கைக்கூப்பி நீ பார்த்தும்
காணாமல் நான் கடந்தால்
காரணம் வேறு கிடையாதே – உன்னை
கண்டுவிட்டால் என் மனமோ
கடுகளவும் விலகாதே!
அழகாக வீற்றிருப்பாய்
அரசிளங் குமரனாய்!
அணிவகுக்கும் சுயம்வரத்தில்
அச்சிட்டப் புத்தகமாய்!
விலை கொடுத்து வாங்கி வந்த
புத்தகமே நீ!
தலைக்கனமே இல்லாத
வித்தகன்தான் நீ!
உனைக் கடக்கும் ஒரு நொடியில்
உள்ளத்தில் அலை மோதும்!
ஒய்யாரக் கதை படிக்க
ஓராயிரம் முறை சொல்லும்!
நின்று நீ பேசினால்
கண்களால் கேட்கத் தோன்றும்!
கேட்காத வார்த்தைகளைக்
கைவிரித்துப் பார்க்கத் தோன்றும்!
கைத்திறந்து கண் பதித்தால்
கவனம் முழுதும் இழுக்கிறாய்!
உலகத்தையே உருட்டி உந்தன்
உள்ளங்கையில் வைக்கிறாய்!
நிமிடத்தில் ஈர்க்கும் சக்தி
உனக்கு யார் தந்தது!
நினைத்தவுடன் அறியும் சக்தி
எனக்கு யார் தருவது!
கைக்குழந்தை போலே நீ
கைகளுக்குள் தவழ்ந்தாலும்,
தலைமுறைகள் கடந்து வந்து
தலைமைப் பண்பு காட்டிடுவாய்!
பிள்ளைப் பருவத்தில்
பள்ளிக்குத் துணை வந்தாய்
வளரும் பருவத்தில்
வாழும்வகை சொன்னாய்!
இணையில்லா நட்பாக
எப்போதும் இருக்கின்றாய்!
இதழ் பிரித்துப் படித்தாலே
இதயத்தில் நுழைகின்றாய்!
பூக்களின் வாசமது
மனதை மயங்க வைக்கும் !
புத்தகமே! உன் வாசம்
மதி மயக்கம் தீர்த்து வைக்கும்!
முகம் பதித்துப் பார்த்தாலே
மணம் வீசும் உனது பக்கம்!
முக்காலமும் உனது சொல்லே
முதன்மையாக நிலைத்து நிற்கும்!
# நன்றி .