கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

 செல்வத்துள் எல்லாம் தலை “. 

அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும்.  இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின்  அருமை தெரிந்து, அதை நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?

தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே குழந்தையின் காதுகள் கேட்கத் துவங்கி விடுகின்றன.  அவ்வாறு கேட்கப்படும் அந்த ஒலிகள் குழந்தையின் நினைவு அடுக்குகளில் பதிவு செய்யப்படுகின்றன என்று இன்றைய அறிவியல் கூறுகின்றது.  இதையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நம் இதிகாசக் கதைகளும் கூறியிருக்கின்றன.

நம்முடைய முயற்சி ஏதும் இல்லாத சமயத்திலும், தூங்கும் நேரத்திலும், தன் கடமையில் தூங்காதிருக்கும் செவியின் வாசல்  இருபத்திநான்கு மணி நேரமும் திறந்தே இருக்கிறது.  வேண்டியது, வேண்டாதது என்ற வேறுபாடு ஏதுமின்றி, காற்றில் கலந்து வரும் ஒலிவடிவங்கள் செவிவாசல் வழியே ஒலித்தொகுப்புகளாக உள்ளே செல்கின்றன.

இவ்வாறு, தணிக்கையின்றி நேரடியாகத் தாக்குகின்ற ஒலிவடிவங்களில், உள்வாங்க வேண்டியதையும், உதிர்க்க வேண்டியதையும் அறிந்து, ஒவ்வொரு சூழலையும் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அத்தகைய விழிப்புணர்வு இல்லாத, வளரும் பருவத்தில் உள்ள மென்மையான குழந்தைகள் வன்மையான, தணிக்கையற்ற வார்த்தைகளால் பாதிப்படைந்து, தங்களுடைய குழந்தைத் தன்மையை இழக்கிறார்கள்.  மிச்சமிருக்கும் மனிதத் தன்மையைக் காப்பாற்றுவதற்குத் திறந்தே இருக்கும் அவர்களுடைய காதுகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.

நம் கவனத்திற்கு அப்பாற்பட்ட தூரத்தில் எங்கோ மெலிதாக ஒலிக்கும் ஒரு பாடலை, வாய் தன்னையறியாமல் முணுமுணுக்கிறது என்றால், நம் கவனத்தை ஈர்த்து செவிக்குள் வலுக்கட்டாயமாக நுழையும் ஒலிகளின்  அதிகாரம், மிக அதிகமாகவே இருக்கும் என்பது உண்மையல்லவா?

காற்றும், தண்ணீரும் போலவே வார்த்தைகளும் மாசுபட்டுப் போயிருக்கின்றன.  எங்கோ காற்றில் கலந்த வக்கிரமான வார்த்தைகளை வடிகட்டத் தெரியாமல் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் குழந்தைகளின் நிலையைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு வீட்டிற்கும், சமூகத்திற்கும் கட்டாயம் உள்ளது. 

“கற்றலின் கேட்டலே நன்று” என்று பெரியவர்கள் கூறும் அளவுக்குக் காதால் கேட்கப்படும் செய்திகள், சொல்பவரின் அனுபவத்தையும் சுமந்து வருவதால் அவை நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகின்றன.  

அப்படிக் கேட்கப்படும் செய்திகள் பாடல்கள், வசனங்கள், உரையாடல்கள் என்று பல வடிவங்களில் நம்மை வந்து சேர்கின்றன.  இவற்றில் உள்ள நல்ல கருத்துகளை வளரும்  தலைமுறைகளும் கேட்கிறார்கள் என்ற நோக்கில் அமைந்தால் அவை மேலும் உயர்வடைகின்றன.  

சமுதாயப் பொறுப்புணர்வோடு விழிப்புணர்வு கருத்துகளை விதைப்பவர்கள், குழந்தைகளும் அவசியம் கேட்க வேண்டும்  என்ற நிலையில் கவனமாகச் செயல்படும்போது, வருங்காலச் சமுதாயம், பண்பும், சுயமரியாதையும் உள்ள விழிப்புணர்வு உள்ள சமுதாயமாக வளரும்.

எனவே, கருவிலேயே பணியைத் துவக்கும் செவிவழிச் செய்திகள் சுயமரியாதை எனும் உணர்வைப் பண்போடு ஊட்டும் வகையில் இருந்தால் அவை கேள்விஞானத்தின் மதிப்பை மேலும் உயர்த்தும்.  

இதுவே குழந்தைகளின் ஆழ்மனதில் பதிந்து, கண்ணுக்குத் தெரியாத கைவிளக்காக ஒளிர்ந்து, அவர்களை வாழ்நாள் தோறும் மிகச்சரியாக வழிநடத்தும்.

#   நன்றி.        

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *