அறிமுகம்:
செயல் வகைகள்:
அன்றாட நடப்புகளைத் தெரிந்துகொள்ள நாளிதழ்ப் படிக்கிறோம். மேலும் நல்ல சிந்தனைகளைத் தூண்டும் (மேதைகள், நல்ல மனிதர்களின் அனுபவ முத்துகள் பதித்து வைத்தப் பொக்கிஷமான) புத்தகங்களை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்கிறோம். வாழ்க்கை நடைமுறைக்கு இரண்டுமே தேவைதான்.
அதுபோலவே அன்றாடத் தேவைகளுக்கான (SURVIVAL) செயல்கள், மற்றும் தனித் தன்மையுள்ள, திறமையின் வளர்ச்சிக்கான (THRIVING) செயல்கள் என்று செயல்கள் இருவகையாக இருக்கின்றன. இரு பக்கமும் தீட்டிய கத்திதான் கூர்மையாகும் என்பதுபோல இந்த இரண்டு வகையான செயல்களும் சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
இதற்கான உழைப்பும் நேரமும் அதிகம் தேவைப்படும் என்பது உண்மைதான், என்றாலும் இவற்றை திறம்பட நிர்வகித்து, சிறப்பாகச் செயல்பட்டவர்களே உயர்ந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
சிந்தித்துச் செயல்படு:
ஆடு காட்டி புலி பிடிக்கும் வேடன் போல, ஆசைக்காட்டி ஆள் பிடிக்கும் கூட்டமும் உண்டு. எனவே, எந்தச் செயலையும் ஆசைக்காக மட்டுமே செய்யாமல் அறிவோடு சிந்தித்து விளைவுகளை ஆராய்ந்து செய்வது நன்மையைத் தரும்.
அவ்வாறு நன்கு சிந்தித்து முடிவெடுத்தப் பின்னர், எண்ணியது எண்ணியவாறு செய்வதற்கு நடைமுறையின் சிக்கல்கள் ஏராளம் இருக்கலாம். அந்தச் சிக்கல்களையும் தடைகளையும் கடந்துசெல்ல மனஉறுதியே மகத்தான ஆயுதம் ஆகும்.
இத்தகைய செயல்பாடுகளுக்கு இடையில் ஏற்படும் மனச்சோர்வுகளைக் கடந்து செல்வதற்குத் துணையாக, உறுதியான நிலைப்பாட்டுடன் தேர்ந்தெடுத்தக் குறிக்கோளே அதற்கான ஆற்றலை வழங்கும்.
நிதானம்:
தேர்வு எழுதினால் நூறு சதவீதம் தேர்ச்சி உறுதி என நம்பிக்கையோடு இருக்கும் நிலையில், மனதின் நம்பிக்கைக்கும், அந்த நம்பிக்கைக்கேற்ற மதிப்பெண் சான்றிதழைக் கையில் பெறுவதற்கும் இடையில் பல நாட்கள், பல செயல்கள், பல சூழ்நிலைகள் என்று பல படிநிலைகளைக் கடந்துதான் அந்த நம்பிக்கை உண்மையாக நிறைவேறுகிறது.
அதுபோல, ஒருவர் தான் தேர்ந்தெடுத்தச் செயல் வெற்றி பெறவேண்டும் என நினைத்து முழுமையாக உழைத்தாலும், அதன் வெற்றியைப் பூரணமாக அடைவதற்குத் தேவையான காலமும் ஒரு முக்கிய காரணியாகும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று உணர்ந்து செயலுக்கு ஏற்ற நிதானமும் நிச்சயம் தேவை.
வெற்றி:
சிறந்தக் குறிக்கோளை நோக்கிய வழிகளும், செயல்களும் நேர்மையாக இருக்கும் நிலையில் அதுவே வெற்றிக்கான சரியான வழியாக அமையும். நல்ல செயல்களுக்கு முன்னோடியாக (PIONEER) விளங்குவது பெரிய சவாலாக இருந்தாலும், விடாமுயற்சியோடு தொடர்ந்து செய்யப்படும் செயல்களே வாழ்க்கையின் அடையாளத்தைத் தீர்மானிக்கும் நல்ல முயற்சியாகும்.
மனஉறுதியோடு பலவிதமான சவால்களைக் கடந்து கிடைக்கும் வெற்றி என்பது தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல. இதற்குக் காரணமாக இருந்த அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுவது சுமைகள் அற்ற பயணத்திற்கு வழிவகுக்கும்.
மேலும், அடைந்த வெற்றியை அடுத்த செயலுக்கான வித்தாக பயன்படுத்தும்போது இந்தப் பயணம் மேலும் தொடர்ந்து, அனைவருக்கும் பொதுவான மகிழ்ச்சியின் அடையாளமாக உயரும்.