உண்மை கதை :
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய பள்ளியில் நடந்த விழாவிற்கு வந்த ஒரு சிறப்பு விருந்தினர், மாணவர்களுக்கு ஒரு கதை கூறினார். அது தன்னுடைய கிராமத்தில் இருந்த ஒரு நண்பனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு என்றும் கூறினார்.
அவருடைய காலத்தில் SSLC படித்த ஒரு மாணவனின் கதை எந்தக் காலத்திலும் உள்ள மாணவர்களின் மனநிலையை உணர்ந்து சொல்லப் பட்டது என்பதால், பசுமரத்தாணிபோல மனதில் பதிந்த அந்தக் கதையையும் அவர் கூறிய கருத்துகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
தேர்வு முடிவுகள் :
SSLC தேர்வு முடிவுகள் நாளிதழில் வெளிவருகின்ற அந்தக் காலத்தில், கதிரேசன் தன்னுடைய தேர்ச்சியைத் தெரிந்துகொள்ள ஒரு நாளிதழை வாங்கினான். நாளிதழைக் கையில் வாங்கியவுடன் திடீரென்று மனதில் ஒரு பயம் படபடப்பு வந்தது. பேப்பரை வேகமாகத் திருப்பித் தன்னுடைய தேர்வு எண்ணைத் தேடினான். ஆனால் அதில் அவனுடைய எண் இல்லை. இப்போது பயத்தில் உடல்முழுதும் வியர்த்துக் கொட்டியது, இதயத்துடிப்பு மிக வேகமாகத் துடித்தது.
மீண்டும்மீண்டும் நன்றாகத் தேடிப்பார்த்தான் அவனுடைய எண்ணைக் காணவில்லை. பின்னர், தன்னுடைய நண்பர்களின் எண்களைத் தேடினான். அவர்களுடைய எண்கள் இருந்தன, ஆனால் தன்னுடையது மட்டும் இல்லை என்றதும் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது.
கூலி வேலைக்குச் சென்றிருக்கும் தன்னுடைய தாயும் தந்தையும், தங்கள் மகன் நன்றாகப் படிக்கிறான், கட்டாயம் தேர்ச்சிப் பெற்றுவிடுவான் என்ற நம்பிக்கையோடு இருக்கும் அவர்கள், திரும்பி வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது. அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்ததும் கதிரேசனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
ஏதேதோ யோசித்தபடி நடந்தவன் அவனையறியாமல் அந்த ஊரின் இரயில் நிலையத்திற்கு வந்திருந்தான். அப்போது அவனுக்கு திடீரன்று ஒரு எண்ணம் வந்தது. அங்கு வரப்போகும் இரயிலில் ஏறி பட்டணத்திற்கு சென்று விடவேண்டும். அங்கு சென்று உயர்ந்த நிலைக்கு வந்த பிறகுதான் இந்த கிராமத்திற்கு வந்து தாய் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். உடனே கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று, “இரயில் எப்போது வரும்?” என்று கேட்டான்.
அவர் அவனை உற்றுப் பார்த்துவிட்டு, “இரயில் வருவதற்கு இன்னும் நான்கு மணிநேரம் ஆகும்”, என்று கூறினார். வெளியே எங்கும் செல்லாமல் அங்கிருந்த பெஞ்சில் சோர்வாக உட்கார்ந்திருந்த கதிரேசனைப் பார்த்த அவர், “இரயில் வரும்வரை இந்தப் புத்தகத்தைப் படி”, என்று கூறி ஒரு புத்தகத்தைக் கையில் கொடுத்தார்.
அவன் இருந்த மனநிலையில் புத்தகம் ஏதும் படிக்க முடியாது என்று நினைத்தாலும் அவர் கூறுவதை மறுக்கவும் முடியாமல் புத்தகத்தைக் கையில் வாங்கி அட்டையைப் பார்த்தான். அதில் ‘சத்திய சோதனை’ என்று தலைப்புப் போட்டிருந்தது. தானே பெரிய சோதனையில் இருக்கும் நிலையில் தன்னிடம் கொடுக்கப்படும் புத்தகத்தின் பெயரும் இப்படி இருக்கிறதே என்று நினைத்தான்.
தன்னைப்போலவே பெரிய சோதனையைச் சந்தித்தவர் யாரோ இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்று நினைத்து அதை எழுதியது யார் என்று பார்த்தான். அது காந்தியடிகளின் சுயசரிதை என்று அறிந்ததும், அவருடைய சுயசரிதைக்கு ஏன் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தான்.
இப்படி யோசித்தபடியே புத்தகத்தைத் திறந்து ஏதோ ஒரு பக்கத்தைப் படிக்கத் தொடங்கினான். அவ்வாறு படித்துக் கொண்டிருக்கும்போதே அவனுடைய மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. பெற்றோருக்குத் தெரியாமல் தான் இப்போது பட்டணம் சென்றுவிட்டால் தன்னுடைய தாய் தந்தை எப்படி வருந்துவார்கள் என்று நினைத்துப் பார்த்தான். அவனுடைய மனம் நடுங்கியது. உடனே, தனக்காகவே வாழும் பெற்றோரை தவிக்கவிடக் கூடாது என்று நினைத்த அவன், என்ன ஆனாலும் பரவாயில்லை வீட்டிற்கு சென்று தாய் தந்தையிடம் உண்மையைச் சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்தி, அடுத்தமுறை நன்றாகப் படித்து, தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.
அந்த நேரம் பார்த்து அருகில் வந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவருக்கு நன்றி கூறிவிட்டு, வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். அப்போது எதிரில் வந்த அவனுடைய தாயும் தந்தையும் அவனுடைய முகத்தைப் பார்த்ததும், “இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?”, “ஏன் எப்படியோ இருக்கிறாய்?”, என்று கேட்டார்கள். அவர்கள் அப்படிக் கேட்டவுடன், கதிரேசனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது. மகன் அழுவதைப் பார்த்துக் கலங்கிய அவர்களிடம் தான் தேர்ச்சிப் பெறவில்லை என்பதை மிகுந்த தவிப்போடு கூடினான்.
அதைக்கேட்ட அவனுடைய பெற்றோர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு, “ஏன் அப்படிக் கூறுகிறாய்! நாங்கள் வரும்போது உன்னுடைய ஆசிரியரைப் பார்த்தோம், நாம் எதிர்பார்த்தது போலவே நீ தேர்ச்சிப் பெற்றுவிட்டாய் என்று அவர் கூறினாரே!” என்றனர். இதைக் கேட்ட கதிரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நான் பார்த்தபோது என்னுடைய எண் அந்தப் பேப்பரில் இல்லையே!” என்றவன், தான் ஆசிரியரிடமே நேரடியாகச் சென்று விவரமாகக் கேட்டு வருவதாகக் கூறிச் சென்றான்.
கதிரேசனைப் பார்த்த ஆசிரியர் புன்முறுவலோடு அவனை அழைத்து, அவனுடைய சந்தேகத்தையும் தீர்த்துவைத்தார். “தேர்ச்சிப் பெற்ற எண்கள் அச்சிடும்போது வரிசையாக எல்லா எண்களையும் போடமுடியாது என்பதால் தொடர்ச்சியாக எண்கள் வரும்போது, இந்த எண்ணிலிருந்து இந்த எண் வரை என்று குறிப்பிடும் வகையில், இரண்டு எண்களுக்கும் இடையில் சிறிய கோடு போட்டிருக்கும். இதைப் பார்த்த நீ நடுவில் இருக்கும் உன்னுடைய எண் அச்சில் வரவில்லை என்பதால் தவறாக நினைத்துக் கவலைப்பட்டிருக்கிறாய்”, என்று கூறி விளக்கினார்.
ஆசிரியர் தந்த விளக்கத்தால் மனம் தெளிவடைந்த கதிரேசன், சில நாட்களுக்குப் பிறகு பள்ளியில் மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் அதை உற்சாகத்தோடுப் பெற்றுக்கொண்டு, மேற்படிப்புக்காகப் பட்டணம் செல்வதற்கு அதே இரயில் நிலையம் சென்றான். இம்முறை செல்லும்போது மனதில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பொங்க ஸ்டேஷன் மாஸ்டரைச் சந்தித்துப் பயணசீட்டுப் பெற்றுக்கொண்டு இரயிலில் ஏறினான்.
அதன்பிறகு, கல்லூரிப் படிப்பும், குறிப்பிட்ட ஒரு துறையில் மேற்படிப்பும் படித்து, உயர்பதவியில் பணியாற்றிய கதிரேசன், தனது குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகப் பெருமையாக வாழ்கிறார் என்று கூறினார்.
இந்தக் கதையைக் கூறிய சிறப்பு விருந்தினர், இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய கருத்துகளையும் வரிசையாகக் கூறினார்.
மனம் உணர்ச்சி வசப்படக்கூடியது, அறிவு சிந்திக்கக்கூடியது.
சில சமயங்களில் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மனம் அறியாமையால் சூழ்நிலையை மிகவும் கடினமாக மாற்றிக் காட்டுகிறது.
அந்த மாதிரியான சூழ்நிலையில் அவசரப்பட்டுச் செயல்படுவது தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, குழப்பமான மனநிலையில், மனம் தெளிவடைவதற்கு சற்று நேரம் கொடுத்து, அமைதியாக இருப்பதே நல்லது.
அறிவின் துணையால் அறியாமை விலகியவுடன் தெரிகின்ற சூழ்நிலை மனதிற்கு எளிமையாக இருக்கலாம்.
அதேபோல கடினமான சூழ்நிலையில் நல்லவர்களின் வார்த்தைகளும், நல்ல புத்தகங்களும் நேரடியாகவோ, மறைமுகவோ மனதை நெறிப்படுத்துகின்றன.
நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலைப் போல அறிவுள்ள பெரியவர்களின் வார்த்தைகள் நம்முடைய அறியாமையைப் போக்கி சிந்தனையைத் தூண்டுகின்றன. எனவே, நமக்குத் தேவையான அறிவை நாம்தான் தேடித்தேடிப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்க்கையின் முக்கியமான பெரியமுடிவுகள், நிரந்தரமான முடிவுகள் போன்றவற்றை, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவசரமாக எடுக்கக்கூடாது.
வாழ்க்கை மிகப் பெரியது, ஆச்சரியமானது, இதில் வெற்றி, தோல்வி போன்றவை தற்காலிகமானவை. மேலும், அவை நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்டவை.
மனதில் அன்பும், அறிவில் நேர்மையும் இருந்தால் ஒவ்வொரு சூழ்நிலையையும் மனவுறுதியோடு சந்திக்கும் மனநிலை உருவாகும்.
மாறுகின்ற மனநிலைக்கு ஏற்ப சந்திக்கின்ற சூழ்நிலையில் மாற்றங்கள் தெரியும், என்பதை விளக்க அந்தச் சிறப்பு விருந்தினர் கூறிய கதையும், கருத்துகளும் வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையால் உங்களோடு பகிர்கிறேன் .
# நன்றி .