சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?

சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?

சுயஅன்பு (self love) :

 நமக்கு நாம் முதல் நட்பாக இருந்து நம்மிடம் அன்பாகப் பழகும் முதல் நபராக நாம் இருப்பதுதான் சுயஅன்பு  என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.  

நமக்கு நன்மை செய்யும் இந்த சுயஅன்பு, கூடுவதும் குறைவதுமாக எல்லைமீறும்போது மனம் devil’s workshop ஆக மாறி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.  மனம், தேவதையின் பட்டறையாக (angel’s workshop) வேலை செய்யவேண்டுமெனில் சுயஅன்பு சரியான நிலையில் இயங்க வேண்டியது அவசியம்.

உயிரின் அவசியத் தேவையாக இருக்கும் பிராணவாயு (oxygen), தேவைக்குக் குறைவாக இருக்கும்போது பாதிப்பை ஏற்படுத்துவது போலவே தேவைக்கு அதிகமாக இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை.  குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் மட்டுமே ஆரோக்கியமானது என்று எண்களில் அதன் எல்லையைக் குறிப்பிடுவதுபோல, சுய அன்பின் எல்லை அதன் எண்ணங்களில் உணரப்படுகிறது. 

குறைவதால் ஏற்படும் விளைவுகள்:

புறக்கணிப்பு:

உடல், மனம், அறிவு போன்றவற்றை ஆரோக்கியமான நிலையில் கையாளுவதற்குத் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள செயல்களில் கவனம் செலுத்தாமல் தன்னைத்தானே புறக்கணிப்பது.

‘சுய விருப்பு, வெறுப்புப் பற்றிய புரிதல்’, ‘சுயபலம், பலவீனம்’ ஆகியவற்றை அறிந்துகொள்ளும் முயற்சி, எது ‘வேண்டும் அல்லது வேண்டாம்’ என்பதில் உறுதி, மாறுகின்ற ‘தன்னுடைய எல்லை’ போன்றவற்றைக் கவனிக்காமல் குழப்பமாகவே இருப்பது.

தன்னுடைய சுயமரியாதைக்கும், கண்ணியத்திற்கும் தானே (மனமே) பொறுப்பு என்பதை உணராமல், மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக அவற்றை விட்டுக்கொடுப்பது.

தன்னிரக்கம் (self pity): 

மனம், தன்னால் புறக்கணிக்கப்பட்ட தன்னுடைய நிலைக்குத் தானே பரிதாபப்படுவது, இயல்பான நிலையையும் பரிதாபத்திற்கு உரிய நிலையாக வெளிப்படுத்துவது.

தன்னுடைய தவறுகள், தோல்விகள் போன்றவற்றால் தன்மீது தனக்கு ஏற்படுகின்ற கடுமையாகக் கோபத்திலிருந்தும், மற்றவர் அபிப்பிராயத்திலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் மாயவித்தையாகப் பரிதாபத்தைச் செயல்படுத்துவது.

சிக்கலான சூழ்நிலையில் தற்காலிக ஆறுதலைத் தருகின்ற சுயபரிதாபம் நிரந்தரமான தாழ்வு மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

அதிகமாவதால் ஏற்படும் விளைவுகள்:

சுய நலம்:

எப்போதும் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது.  மற்றவர் உணர்வுகளை, தேவைகளை உதாசீனம் செய்வது.  விட்டுக்கொடுப்பது, அனுசரித்து நடப்பதுப் போன்ற சில நடைமுறைகளைத் தான் செய்யாதபோதும் மற்றவரிடம் அதை கட்டாயமாக எதிர்பார்ப்பது.

Narcissism:

தன்னுடைய சுயநலமான எதிர்பார்ப்புகளை நிகழ்த்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது.  தன்னுடைய நலனுக்காக மற்றவரைக் குறைத்துப் பேசுவது, குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது. 

எப்போதும் திருப்தியற்ற நிலையை வெளிப்படுத்துவது, சுயதேவைக்கு மட்டுமே பழகுவது.  தன்னுடைய இயலாமையை, தோல்வியை மறைப்பதற்கும், தன் தரப்பைப் பாதுகாக்கவும் நியாயமின்றி மற்றவர் மனதைக் காயப்படுத்துவது. இத்தகைய குணத்தால் மற்றவர்களே அதிகம் பாதிப்பு அடைவார்கள் என்பதால் இதையும் சுய அன்பு அல்லது திறமை என்ற முகத்திரையோடு பயன்படுத்துவது.

இத்தகைய செயல்பாடுகளினால் ஏற்படும் தற்காலிக வெற்றி, ஆணவத்தை மேலும் வளர்த்து வாழ்க்கையின் ஆரோக்கியமான முன்னேற்றத்தை முற்றிலும் பாதிக்கிறது. 

மனம் ஒரு குழந்தை:

இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு அறிவு ஆயிரம் திட்டங்களை வகுத்தாலும், உடல்நிலையில், மனநிலையில் நாம் சிரமப்படுவது நம்முடைய மனதிற்கு பிடிப்பதில்லை.  எனவே, நாம் சிரமப்படாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் மனம் நம்மை இயக்குகிறது.  அதைமீறி நாம் செய்யும் செயல்களுக்கு ஒத்துழைக்க மறுத்து, அடம்பிடிக்கும் குழந்தையாக மனம் நடந்துகொள்கிறது.

ஆரோக்யமான சூழ்நிலையிலும், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்குக் காரணம் சொல்லும் குழந்தையைப்போல, கடினம் என்று மனம் நினைக்கும் செயலுக்கு, பரிதாபப்படும் வகையிலோ அல்லது முரட்டுத்தனமாகவோ தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. 

இயல்பான நிலையில் உள்ள ஒரு குழந்தையை அன்பாக அணுகுவதுபோலவே, அடம்பிடிக்கும்(மனம்) குழந்தையையும் (செல்லம் கொடுக்காமல், கொடுமைப் படுத்தாமல்) நேர்மையான, உறுதியான அன்போடு பேசி, மகிழ்ச்சியான விளைவுகளை அறிவுபூர்வமாக மனதிற்கு விளக்கிக் கூறிப் பக்குவப்படுத்த வேண்டும். 

“நம்மை மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மனம் என்னும் குழந்தையைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளாமல், ஒவ்வொரு நாளும் வளர்கின்ற நம்முடைய வளர்ச்சியை, வெற்றியை நோக்கி உழைப்பதில் காணும் மகிழ்ச்சியை அவ்வப்போது உணரச்செய்வது மிகச் சிறந்த பலனை ஏற்படுத்தும்”.  

“ஆணவத்தால் ஏற்படும் பரிதாபத்திற்குரிய விளைவுகளை அறிவுபூர்வமாக உணர்த்துவதே மனம் என்னும் குழந்தையைச் சமநிலையில் நெறிப்படுத்தும் சிறந்த வழியாகும்”.

ஆரோக்கியமான சுயஅன்பு:

ECG வரைபடம்போல சுய அன்பின் இந்த ஏற்றத்தாழ்வுகள் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும், இது உள்ளுணர்வு எனும் பாதுகாப்பான ஒரு கட்டுப்பாட்டில் விழிப்போடு இயங்குவதுதான் ஆரோக்கியமானது.

உயிர்களிடத்தில் அன்பு, நன்றி, கருணை என்ற பண்புகளோடு இருப்பதுதான் இயல்பான நிலை என்றும், பரிதாபம் என்பது இயலாமையைக் கண்டு வெளிப்படும் உணர்வு என்றும் கூறுகிறோம்.  எனவே, இயல்பான நிலையில் இயங்கும் சுய அன்பே சுயமரியாதையோடு, கண்ணியமாக வெளிப்படும். 

அறிவும், மனமும், உடலும் இணைந்து செயல்படும் நிலையில், உருவாகும் வெற்றிகளை மகிழ்ச்சியான நினைவுகளாக மனதிற்குப் பரிசளிப்பது விழிப்புணர்வின் கடமை.  இவ்வாறு தனக்குத் தரப்பட்ட இந்த மகிழ்ச்சியை அடுத்த இலக்கு நோக்கிச் செயல்படுவதற்கு ஊக்கம் தரக்கூடிய சக்தியாக வெளிப்படுத்துவது மனதின் சிறப்புத் தன்மையாகும்.

தன்னிடம் இருப்பதைதான் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தன்னுடைய அன்பால் தன்னை வளர்த்துக் கொள்பவர், தனக்குள் இருக்கும் அன்பைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பகிர்வதால் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலைக் கூடுதலாகப் பெறமுடியும்.  

இதனால் மனதில் மேலும் தன்னம்பிக்கை வளர்வதால் ஆரோக்கியமான நேர்மறையான சூழல் சிறப்பாக மலர்கிறது.  இத்தகைய சூழலே வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கிறது.  

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *