இலக்கு:
‘ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மனிதர்களால் ஓடிக் கடக்க முடியாது’, என்று யாராவது கூறினால், இன்று அந்தக் கருத்து நகைப்புக்கு உரியதாகவே இருக்கும்.
ஆனால், 1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள்வரை உலகம் அப்படியே நம்பிக்கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. குறிப்பிட்ட அந்த நாளில் ரோஜர் பானிஸ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை, 3:59.4 என்ற நேர அளவில் கடந்த, அந்த ஒரு நிகழ்வு உலகத்தில் புது நம்பிக்கையை உருவாக்கியது.
‘Four minute barrier’ என்று உலகம் நம்பிக்கொண்டிருந்த அந்தத் தடையை முறியடித்த ரோஜர் பானிஸ்ட்டர் “மிராக்கல் மைல்” என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி சாதனைப் படைத்தார். ரோஜர் பானிஸ்டரின் இந்த இலக்கு ஏற்படுத்திய நம்பிக்கையே, பின்னாளில் பலரும் இத்துறையில் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைக்க வழிகாட்டியாக அமைந்தது.
நம்பிக்கை:
இதுபோலவே, முடியாது என்ற தவறான நம்பிக்கையை முறியடித்து, தங்களது கடுமையான முயற்சிகளின் மூலம் “முடியும்” என்ற நேர்மறையான நம்பிக்கையை உருவாக்கும் சாதனையாளர்களுக்காக உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இவர்கள் முன்னெடுக்கும் புதுமுயற்சிகள்தான் வருங்காலத்திற்கான புதிய பாதைகளை ஏற்படுத்தி நம்பிக்கையின் எல்லையை விரிவாக்குகின்றன.
நேரம் இல்லை, உதவி இல்லை, வழிகாட்டுதல் இல்லை, அனுபவம் இல்லை என்ற பல்வேறு காரணங்களைக் கூறுவதற்குச் சிறப்பான எந்த முயற்சியும் தேவையில்லை.
ஆனால், பழகிப்போன இந்தத் தடைகளைத் தகர்த்தெறிவதற்கு அசைக்க முடியாத தன்னம்பிக்கை அவசியம் தேவை. தன்னிடம் இருக்கும் நம்பிக்கையே வலிமையான ஆயுதம் என்று அறிந்தவர்களே, கடுமையான முயற்சிகளின் மூலம் பழைய தடைகளைக் கடந்து, புதிய பாதைகளுக்கு வழிகாட்டிகளாகத் துணிவோடு முன்னேறுகிறார்கள்.
சிற்பியின் திறனுக்கு ஏற்ப, கல்லில் மறைந்திருக்கும் கலைவடிவம் வெளிப்படுவதுபோல, தீவிரமான முயற்சிகளுக்கு ஏற்ப சூழ்நிலையில் ஒளிந்திருக்கும் வாய்ப்புகள் வெளிப்படுகின்றன.
தங்களுடைய சூழலில் அத்தகைய வாய்ப்புகளே இல்லாத நிலையிலும், “புதிய வாய்ப்புகளை உருவாக்கி சூழலை நம்பிக்கையானதாக மாற்றுபவர்கள் வரலாறு படைக்கிறார்கள்“.
முழுநம்பிக்கையோடு தீவிரமாக செய்யும் முயற்சியே, புதிய இலக்கிற்கு அளவுகோலாக இருக்கிறது. விரிவாக்கப்பட்ட இந்த இலக்கின் எல்லை அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
# நன்றி.