வாய்ப்பே வரம்:
ஒரு ஊரில் வீரன், சூரன் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருநாள் இருவரும் தங்களுடைய குதிரைகளில் காட்டுவழியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். மாலை நேரம் ஆகிவிட்டதால் தங்கள் குதிரைகளுக்குத் தேவையான உணவும், நீரும் கொடுத்துவிட்டு, இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தார்கள். பிறகு, கொண்டுவந்த உணவை அருந்திவிட்டுப் பயணக்களைப்பில் இருவரும் நன்றாக உறங்கினார்கள்.
அதிகாலை வேளையில் திடீரென்று வித்தியாசமான சத்தம் கேட்டு இருவரும் பதட்டமாக விழித்தார்கள். குதிரைகள் வலியில் காலை உதறியபடி மிகுந்த சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
என்ன ஆயிற்று என்று புரியாத இருவரும், குதிரைகளின் அருகில் சென்று பார்த்தபோது அவற்றின் உடலில் காட்டு விலங்கு தாக்கிய காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அதைப் பார்த்ததும் இருவருக்குமே மனம் பதைத்தது.
குதிரைகளை எந்த விலங்கு காயப்படுத்தியது என்று தெரியவில்லை. அந்தக் காயத்தை எப்படி ஆற்றுவது என்றும் தெரியவில்லையே என்று பதட்டத்துடன் இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அப்போது சிறிது தூரத்தில் ஒரு குடில் இருப்பதைக் கண்டார்கள். இருவரும் அதன் அருகில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஒரு மரத்தடியில், குருவும், சீடர்கள் சிலரும் இருந்தார்கள். இரு நண்பர்களும் குருவை வணங்கி, நடந்ததைக் கூறி, தங்களுக்கு நன்மை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.
குரு அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார். பின்னர் அவர்களிடம், “கண்களை மூடிக்கொண்டு, இப்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதாரக் கேளுங்கள்” என்றார்.
அவர் சொன்னபடியே இருவரும் மனதார வேண்டினார்கள். அப்போது, திடீரென்று சூரன் எதிரில் காட்டுநாய் ஒன்று பாய்ந்து வந்தது. அதைக் கண்டு திகைத்த சூரன், உடனே சுதாரித்து விலகிக் கொண்டான். நண்பர்கள் இருவரும் போராடி அந்தக் காட்டுநாயை அங்கிருந்து விரட்டினார்கள்.
இதை மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த குரு, அவர்களைப் பார்த்து, “இருவரும் மனதார வேண்டியது என்ன?” என்று கேட்டார்.
“குதிரைகளின் காயங்கள் எல்லாம் குணமாகி, அவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்” என, தான் நினைத்ததாக வீரன் கூறினான்.
அவ்வாறு கூறும்போதே, சற்று தூரத்தில் இருந்த குதிரைகளைப் பார்த்தான். அங்கு, சீடர்கள் இருவர் பச்சிலையை வைத்து, குதிரைகளுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருப்பதைக் கவனித்தான்.
அப்போது சூரன், குருவின் கேள்விக்கு, “குதிரைகளைக் காயப்படுத்திய விலங்கு எது என்று தெரிந்தால் அதை ஒரு வழி செய்து விட வேண்டும்”, என தான் நினைத்தாகக் கூறினான்.
தங்களுடைய ஆழ் மனதில் எதை மனதார நினைத்தோமோ அதுவே செயலாக நடக்கிறது என்று இருவருக்குமே அப்போதுதான் புரிந்தது. இந்த நிகழ்வின் மூலம், ஆழ்மன எண்ணங்களின் வலிமை என்னவென்று உணர்த்திய குருவை பணிந்து வணங்கினார்கள்.
உண்மையான நட்போடு இருக்கும் நண்பர்களைப் பார்த்த குரு, “பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி நம் எண்ணங்களுக்கு உண்டு. அதுபோலவே தேவையற்ற சூழலை உருவாக்கும் தன்மையும் அதற்கு உண்டு”.
“வீரனின் எண்ணம் பிரச்சனையிலிருந்து வெளிவரும் வழியாக இருந்தது. சூரனின் எண்ணத்தில் இருந்த கோபம், அவனை மட்டுமல்லாமல் வீரனையும் சேர்த்தே பாதித்தது”.
“எனவே, கிடைக்கும் வாய்ப்புகளை எதிர்மறை உணர்வுகளுக்கு வீணாக்காமல், நேர்மறையான முன்னோக்கிய நகர்வுகளுக்குப் பயன்படுத்துவதே ஆக்கபூர்வமான சிந்தனையாக இருக்கும்”.
“வாழ்க்கையின் போக்கில் தோன்றும் சவால்கள், பிரச்சனைகள் போன்றவற்றில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் எண்ணங்களைச் செலுத்தி, சூழ்நிலையை உணர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் வாழ்க்கையின் வரமாக அமையும்”. என்று குரு கூறினார்.
இதைக் கேட்ட சூரன், எண்ணங்களின் வலிமை தெரியாமல், இதுநாள் வரை தானே தனக்கு எதிரியாகச் செயல்பட்டதை உணர்ந்தான். தன்னுடைய தவறால் மற்றவர்களும் பாதித்திருப்பதை நினைத்து வருந்திய சூரனை, வீரன் நட்புடன் சேர்த்துக்கொண்டான்.
உண்மையைப் புரிந்துகொண்டு, மனம் தெளிவடைந்த நண்பர்களை, “நல்ல எண்ணங்களால் அனைவருக்கும் நன்மைகள் செய்து, நன்மைகள் பெற்று, வளத்துடன் வாழ்க”, என குரு வாழ்த்தினார்.
ஒவ்வொரு வினாடியின் சூழ்நிலையிலும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகின்றன. அவற்றில் நேர்மறையான வாய்ப்புகளை மனதார உணர்ந்து தேர்ந்தெடுப்பதுதான் முதல்நிலை வெற்றியாக வாழ்க்கையை வடிவமைக்கிறது. இந்த வாய்ப்புகளை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தும்போது வாழ்க்கையே வரமாகிறது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
# நன்றி.