சுறாக்களின் தாய்:
பரந்து விரிந்திருக்கும் கடலில் பிரமாண்டமாக வலம்வரும் சுறாக்களைத் தனது அன்பின் வலிமையால் குழந்தைகளாக்கிக் கொண்டவர் கிறிஸ்டினா. இவர், கடலுக்குள் வாழும் சுறாக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் பிரச்சனைகளை நீக்கினார் என்பதே மிகவும் ஆச்சர்யம் தருகிறது என்றால், கிறிஸ்டினாவுடன் சுறாக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அன்பான பிணைப்பு என்பது, நமக்கு மேலும் பெருவியப்பைத் தருகின்ற நெகிழ்ச்சியான காட்சியாக இருக்கிறது.
இத்தாலியில் 1971இல் பிறந்த கிறிஸ்டினா செனட்டோ (Cristina Zenato) கடல் சூழலியல் நிபுணராக, சுறாக்களின் நடத்தைகளின் நிபுணராக அறியப்படும் இவர் ஒரு இயற்கை பாதுகாவலர். Scuba diving எனும் முறையில் கடலில் மூழ்கி சூழலை ஆராயும் இவர், கரீபியன் கடலின் அடிப்பரப்பில் உள்ள சுறாக்களைத் தனது நேயத்தால் அணுகி அன்பு காட்டியதால் சுறாக்களின் தாய் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கூபா டைவிங் கற்றுக்கொள்ள பகாமா தீவுகளுக்குப் பயணம் செய்த கிறிஸ்டினா அங்கேயே தன் வாழ்விடத்தையும், ஸ்கூபா டைவிங்கை தன்னுடைய வாழ்க்கையாகவும் அமைத்துக்கொண்டார். வெவ்வேறு இடங்களில் உள்ள, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட சுறா இனங்களோடு இவர் பழகிருந்தாலும், கரீபியன் ரீஃப் சுறாக்களுடன் பழகும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது என்று கூறுகிறார்.
ஒருமுறை, ஸ்கூபா டைவிங் மூலம் தகுந்த கருவிகளோடு கடலில் மூழ்யிருந்த கிறிஸ்டினா தன்னை நோக்கி வந்த ஒரு சுறாவைக் கண்டதும் சற்று எச்சரிக்கை அடைந்தாலும், அந்தச் சுறா தன்னிடம் மென்மையாக அணுகுவதைக் கவனித்தார். எனவே, அதை மெதுவாக வருடிய அவர் அதற்கு ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அது தன்னிடம் உதவி கேட்கிறது என்பதையும் உணர்ந்தார்.
அதனுடைய பாதிப்பைக் குறிப்பாக அறிந்துகொள்ள முயற்சி செய்து தேடியபோது, அதனுடைய வாயினுள் மீன்பிடி முள்கொக்கி குத்தியிருப்பதைக் கவனித்தார். உடனே அந்தச் சுறாவின் வாய்க்குள் கையை விட்டு அங்கு குத்தியிருந்த முள்கொக்கியை அகற்றினார்.
அப்போது வலியிலிருந்து விடுதலையான சுறாவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த கிறிஸ்டினாவை மேலும் பல சுறாக்கள் சூழ்ந்துகொண்டன. இதனால் சற்றுத் திகைத்த அவர் அவைகளின் உடல்மொழியைப் புரிந்துகொண்டு அவை எல்லாமே இத்தகைய முள்கொக்கிகளால் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டதும் அதிர்ந்தார்.
மேலும், சுறாக்களின் வேகமான தகவல் பரிமாற்றத்தைக் கண்டு வியந்த அவர், தனது அன்பின் வலிமையால் துணிச்சலோடு முயன்று, இன்றுவரை அவற்றின் துயர்த்தீர்க்கப் பாடுபடுகிறார். இவ்வாறு கடந்த முப்பது வருடங்களில் இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட முள்கொக்கிகளைச் சுறாக்களின் வாயிலிருந்து அகற்றியிருக்கிறார்.
கிறிஸ்டினா கடலுக்குள் வந்ததும், சிறிதும் பெரிதுமாகப் பல சுறாக்கள் அவரை அன்போடு சுற்றி வருவதும், குழந்தைகளைப் போல மடியில் தலை வைத்துக்கொள்வதும் என சுறாக்கள் அவரிடம் வெளிப்படுத்தும் அன்பு பார்க்கும் நம்மை மனம் நெகிழச் செய்கின்றன. சுறாக்கள் சிரிக்கின்றனவோ என நினைப்பதுபோல நீண்ட பல் வரிசைகளைக் காட்டுகின்ற அந்தச் சுறாக்களுக்குப் பெயர் வைத்து நட்பாகப் பழகும் சுதந்திரம் அவருடைய அன்புக்குக் கிடைத்த தனிச்சிறப்பு.
அன்பான ஸ்பரிசத்தில் தங்களைத் தளர்த்திக்கொள்ளும் ரீஃப் சுறாக்கள், தன் மடியில் தூங்குவதுபோல் இருந்தாலும் தங்களது சூழலில் எப்போதும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. மேலும், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உடல்மொழியும் அணுகுமுறையும் கொண்டிருக்கின்றது என்று ஒரு தாயின் மகிழ்ச்சியோடு தனது குழந்தைகளின் தன்மைகளைப் பகிர்ந்துகொள்கிறார் கிறிஸ்டினா.
இத்தாலியன், ஆங்கிலம், ஜெர்மனி, பிரென்ச், ஸ்பானிஷ் என்று பல்வேறு மொழிகளை அறிந்திருக்கும் கிறிஸ்டினா, கூடுதலாக சுறாக்களின் மொழியையும் அறிந்திருப்பதால் இவரை “shark whisperer” என்று மற்றவர்கள் கூறினாலும், இவர் தன்னை “shark listener” என்று கூறுவதையே விரும்புகிறார்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
என்ற வள்ளுவரின் வாய்மொழியின் பொருளாகத் தனது அறிவின் உயர்வைக் காட்டியிருக்கும் கிறிஸ்டினா, பேச்சாளர், எழுத்தாளர் என்ற பல திறமைகளோடு, PADI Course Director, (Instructor of Instructors), NSS-CDS Advanced Cave Diving Instructor, TDI Technical Instructor, Rebreather Instructor, Educator, Photographer, Shark Behaviorist and Marine Ecologist, என இவர் பெற்றிருக்கும் பெருமைகள் அனைத்துமே இவருடைய தனித்துவமான அன்புக்கு அணிகலன்களாக ஜொலிக்கின்றன.
இயற்கையின் படைப்பில் மாபெரும் நீர்த்தொட்டியாக விளங்கும் கடல், செயற்கையான எந்தக் குப்பைகளும் இல்லாத இடமாக இருந்தால், அதுவே அங்கு வாழும் உயிரினங்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையாக நீடித்திருக்கும். அதற்கு வாய்ப்பு இல்லாத இன்றைய நிலையில் துணிச்சலாக முன்வந்து கடல் சூழலியலில் சேவை செய்யும் கிறிஸ்டினா, எண்ணற்ற சுறாக்களுக்கு நம்பிக்கைத் தருகின்ற கருணை நிறைந்த தாயாகவும், கடல்வாழ் உயிரினங்களின் சூழ்நிலையை நமக்கு உணர்த்துகின்ற தூதுவராகவும் செயல்படுகிறார்.
# நன்றி .