WISH YOU HAPPY NEW YEAR
அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள், புத்தாண்டின் உற்சாகம் போலவே தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளையும் வரவேற்று உபசரிப்போம். அந்தந்த நாளுக்கான ஆக்கபூர்வமான வேலைகளை நேர்த்தியாகவும், நயமாகவும் செய்து, ஒவ்வொரு நாளையும் சிறப்பித்தால், நமக்கான எல்லா நலன்களும், வளங்களும் நிச்சயம் நம்மை வந்து சேரும்.
கடந்து சென்ற காலங்கள், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பாடங்கள். இன்று நாம் நடக்கும் வழித்தடமே, வரும்நாளில் வெற்றிக்கு வழியாகும். எனவே புத்துணர்ச்சியோடு புதுப்பாதை அமைத்திடுவோம். சிந்தனையில் தெளிவு பெற்று, சீர்மிகு செயல்கள் செய்து, சிறப்புடன் வாழ்ந்திடுவோம்.
நமக்குக்கிடைத்த நன்மைகளுக்கு இறைவனிடம் நன்றி கூறுவோம். இனிமேல் கிடைக்கவிருக்கும் நன்மைகளுக்கு நம் தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். நேர்மறையான உறவுகளையும், நட்பையும் மதித்து மனமார்ந்த அன்பு பாராட்டுவோம்.
ஒளிரும் விளக்குத் தன் சுற்றுப்புறத்தையும் ஒளிரச்செய்யும். அதுபோல நம்முடைய நல்ல எண்ணங்கள் நம் சுற்றுப்புறத்தையும் நிறைத்து, நல்ல நேர்மறையான சூழ்நிலைகளையும் உருவாக்கும். அன்பால் நிறைந்து, ஆற்றலால் ஒளிரும், இனிமையான புதியதோர் உலகம் காண்போம்.
காலங்கள் எப்போதும் எண்களில் தொடங்கி, எண்ணங்களால் நிறைகின்றன. எனவே நல்ல எண்ணங்களை மனதில் நிறைத்து, வரும் நாட்களை வரவேற்போம். உலகம் முழுவதும் அன்பை விதைத்து நம்பிக்கையோடு நன்மைகள் பெறுவோம். மனநிறைவோடு வாழ்ந்து, மகிழ்வோம், மகிழ்ந்திருப்போம். வாழ்த்துகளுடன் நன்றிகள்.