சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?

அறிவு :

உலகில்,  தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை.  அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக்  கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய  மாற்றங்கள் இல்லை.  இதனால் அவை பயனுள்ள புதிய வளர்ச்சிகள் ஏதுமின்றி தோன்றிய நாள் முதல் இன்று வரை அப்படியே  வாழ்கின்றன.  ஆனால் மனிதன் மட்டும் பல்வேறு மாற்றங்களைக் கண்டு, வளர்ச்சியை நோக்கிப் பாடுபடுகிறான். மேலும், தனக்கான நியதிகளை வகுத்து அறநெறியுடன் வாழ்ந்து
தம்மின்தம்  மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மண்ணுயிர்க் கெல்லாம் இனிது.
என்றுணர்ந்து தன் சந்ததிகள் தன்னைவிட உயர்ந்துவாழ அரும்பாடு படுகிறான். இதனால்தான் மனிதன் ஆறறிவு கொண்டவனாகக்  கருதப்படுகிறான்.
 
சாதனைகள்:
நம் முன்னோர்கள் கல்வியிலும், கலைகளிலும், அறிவியல் கணக்கீடுகளிலும் மருந்தியல் முறைகளிலும் மேம்பட்டு வாழ்ந்து நமக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கியுள்ளனர்.  இதன் காரணமாக இன்று அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து நாம் வளர்ச்சியைக் காணமுடிகிறது. இவ்வாறு தொடர்ந்துவரும் தலைமுறைகள் அறிவியல், தொழில் போன்ற துறைகளில் முன்னேறி வருவது சிறந்த சாதனைகளாகும்.
 
சோதனைகள்:
இத்தனை அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன்,  இப்போது மனிதத்  தன்மையை இழந்து வருகிறானோ என்ற அச்சம் அவ்வப்போது ஏற்படுகிறது. எந்தச் செயலும் சிறப்பாகச் செய்வதற்கு அதில் உள்ள விருப்பமே காரணம்.
ஆனால் விருப்பம்  என்பது ஆசையாகி இன்று பேராசை ஆகிப்போனது. இவ்வாறே  காதல் காமம் ஆனது, பொருளீட்டல் பகற்கொள்ளை  ஆனது, சுதந்திரம் தந்திரம்  ஆக்கப்பட்டது, சமஉரிமை தடுமாறுகிறது, அன்பளிப்புக் கையூட்டாகியது, வெற்றி ஆணவமாகியது.
இவ்வாறு  நாகரிகத்தின் வெளிப்பாடான எல்லா  நல்ல வார்த்தைகளும் இன்று, சமுதாய சீர்கேட்டிற்குத் துணைபோகும் பொல்லாத வார்த்தைகளாக மாறிவிட்டன.  இந்த மாற்றங்கள் மனித குலத்தின் மாண்புக்கு ஏற்பட்ட சோதனைகளாகும்.
இந்நிலை மேலும் தொடர்ந்தால் விலங்கினும் கீழாக,  மனசாட்சியற்றக்  கூட்டமாக மக்களினம் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த நிலைமையைச் சீர் செய்ய ஒவ்வொரு தனி மனிதனின்  சிந்தனையிலும் மாற்றம் தேவை. இதனால் விளையும் அணுகுமுறையின் புதிய மாற்றம் சமுதாயத்திற்கு நன்மை விளைவித்தால்தான், புதியவளர்ச்சியை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளமுடியும்.
 
பொறுப்பு
எந்தப்பெரிய  மாற்றத்திற்கும் அடிப்படை வீடுதான்.  வீடு என்பது வெறும் சத்திரமாக இல்லாமல் தனிமனித ஒழுக்கத்தைச்  சொல்லித் தரவேண்டியப் பொறுப்புள்ள குடும்பமாக இருக்கவேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் குழந்தைகளின் தேவைகளுக்காகவே அர்பணித்துவிட்டு,  அவர்களை அரவணைத்து அன்புகாட்ட முடியாமல் அயர்ந்து  போகின்றனர்.
இதன் காரணமாகக் குழந்தைகளைக் கவனித்து வழிநடத்த நேரம் இல்லாமல், சகமனிதரை  நேசிப்பதும், மதிப்பதும்தான் மனித நேயம் என்ற உணர்வை குழந்தைகள் மனதில் விதைக்காமல், பொறுப்பை மறந்துபோகும் நிலை ஏற்படுகிறது.
இதனால்,  பாதிக்கப்பட்டக் குழந்தைகள் வாழ்க்கையைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், தங்கள் சுயமதிப்புக்கே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  இத்தகைய குழந்தைகளினால், பெற்றோர்களும் தங்கள் மரியாதையை இழந்து, உடல் தளர்ந்துபோன வயதில் மனம் நொந்து போகின்றனர்.
 
முயற்சி:
நாட்டை ஆளும் மன்னனுக்கே இடித்துரைக்கும் மதியுக மந்திரி வேண்டும் என்றனர்.  நாளைய மன்னர்களாக வளரும் இன்றைய இளைஞர்களையும் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோராக இருந்தாலும் கண்டிக்கக்  கூடாது என்ற நிலையிருந்தால், யாரை, யார் காப்பாற்றுவது?
குழந்தைகள் மனதில் நல்ல ஒழுக்கங்களை விதைப்பதுதான் தங்கள் தலையாயக்  கடமை என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுவதே இன்றைய சமுதாய நிலையை மாற்றும் அடிப்படை முயற்சியாக இருக்கும்.
 
முழுமையான வெற்றி:
எந்தக்   குழந்தையும் நல்ல  குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும், பொறுப்பு உள்ளவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே. இதை மனதில் நன்கு பதித்து, குழந்தைகளின் பண்புநலனில் முழுநேரப்  பெற்றோர்களாக இயங்குவதே இதற்கு ஒரே வழி.
மேலும், குழந்தைகள் மனதில் தாங்களும் குடும்பத்தின் முக்கியமான அங்கத்தினர் என்று பொறுப்புடன் உணரும் வகையில் அவர்களை அணுகுவதும் மிகமிக முக்கியம். இந்த முயற்சியே  அவர்களைப் பாதுகாப்பான குடிமக்களாக உயர்த்தும் .
இதனால் அவர்கள் நாகரிகமான  சமுதாயத்தின் அங்கமாக  வளர்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள சிறந்த மனிதராக விளங்க முடியும். தனிமனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கம்.
சமுதாய வளர்ச்சிக்கான நல்ல மாற்றங்களை ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து  தொடங்குவோம். இத்தகைய நல்ல மாற்றமே, முழுமையான மனிதநேயம் மிக்க  சமுதாயத்தை உருவாக்கும்.  அப்போதுதான் நாம் அனைவரும்  முழுமையான நாகரிகம் பெற்ற மனித சமுதாயமாகப் பெருமையோடு  வாழமுடியும் .
#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *