brain artificial-intelligence-
Intelegence is the key to functions of mind.

மனநிலை.Equity in Mind. மைன்ட் செட்.

மனநிலை:

எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பும் வகையில் சீராக அமைய வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது.  ஆனால் அவ்வாறு இல்லாத மாறுபட்ட சூழ்நிலைகளை நடைமுறையில் கையாளவேண்டிய நிலையில், மனம் நடுநிலையில் நின்று நிதானத்துடன் முறையாகச் செயல்படுவதற்கு கூடுதலான சில பயிற்சிகள் அவசியம் தேவைப்படுகின்றன. 

மனநிலையை ஒருநிலையில் நிறுத்துகின்ற இந்த முயற்சி, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு தேவையான மனவுறுதியாக மட்டுமல்லாமல், நாம் விரும்புகின்ற மகிழ்ச்சியான சூழ்நிலைகளான அன்பின் நிலைகளையும், வெற்றிகளையும், பாராட்டுகளையும்கூட கண்ணியமாகக் கையாளுவதற்கான நிதானத்தைத் தருகிறது. 

மேலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்முறைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை கூடுதல் வலிமையோடு செயல்படுத்துவதற்கு தேவையான உந்துசக்தியாகவும் இருக்கின்றது. 

உதாரணமாக, ஒரு வாகனத்தைச் சீராகச் செலுத்துவதற்கான முறையான பயிற்சி இருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கும் சாலையின் தன்மை மற்றும் சூழ்நிலைகள் போன்றவற்றை உணர்ந்து போக்குவரத்துக்கு ஏற்றபடி உடனடியாக (spontaneousஆக) இயங்கும் லாவகம் என்பது வாகனத்தை எப்போதும் விழிப்போடு இயக்குகின்ற தொடர் பயிற்சியின் மூலமே சாத்தியமாகிறது.

இந்தச் செயல்முறையில், பயணத்திற்கு ஏற்றபடி வேகத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் கியர் ஒவ்வொருமுறையும் நியூட்ரல் என்ற நடுநிலைக்கு வந்த பின்பே சூழ்நிலைக்கேற்ற நகர்வுநிலையைத் தேர்ந்தெடுக்கிறது. 

அதுபோல, மனமும் நியூட்ரல் என்ற நடுநிலையில் இருந்து தேவைக்கேற்ற வேகத்தைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சி பாதுகாப்பான பயணத்தைத் தீர்மானிக்கும் சக்தியோடு இயங்குகிறது.

இவ்வாறு, எத்தகைய சூழ்நிலையிலும் மனதை நடுநிலையில் வைத்துத் தீர்மானித்து, நிதானமாகச் செயல்படும் மக்களின் ஆக்கபூர்வமான ஆற்றல் பன்மடங்கு அதிகமாக வெளிப்படுகிறது என்பதற்கு சாட்சியாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பல்வேறு பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

இவ்வாறு மனதை நடுநிலையில் செலுத்துகின்ற முயற்சிகள் பலவகையில் உள்ளது என்று வாழ்வியல் பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.  அத்தகைய முயற்சிகளுள், அவரவர் கடமையைக் கண்போல உணர்ந்து சீராகச் செயல்படுத்துகின்ற ஒழுங்குமுறை சிறந்த முயற்சியாக உள்ளது என்ற கருத்து அனைவருக்கும் ஏற்றதாக இருக்கிறது. 

நடுநிலை:

உணர்வுகளை விழிப்போடு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகின்ற மனதின் நடுநிலை எல்லோருக்கும் சாத்தியமா? என்னும் சந்தேகத்திற்குத் தேவையான விளக்கங்கள் பலவிதமாகக் கிடைக்கின்றன.  அவற்றுள் எளிமையாக பின்பற்றக்கூடிய வழிகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

1. திடமான குறிக்கோளும், அதை நேர்மையான வழியில் நிறைவேற்ற வேண்டும் என்ற மனஉறுதியும் மனதின் நடுநிலையைத் தீர்மானிக்க உதவும் முதல் முயற்சியாகும்.

2. இந்த முயற்சியின் சூழ்நிலைகளுள், கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் 100% முழுமையான ஈடுபாடும், முறையான உழைப்பும், கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை எதிர்கொள்ளும் மனவலிமையும் நடுநிலைமையை மேலும் வலிமையாக்கும் பண்புகளாகும். 

3. இதில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல் அல்லது ஏற்ற தாழ்வுகள் போன்றவை, கவனத்தில் இருக்கும் குறிக்கோளின் செயல்பாடுகளின் மூலம் சரிசெய்யப்படுவதால், மனதின் நடுநிலை என்பது பாதுகாப்பான பயண அனுபவமாக இருக்கும்.

4. சூழ்நிலையிலிருந்து தாக்குகின்ற உணர்ச்சிகளுக்கு உடனடியாக react ஆகாமல், அவரவர் நிலையை உணர்ந்து சிந்தித்து, இயன்ற அளவுக்கு நிதானத்துடன் பொறுப்பாக respond செய்வது நல்ல முயற்சி.  இதை நடைமுறைக்கு ஏற்ற வேகத்தோடு செயல்படுத்துவது சூழ்நிலையைச் சுமுகமாகக் கையாளுவதற்கு உதவும் பயிற்சி.

5. இயல்பான சூழ்நிலைகளைக் கையாளுவதில் உள்ள நிதானமான மனநிலையை, சின்ன சின்ன சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் நிலையிலும் முயற்சி செய்வதும் முக்கியமான பயிற்சி. 

6. இதில் குறிப்பாக உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புறந்தள்ள வேண்டும் என்று கூறவில்லை, உள்ளுக்குள் உருவாகும் உணர்வுகளையும், வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளையும் கவனிக்க வேண்டும், அந்தக் கவனிப்பே அவற்றை முறையாகக் கையாளுவதற்கான தொடர் பயிற்சியாக இருக்கும்.  

7. உணர்வுகளும் உணர்ச்சிகளும் நிரந்தரமானவை அல்ல என்று உணர்ந்து, அவற்றை முறையாகக் கையாளுவதன் மூலம், சூழ்நிலையை மேலும் betterஆக மாற்ற முடியும்.  இதை, கவனத்துடன் செயல்படுத்துகின்ற பயிற்சி பெரும்பாலான சூழ்நிலைகளில் மனச்சுமையைக் குறைத்து மனதை இயல்பான நடுநிலைக்குக் கொண்டுவருகிறது.  

8. நிகழ்காலத்தை உணர்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான செயல்களைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் மனதின் நடுநிலைக்கு உறுதுணையாக இருப்பதோடு, நல்ல விளைவுகளைத் தரக்கூடிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் விழிப்போடு கையாளும் வகையில், மனதைத் தயார்நிலையில் இயக்குகிறது.

நாம் அனைவரும் தனித்தன்மையுள்ள, தனித்துவமான திறமைகள் உள்ளவர்கள் என்பதால், இந்த வாய்ப்பை நம்மால் முடிந்தளவு நடுநிலைமையோடு சிறப்பாக பயன்படுத்துவதே நாம் இயற்கைக்குச் செலுத்தும் நன்றியாக இருக்கும். 

சமநிலை:

நாம் அனைவருமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பலவிதமான உணர்ச்சிகளைத் தொடர்ந்து சந்திக்கிறோம்.  அந்தச் சந்திப்புகளில் ஒரு தாக்குதலிலிருந்து மீண்டு வெளியே வருவதற்குள் மற்றொரு உணர்ச்சியும் அதனுடைய நியாயமும் நம்மோடு வாதாடுகிறது. 

இத்தகைய நடைமுறைகளை இடைவிடாது சந்திக்கும் சூழ்நிலையில் மனதை எப்போதும் நடுநிலையாக வைத்திருப்பது என்பது மிகப்பெரிய மனமுதிர்ச்சி.  அத்தகைய உயரிய நிலையின் ஆரம்பகாலப் பயிற்சியாக இருக்கும் இந்த எளிமையான வழிமுறைகள், அவ்வப்போது ஏற்படுகின்ற மனஇறுக்கத்தைத் தளர்த்துகின்றன. 

தற்போது நம் கையிருப்பில் இருக்கும் ஆரோக்கியம், நேரம், கடமை, உறவு, நட்பு, பணம் போன்றவை அனைத்தும், உணர்வுகளோடும் உணர்ச்சிகளோடும் பின்னிப்பிணைந்து இருப்பதால், இவற்றை நாம் அனுதினமும் கவனமாகத் தீர்மானித்துக் கையாள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். 

இத்தகைய சூழலில், வாழ்க்கையைத் திசைதிருப்பும் உணர்ச்சிகளின் போக்கிலேயே கவனமின்றி செல்லாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து மனதை நடுநிலையோடு இயக்குவது அறிவின் முக்கியமான கடமை. இந்தப் பொறுப்பை அவ்வப்போது உள்ளுக்குள் உணர்த்துவது பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற முயற்சியாக இருக்கும்.    

இவ்வாறு, சமநிலையோடு இயங்கும் பழக்கத்தை இயல்பாகக் கொண்டவர்கள், தங்கள் துறைகளில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுகின்ற நிலையிலும், சவாலான, கடுமையான சூழ்நிலைகளைச் சந்திக்கும் நிலையிலும், தங்கள் அணுகுமுறைகளை உறுதியாக, நிதானமாக வெளிப்படுத்துகிறார்கள். 

இத்தகைய மனமுதிர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் தங்களைக் கூலான மனிதர்களாக, வலிமையானவர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்.  அத்தகைய உறுதியான நிதானமான மனநிலையைப் பெறுகின்ற பயிற்சிகளை, அவரவர் நிலைக்கு ஏற்ப முயற்சி செய்வதற்கான சிந்தனையே இந்தப்பதிவு.

 

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *