வில்பவர் = வில்மா ருடால்ப்:
வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம், என்பதற்கு ஏற்றார்போல மனவுறுதிக்கு உதாரணமாக, மிகச்சிறந்த பாடமாக வாழ்ந்த வில்மா ருடால்ப் 1940ல் பிறந்த அமெரிக்க பெண்.
சமநிலை இல்லாத சமூகத்தில், மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பத்தில், நலிவடைந்த பொருளாதார நிலையில், குறைமாதக் குழந்தையாகப் பிறந்த அவர், கண் திறந்தபோதே கடுமையான சூழல்களைச் சந்தித்தார்.
பிறந்தது முதல் வரிசையாகத் தாக்கப்பட்ட பல நோய்களோடு போராடி, மெதுவாக நடக்கத் தொடங்கிய வயதிலேயே போலியோவினாலும் பாதிக்கப்பட்டார்.
அவரை எப்படியாவது நடக்க வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தோடு போராடிய வில்மாவின் தாய், தொடர்ந்து பல மருத்துவர்களை நாடினார். அப்போது வில்மாவைச் சோதித்த ஒரு மருத்துவர், அவர்மீது கருணைகொண்டு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஷூவை வில்மாவுக்குக் கொடுத்தார்.
குழந்தை வில்மா, மற்றவர் உதவியோடு நடப்பதற்கு (எடைமிகுந்த) அந்த ஷூ தற்காலிகமாக உதவியது. ஆனால், வில்மா சுயமாக நடக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்ட அவருடைய தாய், “உன்னால் நடக்க முடியும்! மனவலிமையோடு தொடர்ந்து முயற்சி செய்!” என்று தொடர்ந்து கூறிய வார்த்தைகள் வில்மாவுக்குள் தன்னம்பிக்கையை நிரந்தரமாக விதைத்தன.
தேர்ந்தெடுத்த வாய்ப்பு:
தான் நடப்பதற்கு உதவியாக, மருத்துவர் தந்த பிரத்தியேகமான ஷூ, தாயின் நம்பிக்கை என்ற இரண்டு வாய்ப்புகளில், தன்னம்பிக்கை ஏற்படுத்துகின்ற தாயின் நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தார் வில்மா. தான் தேர்ந்தெடுத்த அந்த வாய்ப்பைச் செயல்படுத்துவது நடைமுறையில் மிகமிகக் கடினம் என்பதைத் தினமும் அவர் உணர்ந்தார்.
ஆனாலும், இயல்பு நிலையை வெல்வதற்கு இது ஒன்றுதான் வழி என்று மனவலிமையோடு உடல்வலியை ஏற்றுக்கொண்டார் வில்மா. கால்களில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு எண்ணைய்த் தேய்க்கும் தாயின் அன்பாலும், உடன்பிறந்தவர்களின் துணையாலும், தானே தனியாக உறுதியாக நிற்கும் அளவுக்குத் தயாரான வில்மா, விடாமுயற்சியோடு தொடர்ந்து பயிற்சி செய்து, நாளடைவில் நடப்பதற்கு மட்டுமல்ல ஓடுவதற்கும் ஊக்கம் பெற்றார்.
மேலும், தடகளப் போட்டிக்கான சிறப்புப் பயிற்சியாளரின் உதவியினால் வேகமாக ஓடுவதற்கும் கடினமாகப் பயிற்சி பெற்றார். 1956ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் ஆன வில்மா, 400m ரிலே தடகளப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை முதன்முறையாக வென்றார்.
இதனால், கல்லூரியில் படிப்பதற்கான அனுமதியுடன் ஊக்கத்தொகையும் பெற்ற வில்மா மிகுந்த மகிழ்ச்சியோடு கல்வியையும், தடகளப் போட்டிக்கான தீவிரமான பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டார்.
பின்னர், தன்னுடைய இருபதாவது வயதில், ரோமில் நடந்த ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகளில், கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துவிடும் வேகம் கொண்ட வில்மா, ஒரே ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
வேகமான “மான்”, “சூறாவளி” என்று பலரால் குறிப்பிடப்பட்டு, “மின்னல் வேக மங்கை”, என்ற பாராட்டைப் பெற்ற வில்மாவின் சாதனைகள் தடகளப் போட்டிக்கானவை மட்டும் அல்ல தடைகளை வெல்லும் மனவலிமைக்கான வெற்றிகள்.
தன்னுடைய அரிய சாதனைகளால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்த வில்மா, உலக நாடுகளின் பார்வையில், தான் பிறந்த நாட்டின் பெருமையையும் உயர்த்தினார்.
அதோடு நின்று விடாமல், வசதியும் வாய்ப்பும் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தடகளப் போட்டிகளில் ஊக்கம் உள்ள இளைஞர்களுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் இருந்து பலருக்கும் வழிகாட்டியாகவும் விளங்கினார்.
தகுந்த சமயத்தில், முறையாகச் செய்யப்படும் வலிமையான சுயமுயற்சி, கடுமையான தடைகளையும் கடந்து, அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல் கொண்டது என்பதை நிரூபித்த வில்மா, மனவலிமைக்கு நிலைத்த சாட்சியாக இன்றும் நம் நினைவில் நிற்கிறார்.
# நன்றி.