ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அறிவும், அழகும் உள்ள தைரியமான மகள் இருந்தாள். அந்த வணிகன் ஒருமுறை தன்னுடைய வியாபாரத்திற்குத் தேவைப்பட்ட பெரிய தொகையை அந்த ஊரில் இருந்த செல்வந்தனிடம் கடனாக வாங்கியிருந்தான். ஆனால் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவனால் திருப்பித்தர முடியவில்லை.
இதனால் செல்வந்தன், அந்த ஊரின் வழக்குமன்றத்தில் வணிகன் மீது முறையிட்டான். வழக்கை விசாரித்தப் பெரியவர்கள், வணிகனால் இப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை இருப்பதால், வேறு ஏதாவது ஒரு வகையில் சமரசம் செய்துகொள்ளுமாறு கூறினார்கள்.
உடனே அந்தச் செல்வந்தன், “வணிகன் தன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தால் கடனைத் திருப்பித்தர வேண்டியதில்லை”, என்றான். ஆனால் வணிகனின் மகள் அந்தச் செல்வந்தனை மணக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாள்.
இந்தக் குழப்பமான நிலையில் என்ன செய்வது என்று அனைவரும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் தரை முழுவதும் கருப்பும் வெள்ளையுமாகச் சிறுகூழாங்கற்கள் பரவியிருந்தன.
அப்போது அந்தச் செல்வந்தன் இந்தப் பிரச்சனைக்குத் தன்னிடம் ஒரு தீர்வு இருப்பதாகக் கூறினான். கருப்பு, வெள்ளை என இரண்டு கற்களைத் தான் ஒரு பையில் போடுவதாகவும், பின்னர் வணிகனின் மகள், அந்தப் பையிலிருந்து வெள்ளைக் கல்லை எடுத்துவிட்டால், அவள் தன்னை மணக்க வேண்டியதில்லை. ஆனால் கருப்பு நிற கல்லை எடுத்துவிட்டால் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறினான்.
மேலும் ‘இந்த ஒரே ஒரு வாய்ப்பிற்கு வணிகனின் மகள் சம்மதித்து, அவள் எடுக்கும் கல் எதுவாக இருந்தாலும் வணிகன் தன்னிடம் வாங்கியப் பணத்தை முழுவதுமாகத் தள்ளுபடி செய்துவிடுவதாகவும்’ கூறினான்.
இது மிகவும் நல்ல யோசனை, என்று வழக்கு மன்றத்தின் பெரிய மனிதர்களும் ஒத்துக்கொண்டார்கள். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தைகளை வணிகனின் மகள் விழிப்போடு கவனித்துக்கொண்டிருந்தாள். இப்போது செய்யப்படும் சிறிய செயலும் தன் வாழ்க்கையைத் திசைமாற்றும் என்பதால், சூழ்நிலையில் இருக்கும் வாய்ப்பை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பெரியவர்களின் முன்பாக அமைதியாக நின்றிருந்த அவளை, சுற்றியிருந்தவர்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட செல்வந்தன், சட்டென்று கீழேயிருந்து இரண்டு கருப்புக் கற்களை எடுத்துத் தான் வைத்திருந்த பையில் போட்டுவிட்டான்.
செல்வந்தனின் சதிச்செயலைக் கவனித்த வணிகனின் மகள், இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்று சிந்தித்தாள். சதியை மதியால் வெல்ல வேண்டும் என்ற உறுதியோடு இருந்த அவளிடம் பையை நீட்டிய செல்வந்தன், “உன் வாழ்க்கையை நீயே தேர்ந்தெடு”, என்று கூறினான்.
இரண்டில் எதை எடுத்தாலும் அது கருப்புக் கல்லாகவே இருக்கும் என்ற நிலையில், அவள் கையைப் பையினுள் விட்டு ஒரு கல்லை எடுத்தவள், எடுக்கும்போதே கை நழுவி விட்டதுபோல அந்தக் கல்லைக் கீழே போட்டுவிட்டாள். தரை முழுவதும் கருப்பு வெள்ளைக் கற்களே இருப்பதால் இந்தப் பெண் கீழே போட்டது எந்தக் கல் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஊர் பெரியவர்கள், “வணிகனின் மகள் எந்தக் கல்லைத் தேர்ந்தெடுத்தாள் என்று தெரியவேண்டுமானால், அவள் எடுக்காமல் விட்ட, பையில் இருக்கும் கல்லைப் பார்க்க வேண்டும்” என்று கூறியபடியே, அதை எடுத்துப் பார்த்தார்கள். அது கருப்புநிறக் கல் என்றவுடன் “இந்தப் பெண் வெள்ளைநிறக் கல்லைதான் தேர்ந்தெடுத்தாள்” என்று அவர்கள் (கண்டுபிடித்துக்) கூறினார்கள்.
சூழ்நிலை சிக்கலாக இருந்தாலும் அந்தச் சூழலுக்குள் மூழ்கிவிடாமல், விழிப்போடு இருந்தால் சிக்கலிலிருந்து தப்பும் வழி கண்ணுக்குத் தெரியும் என்பதை உணர்த்தும் கதை. சதி செய்பவர்களின் சூழ்ச்சியைக் கண்டு மற்றவர்கள் அதிர்ச்சியுறும் நேரத்திலேயே, அவர்கள் அதைச் செய்துவிடுகிறார்கள். எனவே, சதியைச் சாமர்த்தியமாக வெல்ல எப்போதும் முழுமதியே வேண்டும் என்று இந்தக் கதை உணர்த்துகிறது.
தோற்பதற்குத் தயாராக இருக்கும் மனநிலையே, சூழ்நிலையில் மூழ்கிவிடுவதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லாச் சூழ்நிலையிலும் ஒளிந்திருக்கும் நல்ல வாய்ப்பைத் தேடும் மனநிலையே, வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதற்குச் சமயோசிதப் புத்தியும், துரிதமாகச் செயல்படும் நுண்ணறிவும் வெல்லும் கருவிகளாக உதவுகின்றன.
ஓடை, ஆறு, கடல் என்ற பலவிதமான சூழ்நிலைகளின் தன்மைக்கு ஏற்ப வாழ்க்கையும் பரிசல், படகு, கப்பல் என்று வளர்ந்து வெவ்வேறு அனுபவங்களைத் தருகிறது.
கப்பல் எனும் வாழ்க்கை, கடல் எனும் சூழ்நிலையைத் தவிர்க்க முடியாது. அந்தக் கடலில், மோதும் அலைகள், உறைந்த பனிப்பாறைகள், சூறாவளி காற்று, கொந்தளிப்பு, சுனாமி, ஒளிந்திருக்கும் மலைகள், திமிங்கலங்கள் என்று எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகவும் இருக்கும்.
சில கப்பல்கள் தங்கள் பயணத்தில் பேரலைகளை மட்டும் சந்திக்கலாம். சில கப்பல்கள் சூறாவளியைக் கடந்து செல்வதே பயணமாக அமைந்திருக்கலாம். சாதாரண அலைகளை எதிர்கொள்வது போல எளிதாக நினைத்து சூறாவளியை எதிர்கொள்வது எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோல சூறாவளியை எதிர்கொள்வதுபோல சாதாரண அலைகளுக்குச் (over react ஆக) செயல்படுவதும் முறையாக இருக்காது.
எனவே, தனிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலும் அவர்கள் சந்திக்கும் சவால்களின் தன்மைக்கு ஏற்ப, Presence of Mind உடன், அவற்றை முறையாக எதிர்கொள்வதுதான் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அணுகுமுறையாக இருக்கும்.
இவ்வாறு (தவிர்க்க முடியாத, இடையூறுகள் நிறைந்த) கடல் எனும் சூழ்நிலையில் பயணிக்கும் கப்பல், “அந்தச் சூழலில் மூழ்கிவிடாமல் பாதுகாப்பாகப் பயணிப்பதுதான்” வெற்றிகரமான வாழ்க்கையாகும்.
இவ்வாறு வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலைகளுக்குள் மூழ்கிவிடாமல் காப்பதற்குத் தெளிவான சிந்தனை, விழிப்புணர்வு, சமயோசிதம், துரிதமான செயல்பாடு, பொருத்தமான எதிர்வினை ஆகிய வழிமுறைகள் இருப்பதாக சான்றோர்கள் பல்வேறு விதமான கதைகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள்.
# நன்றி.