Laser-Buddha-Mountain
Discover the happiness in your mind.

மகிழ்ச்சியின் செயலி . Happy App.

செயலி:

வாழ்வியல் வசதிகள் எல்லாவற்றிற்கும் app பயன்படுத்துகின்ற இன்றைய உலகில், மனதின் உண்மையான மகிழ்ச்சியை உணர்வதற்கு உதவும்  செயலியாக மனவலிமை செயல்படுகிறது. 

மகிழ்ச்சி என்பது அமைதியான நீரோடை போல மனதில் தோன்றுகின்ற இயற்கையான உணர்வாக உள்ள நிலையில், மனவலிமை எனும் செயலி கூடுதலாக என்ன செய்கிறது?

1. பல்வேறு நிலையில் பணியாற்றுகின்ற சிந்தனைகள் உள்ள மனதில், இயல்பாகத் தோன்றுகின்ற மென்மையான மகிழ்ச்சியைத் தெளிவாக உணரச்செய்கிறது.

2. சந்திக்கும் சூழ்நிலைகளில் ஒளிந்துகொண்டிருக்கும் மகிழ்ச்சியின் வாய்ப்பை வெளிக்காட்டும் ஒளியாகச் செயல்படுகிறது. 

3. சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் உள்ள தைரியமாக வெளிப்பட்டு, அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் பலமாகத் துணைநின்று, நடைமுறைக்கு ஏற்ற மகிழ்ச்சியைத் தருகின்ற திறன் மிக்க செயலியாக இருக்கிறது.

1.மனம்:

மனதின் இயல்பான உணர்வாக இருக்கும் மென்மையான மகிழ்ச்சி என்பது, கல்லுக்குள் இருக்கும் அழகான சிலை போன்றது. 

அந்தச் சிலையின் அழகை மறைத்துக்கொண்டிருக்கும் தேவையற்ற உணர்வுகளை, எதிர்மறை சிந்தனைகளை, பழைய பாதிப்புகளைச் சிறப்பாக நீக்குவதற்கு சுயஒழுக்கம் எனும் மனவலிமை தொடர்ந்து பணிசெய்கிறது. 

இத்தகைய உறுதியான மனவலிமையே, மனதின் உள்ளிருக்கும் உண்மையான மகிழ்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது.

நேர்மறையான சிந்தனைகளை, ஏற்றுக்கொள்ள வேண்டிய மாற்றங்களை முன்னேற்றத்தின் வாய்ப்புகளாக எண்ணி எதிர்கொள்ளும் மனவலிமை சூழ்நிலையிலிருந்து மகிழ்ச்சியைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக update ஆகிறது.

மனிதனோடு சேர்ந்து அவனுடைய மகிழ்ச்சியின் தேவையும் வளர்கின்ற நிலையில், அதை கையாளுகின்ற மனவலிமையும் தொடர்ந்து வளர்வது ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.  

2.சூழ்நிலை:

சூழ்நிலைகளில் உள்ள வாய்ப்புகளில் எது தேவையானது, எது தேவையற்றது என்று உணர்ந்து, அதை துணிவோடு ஏற்பதற்கும் மறுப்பதற்கும் அவசியமான மனவலிமை விழிப்புணர்வின் வழியில் செயல்படுகிறது.

இவ்வாறு, அவசியமான வேலைகளைச் சுணக்கமின்றி கவனமாகச் செய்வதற்கும், செய்யக்கூடாத மற்றும் அவசியம் இல்லாத வேலைகளைச் சரியாக உணர்ந்து மறுப்பதற்கும், தேவையான மனவலிமையே உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது.

வளர்ச்சிக்கு உதவுகின்ற பழக்கங்களை, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவும், பயனற்ற, பாதிப்பை ஏற்படுத்துகின்ற, பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கும் உறுதியான மனவலிமை மிகவும் அவசியம்.

இதில், அவரவர் தனித்தன்மையை உணர்ந்து, நாசூக்கான அணுகுமுறையோடு கச்சிதமாகச் செயல்படுகின்ற மனவலிமை சூழலையும் மகிழ்ச்சியாக்கும்.   

3.சவால்:

சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும் மனவலிமையே, அந்தச் சூழ்நிலைகளை முறையாகக் கையாளவும், விளைவுகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் உதவுகின்றது.  இந்த மனவலிமையே திறன்மிக்க ஆளுமையின் மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது.

மாசுபட்ட, எதிரான சூழ்நிலையின் தன்மையை மாற்றமுடியாத நிலையிலும், தேவைக்கேற்ப மாஸ்க், தடுப்பூசி என பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வதைப்போல, சவாலான சூழ்நிலையின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளும் கவசமாகவும் செயல்படும் மனவலிமை ஆரோக்கியமான பாதுகாப்பைத் தருகிறது.

அறியாமை, இயலாமை, ஆணவம் போன்ற குறைபாடுகளினால் ஏற்படுகின்ற குழப்பமான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும், அதை தெளிவான சிந்தனையோடு அணுகவும், அதையே நேர்மறையான வாய்ப்பாக சுமுகமாக மாற்றவும் உதவுகின்ற மனவலிமையே அறிவுக்குத் துணையாகச் செயல்படுகிறது.

சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்த பாரதி, எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! என்று உள்ளுக்குள் மகிழ்ந்து பாடியதுபோல, சவாலான சூழ்நிலையின் அனுபவத்தையும் வளர்ச்சியின் வாய்ப்பாக, வாழ்க்கையின் மகிழ்ச்சியாகப் பார்ப்பதற்கு அசாத்தியமான மனவலிமை சாத்தியமாக வேண்டும்.

நடைமுறை வாழ்க்கையில் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கவனமாகக் கையாளும் நிதானமே உறவையும், நட்பையும் ஆரோக்கியமாகப் பேணுவதற்கு அவசியமான மனவலிமையாக உள்ளது.  

மகிழ்ச்சி:

அன்பு, நட்பு, கருணை, பொறுமை, பொறுப்பு, முடிவெடுக்கும் தன்மை, தைரியம், சுதந்திரம், கட்டுப்பாடு போன்ற பண்புகள் அனைத்துமே திடமான மனவலிமையின் உறுதியான வேர்கள். 

இந்த உறுதியான வேர்கள் தருகின்ற ஊட்டத்தில் வளமாக வளர்கின்ற தன்னம்பிக்கையே வாழ்க்கையின் பசுமையான அனுபவம் எனும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

நிலவைப் பார்த்து வளர்ந்த மனிதன், அந்த நிலவுக்கே சென்று நிழற்படம் எடுத்த வளர்ச்சி, மனவலிமையால் பெற்ற மகிழ்ச்சிக்குக் கிடைத்த சாட்சி. 

சூழலில் உள்ள காற்றைப் புல்லாங்குழல் வழியாக செலுத்துகின்ற முயற்சி குழலோசையாக வெளிப்பட்டு இனிமை தருகிறது.  அதுபோல, சூழ்நிலைகளின் சவால்களை மனவலிமையின் வழியாக செயல்படுத்தும் வாழ்க்கை சாதனையாக வெளிப்படுகிறது.

பாராட்டுகள், வெற்றிகள் எனும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில், அந்த வெற்றியைத் தாங்குகின்ற மனமுதிர்ச்சி, உடனிருக்கும் குழுவினரோடும், துணை நிற்கும் உள்ளங்களோடும் நேர்மையாகப் பகிர்ந்தளிக்கும் பண்பின் வெளிச்சமாகப் பரவி, அந்தச் சூழ்நிலையையே மகிழ்ச்சியாக்கும் மனவலிமை ஆகின்றது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற நிதர்சனத்தை உணர்ந்து, எந்நிலையிலும் நிதானமான மனநிலையோடு, முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து செயல்படுகின்ற மனவலிமையே எப்போதும் மகிழ்ச்சிக்குத் துணைநிற்கும் திறன் மிக்க செயலியாகச் செயல்படுகின்றது.

 

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *