மானிடராய்ப் பிறத்தல் அரிது:
பகுத்தறியும் சிந்தனையுடன், செய்யும் செயல்களில் முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ள மானிடராகப் பிறந்திருப்பதே இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் முதல் வெற்றி. அவ்வாறு பிறந்த பின்னர் வளரும் ஒவ்வொரு நிலையிலும், சுயமுயற்சியால் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நம்முடைய மனவலிமையும் தொடர்ந்து வளர்ந்து, நம்முடைய பல வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
மனவலிமைக்கு அடிப்படை காரணமாக இருக்கும் வீட்டில், உறவும் சூழலும் ஒன்றாகவே இருந்தாலும், தனிநபரின் மனநிலைக்கு ஏற்பவும், சந்திக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், தனிப்பட்ட வகையில் அவற்றை எதிர்கொள்ளும் இயல்பைப் பொருத்தும் இயங்கும் மனவலிமையின் வெளிப்பாடு அவருடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறு, ஒவ்வொரு சூழலிலும் உள்ள சவால்களை எதிர்த்துச் செயல்படுவதில், விழுவதும் எழுவதுமாக இயங்கும் சுயமுயற்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட பல இலக்குகளை இயல்பான நிகழ்வுகளாக மகிழ்ச்சியுடன் அடைய முடிகிறது.
இத்தகைய முயற்சிகளில் ஏற்படுகின்ற ஒருசில பின்னடைவுகள் மனதில் தற்காலிகமான வலியை ஏற்படுத்தினாலும் அவையே தோல்வியை எதிர்த்துப்போராடும் தடுப்பூசியாகச் செயல்படுகிறது. இந்தச் சக்தியே நெம்புகோல் போல இயங்கி இலக்கை நோக்கி ஆற்றலோடு செயல்பட வைக்கிறது.
இதனால், கிடைக்கின்ற பலன்கள் வலிமையின் வாய்ப்பாகவும், மனவலிமை நிரந்தர வாய்ப்பாகவும் செயல்படுகிறது. இவ்வாறு வாழ்க்கையில் நிரந்தரமாகத் தேவைப்படுகின்ற இந்த மனவலிமை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படுகிறது என்ற சிந்தனையின் பார்வையே இந்தப் பதிவு.
வலிமையின் ஒளி:
மனவலிமை, அனைவருக்கும் எப்போதும் அவசியம்தான் என்றாலும், ஒரு சூழ்நிலையை மனவலிமையோடு எதிர்கொள்பவர் மற்றொரு சூழ்நிலையையும் அவ்வாறே எதிர்கொள்வார் என்று கூறிவிடமுடியாது. எல்லோருமே எல்லா சூழ்நிலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருந்துவிட முடியாது.
ஆனாலும், வலிமையைப் பழக்கமாக்கிக் கொண்ட மனம், வலிமை தேவைப்படும் சூழலில், பள்ளத்தை நோக்கிப் பாயும் நீர் போலப் பாய்ந்து உள்ளத்தை வலிமையால் நிரப்பி விடும் தன்மை கொண்டது.
சூழ்நிலையை மிகக் கடினமாகவும் தன்னை பலகீனமாகவும் நினைப்பதைத் தவிர்த்து, சூழ்நிலையைத் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை அவரவர் மனதிலிருந்துதான் முழுமையாகப் பெறமுடியும். சில சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்வதும், தாண்டிச்செல்வதும்கூட மனவலிமையின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன.
பாதைகள் தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில், தன்னிரக்கத்தால் மனம் மெழுகுவர்த்தி ஒளிபோல அலைபாயும்போது, “நமக்கான பாதையை நாமே அமைப்போம்”, என்ற நம்பிக்கையோடும், நேர்மறை சிந்தனைகளோடும் கைகோர்த்துப் பலம் பெறுவதே வலிமையின் ஒளியைப் பாதுகாக்கும் சிமிழாகச் செயல்படுகிறது.
சமூகத்தில் வாழும் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விதமான கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ்பவர்களே. இந்தச் சமத்துவத்தைப் புரிந்துகொள்வதும், அவ்வாறு கடந்து வந்தவர்களின் வரலாறுகளை அறிந்து கொள்வதும், நிலையான ஒளிவீசும் விளக்காக மனதில் நின்று வலிமை சேர்க்கும்.
எத்தகைய சூழ்நிலையும் காலம் என்னும் காற்றோடு கலந்து கடந்து சென்றுவிடும். ஆனால் அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்ட மனவலிமையோ காற்றில் வந்த நறுமணமாக மனதிற்கு இதமளித்து, நினைவில் நின்று மனம் வீசும்.
வலிமை ஒரு ஆயுதம்:
உயர்ந்த பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதுதான் வெற்றி என்று நினைப்பவர்களுக்கும், முன்னேற்றம் வேண்டும் என்ற உந்துதலில் உண்மையாக உழைப்பவர்களுக்கும் மனவலிமையும் அதற்கேற்ற அளவு மிக உயர்வாக இருக்க வேண்டும் என்பது நியாயம்தானே!
பாத்திரத்தின் அளவுக்கே அதில் நீர் நிரப்ப முடியும் என்பதுபோல, மனவலிமையின் அளவுக்கே குறிக்கோளில் வெற்றிபெற முடியும் என்பதுதான் இயற்கையின் நியதி.
பலன் தரக்கூடிய பயிர்களைப் பெருமுயற்சியோடு வளர்ப்பவர் நிலத்தில், எந்த முயற்சியும் இல்லாமல் களைச்செடிகளும் வளர்ந்து விடுவதுண்டு. அத்தகைய வேண்டாத களைகளை இனம் தெரிந்து களைவதும், பயிர்களைப் பாதுகாப்புச் செய்வதும் பயிர்வளர்ப்பில் முக்கியமான பொறுப்பாகிறது.
அதுபோலவே, முக்கியமான உயர்ந்த நோக்கத்தோடு உழைப்பவர் அதில் உறுதியாக இருப்பதற்கும், பயனற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தைக் கரைக்காமல் கவனத்துடன் தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்வதற்கும் மனவலிமையே சிறந்த ஆயுதமாகப் பாதுகாப்பு அளிக்கிறது.
வலிமையே வாடிக்கை:
இலக்கை நோக்கி முன்னேறுபவருக்கும், வெற்றியை எதிர்நோக்குபவருக்கும், சவாலான சூழ்நிலைகளைச் சந்திப்பவருக்கும் மட்டும் அல்ல, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரிந்தவர்களுக்கும் அவ்வாறு வாழ்வதற்கு மனவலிமை அவசியம் தேவையானதாக உள்ளது.
வாழ்க்கை முழுவதும் உழைத்து ஓடி களைத்தவர்களுக்கும், ComfortZoneல் நிராயுதபாணியாக இருப்பவர்களுக்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் மனவலிமையே கேடயமாக இருக்கிறது.
பயிற்சிகள்:
மனவலிமை உள்ளவர்களே முழுமையான மனிதர்களாக வாழமுடியும் என்ற நிலையில் மனதை மேலும் வலிமையாக்க ஏதேனும் வழிகள் இருக்கின்றதா?
உடலின் சீரான ஆரோக்கியத்திற்கு முறையான பயிற்சிகள் உதவுவது போலவே ஆரோக்கியமான மனதிற்கு சில சிறப்புப் பயிற்சிகள் வலிமை சேர்க்கும் என்று Life Coachகள் கூறுகிறார்கள்.
அன்றாடம் சந்திக்கின்ற இயல்பான சூழ்நிலைகளில், நமக்கு நாமே புதிதாக ஏற்படுத்திக்கொள்ளும் சவால்கள் இதற்கு பெரிதும் உதவும் என்கிறார்கள்.
உதாரணமாக,
நன்கு பழக்கப்பட்ட ஒரு வேலையைச் செய்து முடிக்க குறிப்பிட்ட அளவு நேரம் ஆகும் எனில், அதே வேலையை அதைவிட சற்றுக் குறைந்த நேரத்திற்குள் அதே அளவு நேர்த்தியோடு செய்து முடிப்பதற்கு தினமும் பயிற்சி எடுப்பது.
பயனுள்ள புதிய வேலைகளை, மகிழ்ச்சி தரக்கூடிய கலைகளைக் கற்றுக்கொள்வது, அவற்றில் பயிற்சி பெறுவது.
ஆக்கபூர்வமான செயல்களில், கடினம் என்று நினைப்பவற்றை, சிறுசிறு செயல்களாக, ஒவ்வொரு நிலையாகப் பயிற்சி எடுத்து, செய்துமுடிப்பது.
சரியான திட்டமிடலுடன் பல வேலைகளை நேரம் வகுத்துச் செய்வது.
எல்லாவற்றிற்கும் உணர்ச்சிபூர்வமான(sensitiveஆக) எதிர்வினை ஆற்றாமல், சூழ்நிலைக்கு ஏற்றபடி விவேகமாக(sensibleஆக) உணர்வுகளை வெளிப்படுத்தி மன ஆற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது.
நம்மால் இயன்ற உதவிகளைத் தேவைப்படுபவர்களுக்குச் செய்து உதவுவது. நன்றி, மன்னிப்புப் போன்ற மேம்பட்ட பண்புகளோடு இயல்பாகப் பழகுவது.
வழக்கமாகப் பயன்படுத்தும், பழகிப்போன சாலைகளைத் தவிர்த்துப் பாதுகாப்பான புதிய சாலைகளில் அவ்வப்போது பயணிப்பது.
புதிய கடைகள், புதிய மனிதர்கள், புதிய ஊர்கள் என்று அடிக்கடி புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வது.
உறக்கம், விழிப்பு, வேலை, பொழுதுபோக்குப் போன்றவற்றை முறையாகத் திட்டமிடுவது, அவ்வாறே உறுதியாகச் செய்து பழகுவது.
நம்முடைய பயிற்சிகளில் ஏதேனும் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அந்த முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முறையாகச் செயல்படுத்துவது.
வெற்றிக்குத் துணை:
சுய ஒழுக்கம், ஒவ்வொருநாளும் தொடரும் பயிற்சி, தன்னுடைய செயல்களின் மூலம் தன்வலிமை உணர்தல், ஒவ்வொரு சூழ்நிலையையும் தன்னை நிருபிக்கும் சிறந்த வாய்ப்பாக எண்ணி தயாராக இருக்கும் மனநிலை போன்றவை மனவலிமையை அதிகரிக்கும் தன்னார்வப் பயிற்சிகள் என்று கூறுகின்றனர்.
புதிதாக வாங்குகின்ற கைப்பேசியில் சில appகள் ஏற்கனவே இணைந்திருந்தாலும், நம் தேவைக்கு ஏற்ப புதிய appகளை download செய்து செல்போனின் திறனை முழுமையாக பயன்படுத்த நினைக்கிறோம்.
அதுபோலவே மேலே கூறப்பட்ட குறிப்புகள் மனவலிமையை மேம்படுத்துவதற்கு உதவுகின்ற வகையில், மாதிரி (sample) பயிர்ச்சிகளாக இருக்கின்றன. இவற்றில் தனிப்பட்ட வகையில் எவை பொருத்தமானதோ, எவை உகந்ததோ அவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறை படுத்துவது என்பது தனிநபர் வாய்ப்பாக உள்ளது.
மந்திரச்சாவி:
தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும், தவிர்க்கக் கூடாத சூழ்நிலையாக இருந்தாலும், சுயமுயற்சியால் நாமே ஏற்படுத்திக்கொண்ட சூழ்நிலையாக இருந்தாலும், அவை எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும் அந்தச் சூழ்நிலைகள் அனைத்துமே கடந்து செல்லக்கூடியவைதான்.
அதே நேரத்தில், அத்தகைய சூழ்நிலைகளை நம்முடைய மனவலிமையால் எவ்வாறு திறம்பட கையாளுகின்றோம் என்கின்ற நம்முடைய செயல்களே நம்முடைய வாழ்க்கையின் சாட்சியாக நிலைத்து நிற்கின்றன.
எண்ணியது எண்ணியவாறு திட்டமிட்டுச் செயல்படும் மனவலிமையே, வாழ்க்கையின் உறுதியான வெற்றிகளைப் பரிசளிக்கும் திறனுள்ள, மனதின் மந்திரச் சாவி ஆகும்.
# நன்றி.