தயக்கம்:
மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவும் தயாராக இருப்பார்கள். ஆனாலும், ஒருசிலரின் மனதில் உள்ள தயக்கம் அவர்களை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருக்கும்.
இதுவே அவர்களுடைய நல்ல எண்ணங்களைச் செயலாக்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும். இந்தத் தயக்கம் எனும் அடிமை சங்கிலியைத் தகர்த்து எறிவதற்குத் “துணிவு” தான் தகுந்த வலிமையான ஆயுதம்.
துணிவு;
1. மனதில் இருக்கும் எண்ணங்களைச் செயல் வடிவமாக வெளிப்படுத்தும்.
2. சாக்குப்போக்குச் சொல்லாமல் சவால்களை எதிர்கொள்ளும்.
3. மனஉறுதியை அதிகப்படுத்தும்.
4. வாய்மைக்கு வழிகாட்டும்.
5. நெஞ்சினில் துணிவு இருந்தால் நிலவுக்கும் போய்வர முடியும்.
அச்சமும், அறிவும்:
அச்சம் என்பது மடமை என நினைத்து அடாதச் செயல்களைச் செய்தல் கூடாது.
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.”
அதாவது, “தீமை விளைவிக்கும், மனசாட்சியற்ற, செய்யக்கூடாத செயல்களைச் செய்வதற்கு அஞ்சி, அதைச் செய்யாமல் இருப்பவர்கள் அறிவுடையவர்கள்“, என்று வள்ளுவர் கூறுகிறார்.
உழைப்பு இல்லாத செல்வம். மனசாட்சி இல்லாத இன்பம். பண்பு இல்லாத அறிவு. நேர்மை இல்லாத வியாபாரம். மனிதத் தன்மை இல்லாத அறிவியல். தியாகமும் அன்பும் இல்லாத வழிபாடு. கொள்கை இல்லாத அரசியல் ஆகிய, (எப்போதும் செய்யக்கூடாத) ஏழு பாவங்களை மனதாலும் நினையாமல் இருப்பதுதான் “உண்மையான வீரம்“.
எனவே, மனதில் தோன்றும் அச்சம் எத்தகையது என்று நிதானித்து உணர வேண்டும். எப்போதும் நல்ல செயல்களுக்கு மட்டுமே மனதில் இடம் தர வேண்டும். “செயலின் நேர்மையே மனதின் துணிவுக்குத் துணை நிற்கும்”.
அச்சம் தவிர்:
அனைவருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மையான செயல்களைச் செய்யும்போது, தோல்விகளை நினைத்தோ, தடைகளை நினைத்தோ, மனதில் உருவாகும் இருள் போன்ற அச்சத்தைப் போக்க துணிவு என்னும் ஒளி வேண்டும்.
தவறு நேர்ந்து விடுமோ என்ற எண்ணமே அச்சமாக மாறி, அதுவே தயக்கமாக மனதில் தேங்கி விடுகிறது. அச்சம் தோன்றும்போது மனதைக் கூர்ந்து கவனித்து, “கூடுதல் கவனத்தோடு” விழிப்புணர்வுடன் செயல்படுவதே அச்சத்தைப் போக்கும் சரியான வழியாகும்.
தோல்விகளைச் சந்திக்க அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தோல்வி என்பது பிரச்சனைகளால் உருவாவதைவிட பெரும்பாலும் அந்தப் பிரச்சனைகளைக் கண்டு பயப்படுவதால்தான் உருவாகின்றன.
மேலும், தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டு, சரியான முறையில் உழைத்து வெற்றி பெறுவதற்கும் துணிவுதான் துணையாக உள்ளது. இதனால்தான் “துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை” என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.
Comfort Zone என்று சொல்லக்கூடிய (ஏற்கனவே இருக்கும்) பாதுகாப்புச் சூழ்நிலையில் உள்ள பிடிப்பே அடுத்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்குத் தயக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. “இழப்பதற்கு வேறொன்றுமில்லை தயக்கத்தைத் தவிர” என்று நினைப்பவர்கள்தான் துணிந்து முன்னேறி செயல்பட முடியும்.
பெரும்பாலும் அச்சத்தின் விளைவாகவே செயல்கள் உறைந்து போகின்றன. இதன் காரணமாகவே பிரச்சனைகளில் இருந்து தப்பிஓட தோன்றுகிறது. மனதில் துணிவு கொண்டவர்களே எதிர்த்து நின்று போராடும் வல்லமையைப் பெறுகின்றனர். மேலும், எண்ணியதை எண்ணியவாறு திறம்பட செய்து முடிக்கின்றனர்.
அணுகுமுறையே உயர்வு:
வாழ்க்கையின் ஆரம்பமே எதிர்நீச்சலாக அமைந்த “நிக் உஜிசிக்” (Nick Vujicic) என்ற ஆஸ்திரேலிய இளைஞர், தன்னம்பிக்கையே தனது கைகள், துணிச்சலே தனது கால்கள் என்று வாழ்ந்து காட்டுகிறார். தன்னிடம் இல்லாததை நினைத்து உறைந்து போகாமல், இருப்பதைக் கொண்டு வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொண்டவர்.
மனஉறுதியும், அன்பும் நிறைந்த தன் பெற்றோரின் வழிகாட்டுதலால், படித்துப் பட்டம் பெற்று, நீச்சல், ஓவியம், போலோ போன்ற விளையாட்டுகளையும் திறமையாக விளையாடுகிறார். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று வாழ்ந்து காட்டுகிறார். தன்னுடைய தன்னம்பிக்கையையும், துணிவையும் கொண்டு உலக மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.
தன்னைப் போலவே சவால்களை சந்திக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பையும் உருவாக்கி நடத்துகிறார். “Attitude is Altitude” என்பதையே தன்னுடைய தாரக மந்திரமாகக் கொண்டுள்ள நிக் உஜிசிக் துணிவின் மொத்த உருவமாகக் காட்சித் தருகிறார்.
வெற்றியின் திறவுகோல்:
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி,
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்,
கருமமே கண்ணாயினார்”.
ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர்கள் உடல் வருத்தம், பசி, தூக்கம், மற்றவர் தனக்குச் செய்யும் இடையூறுகள், உழைக்கும் காலநேரம், அவமரியாதை போன்ற எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். தாம் மேற்கொண்ட வேலையை முடிக்கும்வரை “கருமமே கண்ணாக உழைப்பார்கள்”, என்று வெற்றியை நோக்கி உழைப்பவர்களின் குணத்தை நீதி நெறி விளக்கம் கூறுகிறது.
இவ்வாறு, நோக்கத்திற்காக உழைப்பவர் தாம் சந்திக்கும் இடையூறுகளை, துணிவு கொண்டு துரத்த வேண்டும். “துணிவு எவ்வளவு வலிமையானதோ வெற்றியும் அவ்வளவு பெரியதாக இருக்கும்”.
சாதகமான சூழ்நிலைக்காகக் காத்துக்கொண்டிருக்காமல், இருக்கும் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, முன்னேறி நடைபோட வேண்டிய காலம் இது.
நமக்கான வெற்றிகள் விளையும் போது நிச்சயம் நம்மை வந்து சேரும். அதற்கான உழைப்பைச் சரியான முறையில் விதைத்துக்கொண்டே இருப்போம். மற்றவர் பாராட்டுகளோ, விமர்சனங்களோ நம்மை பாதிக்காத வகையில் நம் கடமையை நேர்மையாகச் செய்வோம். இந்தத் துணிவு தான் நம் வாழ்க்கையை என்றும் முன்னோக்கி செலுத்த உதவும்.
# நன்றி.