மாற்றுச் சிந்தனை:
வயதான பெண்மணி ஒருவர் தான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்றார். அங்குத் தனக்கான அழைப்பு எண் அறிவிக்கப்பட்டதும், கவுன்டரில் இருந்த காசாளரிடம், தன்னுடைய கணக்கில் இருந்து ஐந்நூறு ருபாய் எடுப்பதற்காகப் பூர்த்தி செய்யப்பட்டச் சீட்டைக் கொடுத்தார்.
காசாளர் அந்த வயதான பெண்மணியை, வெளியே உள்ள ATM ல் பணம் எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அதற்கு அந்தப் பெண்மணி தனக்கு ATM ல் பணம் எடுப்பதில் சவுகரியம் இல்லை, அதனால் எப்போதும்போல வங்கியிலேயே கொடுக்கும்படி கேட்டார்.
ஆனால் அந்தக் காசாளர், ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும்தான் வங்கியில் தரமுடியும், எனவே நீங்கள் இங்கிருந்து நகருங்கள் என்று அதட்டலாகக் கூறினார்.
அப்படியானால் தன் கணக்கில் உள்ள பணம் மொத்தமும் கொடுத்துவிடுங்கள் என்று அந்தப் பெண்மணி கேட்டார். அந்தக் காசாளரும் இவருடைய கணக்கில் மொத்தமே ஐந்தாயிரம் ரூபாய்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு அவருடைய வங்கிக்கணக்கை அலட்சியமாகப் பார்த்தார்
ஆனால், அவருடைய கணக்கில் மிகப் பெரிய தொகை இருப்பு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனே அவர், மொத்தப் பணத்தையும் இன்றே வங்கியால் கொடுக்க முடியாத நிலையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார்.
இப்போது அந்த வயதான பெண்மணி தன்னுடைய கணக்கிலிருந்து ரூபாய் ஐந்தாயிரம் எடுப்பதற்கான சீட்டைக் கொடுத்தார். அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அதிலிருந்து ஐந்நூறு ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு, மீதமிருந்த நான்காயிரத்து ஐந்நூறு ரூபாயை மீண்டும் சேமிப்புக் கணக்கில் சேர்த்தார்.
வங்கியின் விதிமுறைகளையும் மீறாமல், தனக்கும் சிரமம் இல்லாமல் சமயோசிதமாக யோசித்து, செயல்பட்ட அந்த வயதான பெண்மணியின் சாமர்த்தியம் புன்முறுவலை வரவழைக்கிறது. மேலும், பணத்தின் இருப்புக்கு ஏற்றபடி தன் இருப்பை மாற்றிக்கொண்ட காசாளரின் அணுகுமுறையை அவரே உணரும்படி சத்தமில்லாமல் சுட்டிக்காட்டியப் பாங்கும் நுணுக்கமான சிந்தனையைக் காட்டுகிறது.
பணிச்சுமையைக் குறைக்கவும், எளிய பயன்பாட்டுக்காகவும் புதிய நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. சில நேரங்களில் விதிவிலக்காக, ஒரு சாராருக்கு மட்டும் செல்வாக்கின் அடிப்படையில் அனுசரிக்கப்படும் சில செயல்பாடுகள், மனிதாபிமான அடிப்படையில் எளிய மக்களுக்கும் உதவும் வகையில் அனுசரிக்கப்பட்டால் அது நடுநிலையான அணுகுமுறையாக இருக்கும்.
மூடியிருக்கும் எல்லாக் கதவுகளும் திறக்கக் கூடியவைதான். மறுக்கப்படும் எல்லா உரிமைகளும் பெறக்கூடியவைதான். எங்கும் முழுமையான பலனைப் பெறுவதற்குத் தெளிந்த சிந்தனையும், நிதானமான அணுகுமுறையும்தான் அவசியம் என்று இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
# நன்றி.