி செய்து அதில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது. சிறுவயதிலேயே அவர்களுடைய மனதில் தோன்றிய அந்த எண்ணம் அவர்களுடனே தீவிரமாக வளர்ந்தது. 

அவர்கள் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும்,  மனம் தனது  குறிக்கோளை இறுகப்பற்றி ஊக்கப்படுத்தியது.  தொடர்ந்து  செய்த கடினமான முயற்சிகளால் இவர்களுடைய  எண்ணம் 1903ல் நிறைவேறியது.  இவர்கள் கண்டுபிடித்து, கட்டமைத்த, முதல் விமானம் Wright Flyer 852 அடி உயரத்தில் 59 வினாடிகள் பறந்தது. முதன்முதலில் விமானத்தில் பறந்த ரைட் சகோதரர்கள்,  பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே, என்று   மனதின் ஆற்றலை உலகிற்குக் காட்டினார்கள்.

தெளிந்த மனம்:

விமானம் என்றதுமே  அப்துல் கலாம் ஐயா அவர்களை நினைக்காமல் இருக்க முடியுமா.  பள்ளிப்பருவம் முதல் விமானியாக வேண்டும் என்ற அவருடைய  கனவு, நடைமுறையில்  நிறைவேறவில்லை.   இதனால்  அவர் மிகவும் மனம் வருந்தினார்.  ஆனாலும் அதற்காக அவர் சோர்ந்து போகவில்லை.   தோல்வி, வலி போன்ற உணர்வுகளைத் தன்னந்தனியே சந்தித்து, அதிலிருந்து மீண்டு, வெற்றி காணும் அளவுக்கு  மனதை அழகாகக் கையாளத் தெரிந்தவர்.  

ஒருகதவு அடைக்கப்பட்டால் மறுகதவு திறக்கும் என்ற நம்பிக்கையோடு மாற்று வழியில் சாதனைகள் செய்தார். செம்மையான மனம் இருந்தால் நமது எல்லையை நாமே தீர்மானிக்க முடியும் என்று உலகிற்கு உரக்கச் சொன்னார். 

இந்தியாவின் உயர்ந்த பதவிகள் அவரை வந்து சேர்ந்தன. அதைவிட உயர்ந்த பண்புகள் அவரிடம் நிலையாக நிறைந்து இருந்தன.  உயர்ந்த அறிவும், எளிய வாழ்க்கையும் தெளிந்த மனதால் அமையப்பெற்ற  ஒப்பற்ற மாமனிதர்.

தூய்மையான அன்பு:

மரத்திற்கு தேவையான நீரை, வேர் தேடி எடுத்துத் தருவது போல மனமும் நமக்குத் தேவையானவற்றை நம்மிடம் சேர்க்கும் வல்லமை உடையது. இத்தகைய வல்லமை கொண்ட நல்ல மனமும், அயராத உழைப்பும் இருந்தால் பயனுள்ள வகையில் வாழலாம்   என்று நன்கு  அறிந்தவர்  திம்மக்கா எனும் அம்மையார்.  

இவர் தனது கணவர்  சிக்கய்யாவுடன் சேர்ந்து கர்நாடகத்தின் ஹுலிகல் முதல் குடூரு கிராமம் வரையுள்ள நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு  நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் 385 ஆலமரங்களோடு, 8000 மரங்களை வரிசையாக நட்டு வைத்துள்ளார்.  இதனால் இவரை “சாலுமாரதா திம்மக்கா” என்று பெருமையாகக் கூறுகிறார்கள்.  

இந்த மரங்களை, பெற்றப் பிள்ளைகளைப்போலக் கவனித்து அந்தச் சாலையைப்  பசுமைச்  சாலையாக மாற்றியதால் இவரை “மரங்களின் தாய்” என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.  

மனதில் தோன்றிய நல்ல  எண்ணமும்,  அதைச் செயல்படுத்தும்  மனஉறுதியும் இருந்ததால், இவருக்கு உயர்ந்த பல விருதுகளுடன் பத்மஸ்ரீ  விருதும், ஊக்கமளிக்கும் பெண் என்ற பி.பி.சி. யின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.    “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்று குளிர்ச்சியாகச் சொல்லும் இந்தத்  தாயின் அன்பு,  தூய்மையான காற்றாக  நம்  சுவாசத்திலும்  கலக்கிறது.

மனதோடு பழகுவோம்:

மனம், தன்னுள்ளே அற்புதமான ஆற்றலைக் கொண்டுள்ளது.  இதைப்  புரிந்துகொண்டால் நமக்கு மேலும் பல தெளிவுகள்  கிடைக்கும்.  அமைதியான சிந்தனையின் பலனாக  வரும் சுதந்திரம், நமக்குத் தெளிவான மனஉறுதியை அளிக்கும். 

இதன் விளைவாக, இதுவரை தடையாக இருந்த காரணங்களை இனம்கண்டு அவற்றை விலக்க முடியும். மேலும், தன்னம்பிக்கையோடு சிறந்த முயற்சிகளுக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்து செய்வதற்கு ஊக்கமும் வரும்.

நமது மனம் நமக்கு  மகிழ்ச்சியைப் பரிசளிக்கவே எப்போதும் விரும்புகிறது.  இந்த மகிழ்ச்சி ஆக்கப்பூர்வமானதாக இருப்பதற்கு ஆற்றல் மிக்க எண்ணங்களே முக்கியமான காரணமாக இருக்கின்றன.  அடிப்படையில், இத்தகைய சிறந்த எண்ணங்களைப் பெறுவதற்கும், அவற்றை சிந்தனைகளாக வளர்ப்பதற்கும், மனதோடு சில நிமிடங்கள் அமைதியாகப்   பழகும் பயிற்சி நல்ல முன்னேற்றத்தைத் தரும்.  

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *