அனுபவம்:
நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும், நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவமாகப் பதிவாகின்றன. அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும், வாழ்க்கை முறைகளைப் பொருத்தும் அமைகிறது.
இந்த நிலைகளை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளுக்குத் தனிப்பட்ட நம்முடைய அணுகு முறைகளும், நடத்தை முறைகளும் (approach and attitude) மிக முக்கிய காரணமாக இருக்கின்றன.
நம்முடைய சிறிய செயலோ, சிந்தனையின் மாற்றமோகூட வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.
மேலும், வழக்கறிஞராக மட்டுமே இருந்திருக்க வேண்டிய அவரது அனுபவத்தை, தேசத்தந்தையின் அனுபவமாகவும், உயர்த்தியது. நம்முடைய அணுகுமுறைகளும், நடத்தைகளும் நம் வாழ்க்கையை உயர்த்துவதோடு நம் அனுபவங்களைச் சிறப்பிக்கும் தன்மை வாய்ந்தவையாகவும் விளங்குகின்றன.
நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் சிறப்பிக்க பல்வேறுபட்ட சூழ்நிலைகளைக் காலம் உருவாக்குகிறது. அந்தச் சூழல்களில் நாம் மூழ்கி விடாமல் அவற்றை எப்படி அணுகுவது என்று சிந்தித்து அதற்கு ஏற்றவாறு பக்குவமாகச் செயல்படுவதே அனுபவத்தைச் சிறப்பாக்கும்.
அனுபவங்களே வாழ்க்கையின் அடிப்படையான கட்டமைப்பு என்பதால் அதற்கான வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்த, தெளிந்த சிந்தனை வேண்டும். வாழ்க்கையைப் பொழுதுபோக்குத் திண்ணையாகப் பயன்படுத்திவிட்டு, பின்னர் கழிவிரக்கம் கொள்வதிலோ, மற்றவர்களைக் குறை சொல்வதினாலோ பயனேதும் இல்லை.
கிடைத்தச் சூழ்நிலைகளைச் சோதனைகளால் உழுது புது முயற்சிகளை விதைத்தவர்களே சிறந்த அனுபவங்களை அறுவடை செய்து உயர்ந்து நிற்கிறார்கள்.
சவால்களைக் கண்டு அஞ்சுபவர்களுக்குச் சாதாரண வாழ்க்கைகூட சவாலாகத் தெரியும். சோதனைகளும், சவால்களும், தோல்விகளும் இல்லாத வாழ்க்கையே கிடையாது என்பதை ஏற்றுக்கொண்டு நடைமுறையை நாம் சிறப்பாகக் கையாள்வதுதான் உயர்வு.
சூழ்நிலைகள்:
இந்த நிலைக் கடந்து அவர் மருத்துவ கல்லூரிக்குச் சென்றபின்னர், கர்னல் ஜிப்போர்ட் என்ற பேராசிரியர் பெண்களைத் தன்னுடைய வகுப்பில் அனுமதிப்பது இல்லை என்ற பிடிவாதமான மனநிலையில் இருந்தார். இத்தனை சவால்களையும் மனஉறுதியோடு எதிர்கொண்டு நன்கு படித்து 1912ஆம் ஆண்டு பட்டம் பெற்ற முத்துலட்சுமி அவர்கள் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரானார்.
“இன்று சென்னை மருத்துவ கல்லூரியின் பொன்னான நாள்” என்று (அனுமதி மறுத்த) கர்னல் ஜிப்போர்ட் அவர்களே பாராட்டும் அளவுக்குத் தனக்கு எதிரான சூழ்நிலைகள் அனைத்தையும் வென்று சாதனைகளாகப் படைத்தவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள்.
Ice breaker ship என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுபோல சூழ்ந்திருந்த தடைகளைத் தகர்த்தெறிந்து தானும் முன்னேறி பின்வரும் சமுதாயத்திற்கும் வழிகாட்டிய விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
மூத்தோர் வாக்கு:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
என்ற வள்ளுவர் ஒருவருடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவரவர் செய்த செயல்களே சாட்சியாக நிற்கின்றன என்று சொல்கிறார். கனியன் பூங்குன்றனார் அவர்களும், தீதும் நன்றும் பிறர் தர வாரா, என்று கூறி, நம்முடைய செயல்களின் விளைவுகளுக்கு நாம்தான் முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என்று உணர்த்துகிறார்.
நாம் காரணமாக இல்லாமல் நம்முடைய செயல் ஏதுமின்றி தன்னிச்சையாக ஏற்படுவதுதான் சூழ்நிலை. அது நல்வாய்ப்பாகவோ அல்லது சோதனையாகவோ இருக்கலாம். அதை நாம் எப்படி எதிர்நோக்குகிறோம், எவ்வாறு கையாள்கிறோம் என்பதுதான் வாழ்க்கை அதன் பயனாகவே சிறந்த அனுபவம் விளைகிறது.
தோல்வி ஏற்பட்டால் அடுத்தவரைக் குறைசொல்வதும், இயலாமைகளைப் பட்டியலிட்டுச் சுயபச்சாதாபம் கொண்டு தன்னுடைய அனுபவங்களை தாழ்வு மனப்பான்மையால் நிரப்புவதும் அறியாமையாகும். தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டு, துணிந்து போராடுபர்கள் சோதனைகளால் புடம் போடப்போட்டு, அனுபவத்தால் மெருகேறி, வாழ்க்கையில் ஒளிவீசி வழிகாட்டிகளாக என்றும் ஜொலிக்கிறார்கள்.
சோதனைகளும், தோல்விகளும் கற்றுத் தரும் பாடமே நல்ல அனுபவத்தைத் தந்து, வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகுக்கும். இந்தச் சோதனைகளையும், தோல்விகளையும் கடந்துசெல்ல தேவையான பக்குவம் பெருவதற்குச் சான்றோர்களின் அனுபவத்தில் கூறிய வார்த்தைகளும் வழிகாட்டுதலும் உறுதுணையாக இருக்கும்.
வழுக்கலான பாதையில் நடக்கும்போது வழுக்கி விழாமல் காக்க உறுதியான ஊன்றுகோல் உதவுவது போல நல்லவர்கள் வாய்ச்சொல் நம் நெஞ்சில் இருந்தால் அதுவே கேடயமாக நம்மை காக்கும்.
தங்கள் வாழ்நாளில் அரியபெரிய செயல்கள் செய்து உலகம் போற்ற உயர்ந்தவர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும்போது நாம் செல்ல வேண்டிய தொலைவும் அதற்கான செயல் திறனும் மேலும் வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படும். இது நம் செயலை மேலும் திறனுடன் செய்ய நம்மை வழிநடத்தும்.
சிறந்த எண்ணங்களே சிந்தனைகளாக வளர்ந்து செயல்களாக வெளிப்படுகின்றன. செயல்களே வாழ்க்கையாக அமைந்து அதுவே நல்ல அனுபவமாகிறது. அத்தகைய அனுபவங்களே வலிமையான படிக்கற்களாக அமைந்து வாழ்க்கையை மேலும் மேலும் உயர்த்துகின்றன.
# நன்றி.