எளிமை வலிமையாவது எப்போது? Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.

எளிமை:

உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொருளாதாரம், பதவி, ஆளுமை போன்றவை எளிய நிலையில்தான் உள்ளது.  இத்தகைய சாதாரண நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கோடு சீராக வாழ்வதற்கு எளிமை எனும் பண்பு இயல்பான அடிப்படை கருவியாகச் செயல்படுகிறது.  

 

 

இந்த எளிமையே, மக்கள் தங்கள் வாழ்க்கை நிலையை மேன்மேலும் உயர்த்துவதற்கு உதவும் சக்தியாகவும், மேன்மையான நிலையை அடைந்தபிறகு அந்த நிலையை பாதுகாக்கும் அரணாகவும், அந்நிலையை அணுகுவதற்கான முதிர்ச்சியைத் தருகின்ற உயர்ந்தப் பண்பாகவும் பெருமையாக வெளிப்படுகிறது.

வளர்ச்சி

எளிமை என்றதும் தேவையறிந்து செலவு செய்வது,  அவசியமற்றதைத் தவிர்ப்பது எனப் பொருளாதார அடிப்படையிலான எளிமையே வெகுஇயல்பாக நம் நினைவுக்கு வருவது உண்மைதான்.  

ஆனால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், அணுகுமுறையிலும் மிகக் கவனமாகச் செயல்படவேண்டிய இன்றைய சூழலில், எளிமை என்ற உயர்ந்தப் பண்பைப் பொருளாதார நிலைக்கானது என்று மட்டும் சுருக்கி விடமுடியாது. 

தேவையற்றதைத் தவிர்த்து உடல்நிலைக்குப் பொருத்தமான உணவை உண்ணும் எளிமை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.  தேவையற்றதை நீக்கி அவசியமான பொருட்கள் மட்டும் இருக்கும் வீடு சுத்தமாக, எளிமையாக இருக்கிறது.  தேவையற்ற எண்ணங்கள் இல்லாத ஆக்கப்பூர்வமான எளிமையான சிந்தனைகள் சிறந்த மனவளத்தைத் தருகின்றன.    

தேவையற்ற, நேரத்தை வீணாக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பதும் பயனுள்ளவற்றை தேர்ந்தெடுத்து வழக்கமாக்குவதும் வாழ்க்கையை மேலும் வளமாக்கும் எளிமையான வழிகளாகும்.  இவைப்போலவே ஒவ்வொரு சூழலையும் எளிமையாக்கும் வகையில் கவனத்துடன் செயல்படும் அணுகுமுறையே முன்னேற்றத்திற்கு அவசியமான நேர்மறையான வழியாக இயங்குகின்றது.

மேலும், முன்னேற்றத்தினால் வருகின்ற புதிய சூழலின் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் மனதில் தடுமாற்றம் ஏற்படாமல் காப்பாற்றுவதற்குத் தன்னிலை உணரும் எளிமையான மனநிலையே உதவுகிறது.  சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நிதானத்திற்கும், உடன் பணியாற்றும் குழுவினருடன் இணக்கமாகப் பழகும் இயல்புக்கும் இந்த எளிமையே நிலையான வழிகாட்டியாக விளங்குகிறது.

மேன்மை:

மிக உயர்ந்த, பதவியில் இருப்பவர்கள், ஆளுமை நிறைந்தவர்கள், சாதனையாளர்கள், செல்வாக்கோடு வாழ்பவர்கள் என்று மதிப்பிற்குரிய நிலையில் பலர் இருக்கிறார்கள்.  

இவ்வாறு சமூகத்தில் உயர்ந்த மதிப்போடு இருப்பவர்கள் பகட்டு, ஆதிக்கம், ஆணவம் என்று அந்நிலைக்கான செருக்கோடு நடந்துகொள்வது இயற்கைதான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆனால் அதற்கு மாறாக, உயர்ந்தவர்களிடம் வெளிப்படும் எளிமையான அணுகுமுறை, மக்களின் மனதில் தங்களுக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமாக உணரப்படுகிறது.  இதனால் ஏற்படும் மகிழ்ச்சியே அவர்களோடு இயங்கும் சூழலிலும் பிரதிபலிக்கிறது.  

மேன்மையான நிலையில் இருப்பவர்களுள் ஒருசிலரே இளநிலையில் இருப்பவர்களிடமும், உடன் பழகுவோர்களிடமும் அலட்டல் இல்லாமல் தகுந்த மரியாதையோடும், அக்கறையோடும் எளிமையாக அணுகுகிறார்கள்.  இத்தகையவர்களே மேன்மையால் கிடைக்கும் மரியாதையைத் தங்களுடைய அணுகுமுறையால் பலமடங்கு உயர்த்துகிறார்கள். 

உயர்ந்த கல்விக்கற்ற அறிஞராக இருந்தாலும், அத்தகைய கல்வியறிவு பெறாத மக்களிடமும் குழந்தைகளிடமும் கர்வமின்றி அன்பாகப் பேசுபவரின் எளிமை அவரது பண்பை மேலும் உயர்த்துகிறது.  எனவே எளிமை என்ற மிக உயர்ந்தப் பண்பு அனைவருக்கும் தேவையான இயல்புதான் என்றாலும் மிக உயர்ந்த நிலையிலும் மாறாத இப்பண்பு மேன்மையின் மகுடமாகப் போற்றப்படுகிறது.  

வலிமை:

மக்களுக்கு இயல்பாக இருக்கவேண்டிய பண்புகளில் எளிமை மிக உயர்ந்தப் பண்பு என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். 

எளிமை என்ற பண்பு ஏணியாக நின்று உயர்வதற்குப் பயன்படுகிறது என்பதால் அதைத் தற்காலிகமாக மட்டும் பயன்படுத்தும் எண்ணம் ஏற்றத்தைத் தேங்கச் செய்துவிடும்.  ஆனால் உயர்ந்த நிலையிலும், ஆற்றல் நிறைந்த திடமான பின்புலத்திலும், மாறாத இயல்பாக நிலையாக உள்ள எளிமையான பண்பே கம்பீரமான அடையாளமாக உயர்ந்து நிற்கும்.

அப்படியானால், ஆற்றல் நிறைந்த தகுதிகள் ஆதிக்கம் செலுத்துவது இயல்பு என்ற நிலையிலும், அதன் ஆதிக்கத்தை முறையாகக் கையாளும் எளிமையின் திறமையே மேன்மக்களின் வலிமையாக மிளிர்கிறது.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *