உயிர்களிடத்தே அன்பு வேண்டும்:
“அன்பின் வழியது உயிர்நிலை” என்று வள்ளுவர் கூறியது போல், அன்புடன் இருப்பதே உயிருடன் இருப்பதற்கான உண்மையான ஆதாரம் ஆகும். உலகில் வாழும் உயிர்களிடத்தில் எந்தப் பேதமும் இல்லாமல் அன்பு செலுத்துவதே அன்பின் உயர்ந்த நிலையாகும்.
அத்தகைய அன்பின் காரணமாக வள்ளல்கள் வாடியவர்களுக்கும், பாடியவர்களுக்கும் வாரி வழங்கி மகிழ்ந்தனர். தேவையறிந்து கொடுப்பது உதவி. அவ்வாறு ஆராயாமல் கொடுப்பதுதான் வள்ளல் தன்மை. இது அன்பின் உயர் நிலையில் ஒரு நொடியில் நிகழ்ந்து விடுவது.
இதனால்தான், முல்லைக்குத் தேர் கொடுத்தப் பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன், புறாவைக் காப்பதற்காகத் தன்னுடைய சதையைக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி போன்ற வள்ளல்களின் செயல்களை நினைத்து இன்றும் நாம் வியப்படைகிறோம்.
கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்கள் பாரி, ஓரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, பேகன் ஆகியோர் எளியோர்க்குக் கொடுப்பது கடமை என்றும் “ஈதலே இன்பம்” என்றும் உணர்த்துகிறார்கள்.
பண்பு:
வள்ளல்கள், தங்களை நாடி வந்தவர்களுக்குச் சிறப்பான பொன்னையும், பொருளையும் பரிசுப் பொருட்களாகத் தந்ததோடு அவற்றை எடுத்துச் செல்ல தன் நாட்டின் படை பலத்தின் பெருமையை உயர்த்தி நிற்கும் யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏற்றி பரிசில் பெற்றவர் உளம் மகிழும்படி செய்வார்கள்.
இதனால் பரிசில் பெற்றவரும், பெருமையாகத் தனது ஊர்மக்களோடு பொருட்களைப் பகிர்ந்தளித்து வாழ்ந்தனர். மற்றவர்களுக்கும் ஆற்றுப் படுத்தினர் (வழி காட்டினர்).
நாடி வந்தவர்களுக்குக் கொடுப்பதற்கு இந்த அளவு போதுமென்று வள்ளல்கள் அளவு பார்த்துக் கொடுத்ததில்லை. கொடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் இருப்பதும் கொடுத்து, இன்னமும் கொடுத்து இணையில்லாப் புகழ் பெற்றனர்.
எனவே, மூவேந்தர்களின் புகழைக் காட்டிலும் குறுநில மன்னர்களாக வாழ்ந்த வள்ளல்களின் புகழே உயர்ந்து இருந்தது. இதனால் ஏற்படுத்தப்பட்ட இடையூறினாலும், போரினாலும் அவர்களின் ஆட்சிக்காலம் முடிந்தது. என்றாலும், அவர்களின் வள்ளல் தன்மையால் வரலாற்றுப் புகழோடு இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
குமண வள்ளல்:
பிற்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களில் நம் மனதை நெகிழச் செய்பவர் குமண வள்ளல். இவர், முதிர மலை என்னும் செழிப்பான நாட்டை ஆண்ட குறுநில மன்னர். ஒருநாள் இவருடைய அரண்மனைக்குப் பெருந்தலை சாத்தனார் எனும் புலவர் வருகிறார். வறுமையில் வாடும் தன் ஊர் மக்களின் நிலையை மன்னனிடம் கூறுகிறார்.
புலவரின் நிலையறிந்த குமண வள்ளலோ நெஞ்சம் உருகினார். இதனால் பெருந்தலை எனும் அவருடைய ஊரே புது வாழ்வு பெரும் வகையில் பெட்டி பெட்டியாகப் பொன்னும் பொருளும் அடுக்கி வைத்த யானையைப் பரிசிலாகக் கொடுத்து அனுப்பினார்.
இதைக் கண்ட இளங்குமணன் தன் அண்ணன் கூடிய சீக்கிரத்தில் பொற் களஞ்சியத்தையே (கஜானா) காலியாக்கிவிடுவார் என்று அஞ்சி குமணனைக் காட்டிற்கு அனுப்பினான். அத்தோடு அவரைக் கொல்லவும் ஆட்களை அனுப்பினான்.
ஆனால் அவர்களோ குமணன் மீது இருந்த அன்பினால் அவரைக் கொல்லாமல் காட்டில் விட்டுச் சென்றனர். பின்னர் இதைத் தெரிந்துகொண்ட இளங் குமணன் (தன் அண்ணன்) குமணனின் தலைக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என அறிவித்தான்.
இந்த நிலையில் குமணனைக் காண்பதற்காக அரண்மனை சென்ற பெருந்தலை சாத்தனார் சூழ்நிலையின் விபரீதத்தை அறிகிறார். குமணன் மீது அவர் கொண்ட அன்பால், காட்டில் அலைந்து திரிந்து பின்னர் தேடி கண்டுபிடிக்கிறார்.
தன்னை நாடி வந்தவர்க்கே பரிசில் தந்து பழக்கப்பட்டவர் குமணன். இப்போது தன்னை தேடி வந்திருக்கும் புலவருக்கு என்ன தருவது என்று யோசித்தார். சட்டென தன் உடைவாளை எடுத்துப் புலவரிடம் கொடுத்தார்.
தன் தலைக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக தன் தம்பி அறிவித்திருப்பதைக் கூறி அதைப் பெற்றுக் கொள்ளுமாறு புலவரிடம் கூறினார். புலவர் தன் மதி நுட்பத்தால் ஒரு செயல்திட்டம் தீட்டி, இளங் குமணனிடம் சென்று அவன் தவறை உணரச் செய்து, குமண வள்ளல் மீண்டும் மன்னராக அரியணை ஏறுவதற்கு உதவினார்.
குமண வள்ளல் அன்பினால் தன் தலையையும் கொடுக்கத் துணிந்தாலும் “தர்மம் தலை காக்கும்” என்று கூறுவது போல அவர் செய்த தர்மமே அவரைக் காத்தது என்று தெரிகிறது. வறியவர் துயர் தீர்க்கும் வள்ளன்மையின் மகிழ்ச்சி அனைத்தையும் விட உயர்வானது என இவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
வள்ளல்களின் வரிசையில்:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த வள்ளல்களைப் பற்றிய வரலாற்று கதைகள், இன்றும் நமக்கு பெருவியப்பைத் தருகின்றன. வள்ளல்கள் என்றாலே மன்னர்களாக, பெருந்தனக்காரர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் வலிமையாக நம் மனதில் இருக்கிறது. இதற்குக் காரணம் நாம் பள்ளியில் படித்த இத்தகைய வள்ளல்களின் வரலாற்றுப் பதிவுகளாகக் கூட இருக்கலாம்.
இவர்களின் காலத்துக்குப் பிறகும் நிறைய வள்ளல்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வள்ளல்களின் வரிசையில் பிரபலமானத் துறைகளில் இருந்தவர்களுள் ஒரு சிலரை நாம் அறிந்திருக்கலாம். நாம் அறிந்து கொள்ளாத பல வள்ளல்கள் காலம் தோறும் (வாழ்ந்து) வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அத்தகைய ஒரு வள்ளல்தான் “ஐயா, பாலம் கல்யாண சுந்தரம்” அவர்கள். கருணை பொங்கும் உள்ளம் கொண்ட தன் தாயின் வார்த்தைகளை தன்னுடைய வாழ்க்கையாகவே கொண்டவர். பல துறைகளில் பட்ட மேற்படிப்புகள் படித்த இவர் பல்கலைக்கழக முதல் மாணவராக திகழ்ந்தவர். நூலக அறிவியலில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
அன்பின் பாலம்:
படிக்கும் காலத்திலேயே எட்டரை பவுன் சங்கிலியை தேசிய பாதுகாப்பு நிதிக்காகக் கொடுத்தவர். 35ஆண்டு காலம் நூலகத்துறையில் உழைத்ததன் பலனாகக் கிடைத்த 30லட்சத்தையும் பாலம் எனும் (ஏழை மக்களுக்காக) அறக்கட்டளை அமைத்து, அதில் கொடுத்து விட்டார்.
அமெரிக்காவில், ஐயாவைப் பாராட்டி இவரைப் போன்ற வள்ளல், உலகில் வேறு எவரும் இல்லை என்று “Man Of Millennium” (ஆயிரம் ஆண்டுகளுக்கான சிறந்த மனிதர்) என்ற விருது கொடுத்தனர். அப்போது பரிசாகக் கொடுக்கப்பட்ட 30 கோடியை அப்படியே குழந்தைகள் நலனுக்காக அளித்து உலக மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.
மேலும், தன் குடும்பத்தில் தனக்குக் கிடைத்த 50லட்சம் மதிப்புள்ள சொத்தையும் ஏழை மக்கள் நலனுக்காகக் கொடுத்தார்.
நலம் காக்கும் நல்லோர்:
பிரபலமான நடிகர் ஒருவர் ஐயாவைத் தந்தையாகத் தத்து எடுத்துத் தன்னுடன் வந்து இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பை மதித்து நன்றி கூறிவிட்டு அவர் கொடுத்தப் பரிசுகளை ஏழைகளுக்கே கொடுத்து விட்டார்.
அந்த நடிகர் மட்டுமல்ல ஐயாவிடம் அன்பு கொண்டவர் யாராக இருந்தாலும் அவர்களுடைய அன்பை மதிக்கும் இவர் ஒரு ஏழை பங்காளர். எனவே தன்னிடம் பிறர் தரும் பணம், பொருள், பரிசுகள் அனைத்தையும் எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக அளித்து இரு தரப்பினருக்கும் அன்பு பாலமாக விளங்குகிறார்.
அன்புடையார்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்று திருவள்ளுவர் கூறியதுபோல, அன்புடையவர்கள் தம் உள்ளத்து அன்பை வெளிப்படுத்த அனைத்தையும் அள்ளிக் கொடுத்தாலும் போதாது என்று தங்களையும் பிறருக்காகக் கொடுத்திருக்கிறார்கள். அத்தகைய ஈடு இணையற்ற அன்பு கொண்ட பெருமக்களை வள்ளல்கள் என்று கூறுகிறோம்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பிறர் நலன் பேணும் பேராண்மை மிக்க ஐயா, தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாதவர். அது மட்டுமல்ல, தன்னையும் முழுமையாகப் பிறர் பயன்படுத்தும் வகையில் தன் உடல் உறுப்புகளையும் மருத்துவத் துறைக்கு எழுதி வைத்து விட்டார். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதற்குச் சான்றாக இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், “A Most Notable Intellectual in the World” என்ற பட்டத்தை ஐயா அவர்களுக்கு வழங்கியது. மேலும் “நூலகத் துறைக்கு நோபல் பரிசு என்று இருந்தால் அதைப் பெறுவதற்கு தகுதியானவர்” என்றும் அறிவித்தது.
இவ்வாறு, இக்கால வள்ளல் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்கள், “ஈத்துவக்கும் இன்பமே இணையற்றது” என்பதை அவரது செயல்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
கலங்கரை விளக்கம்:
தனக்கிருப்பது ஒருவேளை உணவேயானாலும், பசியால் வாடும் வேறொருவருக்கு அதைக் கொடுத்து மகிழும் உள்ளம் படைத்த “அன்புடையவரே எல்லாம் உடையவர்” ஆவார்.
அன்னபூரணி என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியை தன்னுடைய தங்கநகையைப் பயன்படுத்தி தன் பள்ளிக் குழந்தைகளுக்குச் சிறப்பான உள் கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். பல நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் பிள்ளைகளின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப் படுத்தியுள்ளார். மேலும் தன்னுடைய சுய முயற்சியால் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் சரளமான பேச்சு பயிற்சியும் அளிக்கிறார்.
தன் கடமையை நேர்மையுடன் நன்கு செய்து அன்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியரை மாணவர்கள் வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியுடன் நினைப்பார்கள். மாணவர்கள் நலன் கருதி அவர்களிடம் பேரன்பு கொண்டு அக்கறையுடன் வழிகாட்டும் ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் மட்டுமல்லாது மக்களின் மனதிலும் நிறைந்து இருப்பார்கள்.
வள்ளல் தன்மை எனும் விருட்சத்தின் விதை கருணையாகும். பொன், பொருள் மட்டுமல்ல அறிவு, கல்வி, வழிகாட்டுதல் என “அன்பை” எந்த வடிவத்தில் கொடுத்தாலும் அது எளியோரை உயர்த்தும் எனில் கொடுப்பவரை உலகம் வாழ்த்தும். அன்பு கொண்ட அனைத்து உள்ளங்களும் இதில் ஒரே கருத்துடன் செயல்படும் என்ற நம்பிக்கையுடன் நன்றி கூறுகிறேன்.
*தொடர்ந்து படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றி.