உன்னதம்:
உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன. எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன. இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது.
தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை. இன்னும் சொல்லப்போனால் மனிதர், விலங்கு, பறவை என்ற வேறுபாடுகளும் இல்லை எனலாம்.
மேலும், தாய்மை உணர்வு கொண்டவர் தாயாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. சிறு குழந்தைகள் கூட தாய்மை உணர்வோடு அன்பை வெளிப்படுத்த முடியும்.
காயும் வெயிலைத் தான் வாங்கி, குளிர் நிழல் வழங்கும் தருபோல, இதம் தரும் தாய்மையை விளக்க வார்த்தைகள் இல்லை. வண்ணங்களை வகைப்படுத்தும் கருப்புவெள்ளைக் கண்களைப்போல, எண்ணங்களை வழிநடத்தும் உறவே தாய்மை.
கண்ணாடி எண்ணெய்க் கிண்ணத்தைக் கையாள்வது போன்ற தாய்மையின் நிலையைப் புரிந்துகொள்ள தாய்மையால் மட்டுமே இயலும். அதனால்தான், உலகத்தைக் கருணையோடு காத்தருளும் இறைவனே மனித வடிவில் வந்து தாய்மையை உணர்ந்து, அதன் சிறப்பை உலகுக்கும் உணர்த்தினார்.
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று:
திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் அருகே, இறைபக்தி நிறைந்த தனகுத்தனும், இரத்னாவதியும் மனமொத்து அன்பாக வாழ்ந்தனர். அப்போது இரத்னாவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மகப்பேறு நேரத்தில் உதவியாக இருப்பதற்குப் பூம்புகாரில் இருந்த தன் தாயை உதவிக்கு அழைத்திருந்தாள்.
அவளுடைய தாயும், தன் மகளுக்குப் பேறுகாலத்தில் தேவைப்படும் என்று லேகியம், தைலம் உள்ளிட்டப் பொருட்களை எடுத்துக்கொண்டு மகள் வீட்டுக்குக் கிளம்பினாள்.
பல ஊர்களைக் கடந்து திருச்சி நோக்கி வந்தாள். ஆனால் தொடர்ந்து பெய்த மழையினால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆகவே, அவளால் தன் மகள் வீட்டுக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. எனவே, காவிரியின் வெள்ளம் வடிந்த பின்னர் மகள் வீட்டுக்குச் செல்வதற்கு ஒருவாரம் ஆகிவிட்டது.
இதனால் பதட்டமான மனநிலையுடன் இரத்னாவதியின் வீட்டுக்குச் சென்ற அவளது தாய், அங்கு பொங்கிடும் தாய்மையில் சேயுடன் இருக்கும் தன் மகளைக் கண்டதும் மகிழ்ந்தாள். ஆனால், தன்னைப் போலவே வேறொரு பெண் தன் மகளுக்குத் தாயாக இருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டாள்.
மேலும் அந்தப் பெண், குழந்தை பெற்ற தன் மகளுக்குப் பேறுகாலத்தில் தைலம் தடவி, லேகியம் கொடுத்து, அன்பும் ஆதரவுமாகப் பாதுகாத்து, பச்சிளங் குழந்தையை நீராட்டி, சீராட்டி, தாலாட்டி தாயைப் போல கவனித்துக் கொண்டதையும் அறிந்து வியந்து நின்றாள்.
இரத்னாவதியும் தன் தாயின் வடிவத்திலேயே வந்து தன்னையும் குழந்தையையும் பாதுகாத்தது யாராக இருக்கும் என்று எண்ணி குழப்பமடைந்தாள்.
அப்போது, அவர்களுடையக் குழப்பத்தைத் தீர்க்கும் பொருட்டும், உலக மக்களுக்குத் தெளிவு ஏற்படும் பொருட்டும், சிவபெருமானே நேரடியாகக் காட்சியளித்து, இரத்னாவதியின் பேறுகாலத்தில் தானே தாயாக வந்ததாகக் கூறினார்.
இவ்வாறு தாயுமானவராக வந்து இரத்னாவதியைக் காத்த இறைவன், மலைக்கோவிலில் மட்டுமல்ல தாய்மை நிறைந்த ஒவ்வொரு மனக்கோவிலிலும் அருள் செய்கிறார்.
இறைவன், பக்திக்குப் பலன் தருவதாக மட்டும் நினைத்திருந்தால், காவிரியின் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லது இரத்னாவதியின் தாயாரைப் பேறுகாலத்திற்கு உதவியாக உரிய நேரத்தில் பத்திரமாகச் சேர்த்திருக்கலாம்.
ஆனால், அப்படி ஏதும் செய்யாமல், தன் மகளின் மகப்பேறு நிலையை அறிந்து தவிக்கும் தாய்மையைத் தானும் உணர்ந்த இறைவன், ஒரு தாய்க்கு மாற்றாக தானே விரும்பி வந்திருக்கிறார் என்றால், தாய்மை என்பது இறைவனே விரும்பும் உன்னதமான உணர்வு என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
மேலும் இந்த நிகழ்வு, தாய்மை என்பது இன்னொரு உயிரின் மீது ஏற்படும் அன்பின் உச்சம் என்பதற்குச் சாட்சியாகவும் திகழ்கிறது.
வாழ்க்கை என்றால் யாதெனக் கேட்டால், வாழ்ந்து பார்! என பணித்த இறைவன், தாய்மை என்றால் எதுவெனப் பார்க்க, தானே வந்தான் தாயுமானவனாக.
# நன்றி.