முகைக்குள்ளே வாசம் வைத்து,
கனிக்குள்ளே சுவையை வைத்து,
விதைக்குள்ளே விருட்சம் வைத்து,
விந்தைகள் செய்யும் இறைவன்!
பனிக்குள்ளே தண்மை வைத்து,
தணலுக்குள் கனலை வைத்து,
மலைக்குள்ளே சுனையை வைத்து,
மௌனத்தில் பேசும் இறைவன்!
மண்ணுக்குள் பொன்னை வைத்து,
விண்ணுக்குள் மின்னல் வைத்து,
கண்ணுக்குள் ஒளியை வைத்து,
காட்சியாய் விளங்கும் இறைவன்!
கல்லுக்குள் சிலையை வைத்து,
கடலுக்குள் ஆழம் வைத்து – அதை
அண்டத்துள் அடக்கி வைத்து,
அனைத்துமாகி நிற்கும் இறைவன்!
கரும்புக்குள் சாறை வைத்து,
கார்முகிலுக்குள் நீரை வைத்து,
கருத்தினுள் தெளிவை வைத்து,
கருவிலே திருவாகும் இறைவன்!
பாலுக்குள் நெய்யை வைத்து,
நாளுக்குள் நடப்பை வைத்து,
உடலுக்குள் உயிரை வைத்து,
உள்ளோடு உறவாடும் இறைவன்!
நீர்க்குமிழி பிறவி வைத்து,
நீந்தநல் வாழ்க்கை வைத்து,
நெஞ்சமெனும் கோயில் வைத்து,
நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன்!
பொறிக்குள்ளே புலனை வைத்து,
புலனுக்குள் பலனை வைத்து,
பலனுக்குள் பாதை வைத்து,
பாதையின் ஆதியாகும் இறைவன்!
ஒன்றிலே ஒன்றை வைத்து,
ஒன்றையும் மறைத்து வைத்து,
ஒன்றுமாறு வழியும் வைத்து,
ஒன்றாக உயர்ந்து நிற்கும் இறைவன்!
# நன்றி.