இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.

அரண்மனை:

வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், “தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா?  அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?”, என்று கேட்டார்.

மன்னனின் முகவாட்டத்திற்கான காரணத்தை யூகித்த அமைச்சர், “கணவன் மனைவிக்குள் ஒருநாள்கூட கோபம் கொள்ளாமல் யாரும் வாழமுடியாது மன்னா”, என்று மன்னனுக்கும் சமாதானமாக இருக்கும் வகையில் பதில் கூறினார்.

அப்போது, அந்த நாட்டின் மக்கள் நலன் பேணும் அமைச்சர் எழுந்தார், “மன்னா, நம் நாட்டில், சிற்றூரில் வசிக்கும் ராமய்யாவும், சீத்தம்மாவும் மிகவும் பொறுமையானவர்கள்.  அவர்கள் பல சிக்கல்களுக்கிடையில் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், ஒருநாளும் கோபப்படாமல் ஒற்றுமையாகவே  இருக்கிறார்கள்.  எப்போதும் அவர்கள் ஒருவரை ஒருவர் அக்கறையோடு கவனித்துக்கொண்டு அன்போடு வாழ்கிறார்கள்”, என்றார்.

இதைக் கேட்ட மன்னனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  நாட்டையே காக்கும் மன்னனாக இருந்தாலும், தனக்கும் ராணிக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க முடியவில்லை.  ஆனால் எளிமையான வாழ்க்கை வாழும் ராமய்யாவும் அவன் மனைவியும் எப்படி கோபம் வராமல் வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தார்.

சிற்றூர்: 

விடியற்காலை எழுந்த ராமய்யாவும் சீத்தம்மாவும் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள்.  அப்போது ராமய்யாவுக்குச் செம்பு நிறைய கூழ்க் கொடுத்த சீத்தம்மா, “சந்தையில் சில பொருட்களை வாங்க வேண்டும்”, என்று கூறினாள்.

அதோடு, சிலநாட்களுக்கு முன்பு சந்தையில் வாங்கியக் கழுதையைப் பார்த்தபடி, “இந்தக் கழுதை வெறுமனே நடந்தாலும் சோம்பலாக நடக்கிறது.  மேலும் அதன்மீது  ஏதாவது சுமை வைத்தால் சுத்தமாக நடப்பதேயில்லை.  எந்த உதவியும் இல்லாத இந்தக் கழுதையைச் சந்தையில் விற்றுவிட்டு, உபயோகமாக வேறு ஏதாவது வாங்க வேண்டும்”, என்றும் கூறினாள்.

சீத்தம்மா சொல்வது சரிதான், சென்றமுறை சந்தையிலிருந்து வாங்கிய பொருட்களைக் கழுதை மீது வைத்தவுடன் அது படுத்துக்கொண்டது.  பொருட்களையும் தூக்கிக்கொண்டு, கழுதையையும் இழுத்துக்கொண்டு தான் வீட்டிற்கு வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.  இப்போது அதை நினைவில் வைத்துக்கொண்டுதான் தன் மனைவி சொல்கிறாள் என்று ராமய்யாவுக்குப் புரிந்தது.

அதனால், சீத்தம்மா சொன்னபடியே கழுதையைக் கூட்டிக்கொண்டு சந்தையை நோக்கி ராமய்யா நடந்துகொண்டிருந்தான்.  அப்போது குதிரையோடு வந்த ஒருவன் ராமய்யாவிடம் பேச்சுக்கொடுத்தான்.  அவனிடம் பேசியபடியே நடந்த ராமய்யா, “இந்தக் கழுதையால் பயனேதும் இல்லை.  எனவே இதைச் சந்தையில் விற்றுவிட்டு வேறு ஏதாவது வாங்கவேண்டும்”, என்று கூறினான்.

உடனே குதிரைக்காரன், தான் குதிரையை விற்றுவிட்டுக் கழுதை வாங்கச் செல்வதாகவும்,  இந்தக் கழுதைக்குப் பதிலாக தன்னுடையக் குதிரையைத் தருவதாகவும் கூறினான்.

சாதுவாக இருந்த அந்தக் குதிரை பார்க்கவும் நன்றாக இருந்தது.  எனவே, “என் மனைவி கேட்கும் பொருட்களை வாங்க, அடிக்கடி சந்தைக்குச் சென்றுவர வேண்டியிருக்கிறது.  அந்தச் சமயத்தில் இந்தக் குதிரை மிகவும் உதவியாக இருக்கும்”, என்று தன் எண்ணத்தை அவனிடம் கூறினான்.

பின்னர், கழுதையைக் கொடுத்துவிட்டுக் குதிரையை வாங்கிய ராமய்யா, அதன்மேல் ஏறி உட்கார்ந்தான்.  ஆனால் அந்தக் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டிருந்தது.  வெகுநேரம் முயற்சி செய்த ராமய்யா என்ன ஆயிற்று என்று குதிரையிலிருந்து இறங்கி கடிவாளத்தைப் பிடித்து இழுத்தால் குதிரை நடக்கிறது, ஆனால் அதன்மேலே ஏறி உட்கார்ந்தால் நகராமல் நிற்கிறது.

என்ன காரணம் என்று குதிரையைச் சுற்றிசுற்றி வந்து, உற்றுப் பார்த்தபோதுதான், அந்தக் குதிரைக்குக் கண்பார்வை சரியில்லை  என்று தெரிந்துகொண்டான்.

இந்தக் குதிரையைப் பயன்படுத்த முடியாது.  எனவே இதைச் சந்தையில் விற்பதைத்தவிர வேறுவழியில்லை என நினைத்துச் சந்தையை நோக்கி தொடர்ந்து நடந்தான்.

அப்போது ஒருவன் ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு வந்தான்.  அவன் ராமய்யாவிடம், “குதிரை நன்றாக இருக்கிறதே”, என்றான்.  அதற்கு ராமய்யா, தானும் அப்படி நினைத்துதான் வாங்கியதாகவும் ஆனால் அதற்குக் கண் பார்வை சரியில்லை, எனவே அதைச் சந்தையில் விற்கப்போவதாகவும் கூறினான்.

“கண் தெரியாவிட்டால் என்ன? குதிரை நன்றாக இருக்கிறதே, நான் பயிற்சிக் கொடுத்துப் பழக்கி விடுவேன்.  நீங்கள் வேண்டுமானால் இந்தக் குதிரையை எனக்கு கொடுத்துவிட்டுப் பசுவை வாங்கிக்கொள்ளுங்கள்”, என்றான்.

ராமய்யாவுக்குத் தன் பிரச்சனை தீர்ந்தாற்போல இருந்தது.  பசு கொஞ்சம் மெலிந்து இருந்ததே தவிர கண்கள் நன்றாக தெரிந்தன.  “வீட்டில் பசு வளர்க்க வேண்டும் என்று என் மனைவிக்கும் நீண்டநாளாக ஆசை”, என்று ராமய்யா மகிழ்ச்சியோடு கூறினான்.  எனவே குதிரையைக் கொடுத்துவிட்டுப் பசுவை வாங்கிக்கொண்டான்.

வீட்டிற்குத் திரும்பிச் செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதால், தெருவோரத்தில் வளர்ந்திருந்த பசுமையான புல்லை எடுத்துப் பசுவுக்குக் கொடுத்தான்.  ஆனால் அது வாய் திறந்து புல்லை வாங்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டது.  என்ன ஆயிற்று என்று பசுவின் வாயில் பார்த்தான், அந்தப்பசுவுக்கு வாயில் பற்களே இல்லை, ஏற்கனவே எல்லா பற்களும் விழுந்து விட்டன.

இதைக்கண்டதும் ராமய்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.  மாடு என்றாலே எப்போதும் எதையாவது அசைபோட்டபடிதானே இருக்கும்.  இப்படி பல் இல்லாத பசுவைத் தான் பார்த்ததே இல்லையே, என்று ஆச்சரியப்பட்டான்.  இந்தப் பசு எதையும் சாப்பிட முடியாமல் இருப்பதால் இதைப் பராமரிப்பதும் சிரமம்.  மேலும் இதனால் பயனேதும் இருக்காது என நினைத்த ராமய்யா மீண்டும் சந்தையை நோக்கி நடந்தான்.

அப்போது ஆட்டுடன் வந்த ஒருவன் ராமய்யாவின் கதையைக் கேட்டுப் பரிதாபப்பட்டான்.  “இனி நீங்கள் சிரமப்பட வேண்டாம், என்னுடைய எத்தனையோ மாடுகளுடன் இதையும் ஒன்றாக வைத்து நீர் ஆகாரம் மட்டும் கொடுத்துப் பார்த்துக்கொள்கிறேன்.  பசுவிற்குப் பதிலாக இந்த ஆட்டை வாங்கிக்கொண்டு செல்லுங்கள்”, என்றான்.

இதைக்கேட்டு மகிழ்ந்த ராமய்யா, “ஆட்டுப்பால் மருத்துவ குணம் கொண்டது.  வைத்தியரும் சீத்தம்மாவைத் தினமும் ஆட்டுப்பால் குடிக்க சொல்லியிருக்கிறார்.  எனவே இது அவசியம் பயன்படும்”, என்று கூறிய ராமய்யா, இந்த முறை மிகவும் எச்சரிக்கையாக ஆட்டின் கண்கள், பற்கள் எல்லாவற்றையும் சோதனைச் செய்துவிட்டுப் பிறகு வாங்கினான்.

ஒருவழியாக சீத்தம்மா கூறியது போல வீட்டிற்கு உபயோகமானதாக வாங்கிவிட்டோம் என்று நினைத்த ராமய்யா, மகிழ்ச்சியோடு ஆட்டை பிடித்துக்கொண்டு நடந்தான்.  அப்போது எதிரில் வந்த ஒருவன் ராமய்யாவை பார்த்து, “பால் வற்றி, முதிர்ந்த ஆட்டை எங்கே இழுத்துச் செல்கிறீர்கள்”, என்றான்.

அவன் கூறியது கேட்டு ராமய்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் சமாளித்தபடி சந்தையில் விற்பதற்குச் செல்வதாகக் கூறினான்.  அதற்கு அவன், “இந்த வெயிலில் இன்னும் நீண்ட தூரம் இதை இழுத்துச் சென்று சந்தையில் விற்பதற்குப் பதில் என்னிடமே விலைக்குக் கொடுத்து விடுங்கள்”, என்று கூறினான்.

எப்படியோ இதை விற்றால் போதும் என்ற மனநிலையில் இருந்த ராமய்யாவிடம் அவன், “முற்றிய ஆடு இந்த விலைக்குதான் போகும்”, என்று கூறியபடியே குறைந்த அளவு பணத்தைக் கொடுத்தான்.

ஒருவழியாக ஆட்டை விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொண்ட ராமய்யாவுக்கு, உச்சி வெயிலில் நடந்த களைப்பும், பசியும் அதிகமாகி தலை சுற்றியது.  நல்ல வேளையாக, அந்த இடத்தில் புதிதாக ஒரு பலகாரக்கடை இருந்தது.

அங்கே கொஞ்சம் பலகாரம் வாங்கி சாப்பிட்டுவிட்டு ‘மீதி பணத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களைச் சந்தையிலிருந்து வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்’ என்று தனக்குள் மெதுவாகப் பேசியபடியே கடைக்குச் சென்றான்.

ஆனால், அந்தக் கடையில் இருந்த ஆள் பலகாரங்களை ஒரு கூடை நிறைய வைத்துக் கொடுத்துவிட்டு, அதற்குப் பலமடங்காக விலை கூறினான்.  ராமய்யா வேறு வழியின்றி கையிலிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘வீட்டிற்குப் பலகாரங்களையாவது எடுத்துச் செல்வோம்’ என்று சொல்லியபடியே அதை வாங்கிக்கொண்டான்.

அப்போது ஒருவன் ராமய்யாவின் பக்கத்தில் வந்து, “பசியாக இருக்கிறது ஏதாவது உதவி செய்யுங்கள்”, என்று கேட்டான்.  “பசியில் இருப்பவனுக்கு உணவு தருவதுதானே இவனுக்குச் செய்யும் உதவியாக இருக்க முடியும்”, என நினைத்த ராமய்யா கையில் இருந்த பலகாரத்தை அவனிடம் சந்தோஷமாகக் கொடுத்தான்.

பின்னர், “நான் பசியைத் தாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போனால் சீத்தம்மா எனக்காக உணவு வைத்திருப்பாள்”, என்று முனுமுனுத்தபடியே நிம்மதியாக வீட்டிற்குப் போனான்.

காலையில் சந்தைக்குச் சென்ற கணவன் இன்னும் வரவில்லையே, ஏதாவது சாப்பிட்டானோ இல்லையோ என்று யோசித்தபடி சீத்தம்மா காத்திருந்தாள். அப்போது மிகவும் பசியோடு களைப்பாகத் திரும்பிவந்த கணவனுக்கு முதலில் நீர்மோரும் உணவும் கொடுத்தாள்.

அதைத் தன் மனைவியோடு அமர்ந்து திருப்தியாகச் சாப்பிட்ட ராமய்யா, தான் சந்தைக்குப் போகும்போது நடந்த வித்தியாசமான நிகழ்வுகள் முழுவதையும் தன் மனைவியிடம் கூறினான்.  அதோடு, வீட்டிற்காகத் தான் எந்தப் பொருளையும் வாங்கமுடியவில்லை என்றும் வருத்தமுடன் கூறினான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட சீத்தம்மா, “நீங்கள் மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள், நல்ல குதிரையே வாங்கியிருந்தாலும் பயணத்துக்கு மட்டுமே பயன்படும்.  பசு வளர்க்க ஆசைதான் என்றாலும் பசுவோ, ஆடோ பாலுக்குத்தான் பயன்படும்.

பலகாரத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  ஆனால் இவை எல்லாவற்றையும்விட, நீங்கள் பசியோடு இருந்தபோதும், இன்னொருவனின் பசியைத் தீர்த்துவைத்துத் தலைமுறைக்கே புண்ணியம் செய்துள்ளீர்கள்.  எனவே, மகிழ்ச்சியாக இருங்கள்.  நீண்ட தூரம் நடந்த களைப்புத் தீர சற்று ஓய்வெடுங்கள்”, என்று கூறினாள்.

மறுநாள் விடியற்காலை எழுந்த சீத்தம்மா வாசலில் கோலமிட வெளியே சென்றாள்.  அங்குத் தன் கண்களை தானே நம்பமுடியாமல், உடனே உள்ளே வந்து தன் கணவனையும் அழைத்து வெளியே இருப்பதைக் காட்டினாள்.

அங்கே, திடமான இரண்டு கழுதைகள், ஆரோக்கியமான குதிரை, கன்றுடன் நிற்கும் பசு, இரண்டு ஆடுகள், வீட்டிற்குத் தேவையானப் பொருட்களோடு ஒரு பெட்டி, ஒரு சிறிய பணமூட்டை எல்லாம் இருந்தன.

இதைக்கண்டு ஆச்சர்யப்பட்ட இருவரும், இவை யாருடையவை? இவற்றை யார் இங்கே வைத்தது? என்று அருகில் இருந்த வீடுகளில் எல்லாம் விசாரித்தார்கள்.  அவர்கள், “நாங்கள் யாரும் பார்க்கவில்லை”, என்றும், “எங்களுக்குத் தெரியாது”, என்றும் கூறிவிட்டார்கள்.

அப்போது அங்கு வந்த அரசாங்க சேவகன் ஒருவன், மன்னன் கொடுத்தனுப்பியதாகக் கூறி, ஒரு பலகாரப் பெட்டியும், அரசாங்க முத்திரையிட்ட அழகான ஒரு கடிதத்தையும் அவர்களிடம் கொடுத்தான்.

அதில் “பசியில் இருந்தவனுக்கு உணவு கொடுத்த ராமய்யாவின் அன்புக்கு என்னுடைய காணிக்கை”, என்று எழுதியிருந்தது.  மேலும், “கணவனின் செயலில் நல்லதைப் பார்க்கும் மனைவியும், மனைவியின் நலனை மனதில் கொள்ளும் கணவனும், வாழும் அன்பான குடும்பத்திற்கு, சந்தை வழிப்போக்கனின் பரிசுகள்”, என்றும் எழுதி இருந்தது.

இதைப் படித்த ராமய்யாவும் சீத்தம்மாவும் நம்பமுடியாமல் ஆச்சரியம் அடைந்தார்கள்.  நேற்று நடந்தவை அனைத்தும் மன்னனின், திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.  பின்னர், அந்தச் சேவகனை அன்போடு உபசரித்து, மன்னனிடம் தங்களுடைய அன்பையும் நன்றியையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கும்படி கூறினார்கள்.

“ஒருவர் நலனை மற்றவர் நினைத்து, மதித்து, ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வது இயல்பாக இருக்கும்போது, இல்லறம் என்பது நிச்சயம் நல்லறம் ஆகும்”, என்று உணர்ந்த (மாறுவேடத்தில் சேவகனாக இருந்த) மன்னனும் மகிழ்ச்சியோடு அரண்மனை நோக்கிச் சென்றான்.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *