உறுதிமொழிகளை உறுதியாக்கும் மொழிகள்.Words that Confirm the Resolutions. Vurudhimozhigalai Vurudhiyaakkum Mozhigal.

உறுதிமொழிகளை உறுதியாக்கும் மொழிகள்.Words that Confirm the Resolutions. Vurudhimozhigalai Vurudhiyaakkum Mozhigal.

 

 

பாலங்கள்:

கடந்துவந்த அனுபவங்களின் அடிப்படையில் அல்லது எதிர்நோக்குகின்ற முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு நம்முடைய வெளிப்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவ்வப்போது நினைக்கிறோம். 

மனதில் தோன்றிய எண்ணங்களை நடைமுறை மாற்றங்களாகக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு குறிப்பிட்ட ஒருநாளில் அவரவர் விருப்பப்படுகின்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். 

இவ்வாறு நாம் விரும்பும் மாற்றங்களைத் தரவல்ல நம்முடைய எண்ணங்களுக்கும், நடைமுறையில் உள்ள செயல்முறைகளுக்கும் இடையே இருக்கும் இணைப்புப் பாலங்களாக இந்த உறுதிமொழிகள் செயல்படுகின்றன.  

இத்தகைய உறுதிமொழிகள் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் வலுவிழந்து எந்த மாற்றமும் நிகழ்த்தாத, என்றும் மாறாத உறுதிமொழிகளாக அப்படியே இருப்பதாக சிலருக்குத் தோன்றலாம்.  இதனால் இணைக்கப்படாத பாலங்கள் போல இருக்கும் செயல்படுத்த முடியாத உறுதிமொழிகள் மீது அவர்களுக்குப் பெரிதாக நம்பிக்கை இருப்பதில்லை.  உறுதிமொழிகள் மீது இருக்கும் அத்தகைய எண்ணத்தை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பாகவும் இந்தப் பதிவு இருக்கலாம்.   

ஏனெனில், ஒரு உறுதிமொழியைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துவது என்பது நம்முடைய பலம் பலவீனம் இரண்டையும் புரிந்துகொண்டு, நமக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் ஏற்படுத்தாமல் நமக்கேற்ற வகையில் முறைப்படுத்தி செயல்படுத்துகின்ற ஒரு வழியாக இருக்கிறது. 

நாமே விரும்பி தீர்மானித்துக்கொள்ளும் ஒரு உறுதிமொழி, நம்முடைய நடைமுறைகளை மேம்படுத்த உதவும் பல வழிகளுள் ஒன்றாக இருக்கிறது.  இது, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நம்முடைய நல்ல செயல்களுக்குத் துணையாக இயங்கும் புதிய தீர்மானமாக, கூடுதலான சில நன்மைகளைத் தந்து நம்மை உயர்த்துகின்ற நம்பிக்கையான வாய்ப்பாகவே இருக்கிறது. 

எனவே, இந்தத் தீர்மானத்தை முறையாகச் செயல்படுத்துவதில் நாம் காட்டும் உறுதி நம்முடைய மனஉறுதிக்கும் ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பது இதில் உள்ள கூடுதலான பலனாகும்.  இந்த உறுதியான எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் நமது அணுகுமுறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுவது பற்றிய சிந்தனையின் பகிர்வுதான் இந்தப் பதிவு.     

உறுதியாக்கும் மொழிகள்:

நாம் உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றோ அதை பின்பற்ற வேண்டும் என்றோ வேறு எவரும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை.  ஆனால் நம்முடைய நன்மைக்கு அக்கறை காட்டும் முதல் நபராக நாம் இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு நம்முடைய உறுதிமொழியை நாம்தான் உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்ற ஆளுமையைத் தருகிறது.

அத்தகைய ஆளுமையோடு நாம் தொடர்ந்து செயல்படுகின்ற நிலையில், நம்முடைய முயற்சியின் தீவிரத்தை அளவிடுகின்ற சூழ்நிலைகளும், நம்முடைய கவனத்தை வேறுதிசையில் ஈர்க்கும் காரணிகளும், விதவிதமாக ஏற்படும் கூடுதலான குறுக்கீடுகளும் நம்முடைய மனதின் தகுதியை நாமே அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இருந்து நமது மனஉறுதியை (willpower) அதிகப்படுத்துகின்றன.  

அன்புக்கு அடையாளமாக, நட்புக்கு உதாரணமாக, உரிமையின் உச்சமாக, சமூகக் கடமையாக என்று எப்போதும் சிறந்த அணுகுமுறைகளோடு உழைப்பைப் பரிமாறுகின்ற நாம், நமக்காக உழைக்கவேண்டிய வாய்ப்புகளில் மட்டும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்வதும், நம்மை உணர்ந்து ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை வலுவிழக்கச் செய்வதும் நம்மிடம் நாம் காட்டும் நேர்மையான அணுகுமுறை ஆகாது அல்லவா!  

வரும் நாளெல்லாம் வழக்கமான நாளாக கடந்து போகும் நிலையை மாற்றி, நேற்றிலிருந்து இன்று நமக்குள் ஏற்படுகின்ற வளர்ச்சிக்கு ஆரம்பமாக, நேர்மறையான உற்சாகத்தைத் தருகின்ற சிறந்த முயற்சியாக, ஊக்கத்தின் வாய்ப்பாக செயல்படுகின்ற உறுதிமொழி சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது குறிப்பிடத்தக்க விளைவுளைத் தரக்கூடியது. 

சிந்தித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதிமொழி, முன்னேற்றத்திற்கு அவசியம் தேவைப்படுவதாக, தகுதியை, பண்பை வளர்க்கக்கூடியதாகவே நிச்சயம் இருக்கும்.  எனவே, இத்தகைய உறுதிமொழி நிறைவேறுகின்ற நிலையில் உருவாகும் வெற்றி நம்மில் ஒரு அங்கமாக மாறிய பின்னர் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தினமும் சில நிமிடங்கள் மனதில் காட்சிப்படுத்துவதால் மனதில் உருவாகும் ஆற்றல் தொடர்ந்து செயல்படும் சக்தியை அளிக்கும். 

மேலும், எதற்காக இந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிப்பான காரணத்தை ஒவ்வொரு நாளும் மனதிற்கு பக்கபலமாக நின்று நினைவூட்டல் செய்யும்போது அந்தக் குறிப்பிட்ட உறுதிமொழி உறுதியான செயல்களாக வெளிப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம் உள்ளன.   

நம்பிக்கைகள்: 

உறுதிமொழியைச் செயலாக்கத் தொடங்கும்போதே முழுமையான பலனைத் தந்து நம்மை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும் என்று நினைப்பது அதீத எதிர்பார்ப்பு.  மனதின் எண்ணத்தில் மென்மையாக இருக்கும் உறுதிமொழி சிறந்த செயலாக முதிர்ந்து வெற்றியைப் பெறுவதற்கு அதற்குரிய நேரமும் தேவைப்படும் என்பதால், தினமும் அதற்கான முறையான உழைப்பும், அந்த உழைப்பே பழக்கமாகின்ற வழக்கமும்தான் உறுதியான வெற்றியைத் தரும் வழியாக இருக்கிறது.  

சிறப்பான விளைவுகளைக் கருத்தில்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக்கியமான உறுதிமொழியை, தினமும் ஊக்கத்தோடு செயல்படுத்துவதற்கான நம்பிக்கையின் குறியீட்டை, உற்சாகத்தைத் தரக்கூடிய ஒரு அடையாளத்தை நம் கண்ணெதிரே உருவாக்குவது நினைவூட்டலுக்கான சிறந்த உக்தியாக இருக்கும்.

அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தவேண்டிய செயலாக மாற்றி, அதை பல பகுதிகளாகப் பிரித்து அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதியையும் actionable actions எனப்படும் எளிய செயல்களாகப் பிரித்து நடைமுறைப்படுத்துவது தொடக்கநிலை. 

இவ்வாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் நடைமுறையாக மாறுகின்ற அனுபவத்தை அந்தப் பகுதிக்கான சிறிய வெற்றியாக உணர்வதும், இவ்வாறு தொடர்ந்து செயல்படும் பல பகுதிகளின் அனுபவங்கள் இணைந்து இயல்பான பழக்கமாகின்ற வெற்றிகளின் தொகுப்பும், நாம் எதிர்நோக்கும் முன்னேற்றத்தைத் தருகின்ற சிறந்த விளைவாக இருக்கும்.

வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் வளர்ச்சிகளும் மாற்றங்களும் நமக்கு முன்னேற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால் அவை பெரும்பாலும் இயற்கையான வளர்ச்சியாக மற்றும் கட்டாயத்தினால் ஏற்படுத்தப்படுத்தப்படுகின்ற மாற்றமாகவே பெரும்பாலும் இருக்கின்றன. 

அதே நேரத்தில், நாமே விரும்பி வளர்த்துக்கொள்ளும் திறமைகளும், ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களும் நம்முடைய முயற்சிகளின் விளைவுகளாக இருக்கின்றன.  மேலும் அவை மனதிற்கு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் தருபவையாகவும் இருக்கின்றன.  இவ்வாறு வெளிப்படுகின்ற நம்முடைய முயற்சிகளின் சான்றுகளைப் பெறுவதற்கு உதவுகின்ற உறுதிமொழிகள், நம்மை மேலும் உறுதியாக்கும் பயிற்சிகளாகவும் விளங்குகின்றன. 

நண்பர்கள் அனைவரும் இத்தகைய பயிற்சிகளின் வெற்றிகளை, சிறந்த முன்னேற்றங்களை என்றென்றும் மகிழ்ச்சியாகப் பெறவேண்டும் என்ற வாழ்த்துகளுடன் நன்றி கூறுகிறேன்.   

 

#  நன்றி.  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *