மனநிலை:
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகள் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்ணுக்கு முன்னால் இருக்கும் கேரட்டை உண்பதற்கு ஓடுகின்ற வண்டிக்குதிரை போல நாமும் நம்முடைய தேவைகளை முன்னிறுத்தி வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இதனால் வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் கல்வி, பணம், குடும்பம், குறிக்கோள், ஆரோக்கியம் என்று கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை தேவைகளுக்குப் பின்னால் தொடர்ந்து ஓடுகின்ற இந்த ஓட்டத்தில் மகிழ்ச்சி என்பதும் தேடல்களின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.
வாழ்க்கையின் கட்டாய கடமைகளுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை, மகிழ்ச்சிக்கு உதவும் நுணுக்கமான வாய்ப்புகளைத் துல்லியமாக உணர்வதற்கு மனதில் ஒரு அமைதி தேவைப்படுகிறது. இத்தகைய அமைதியைத் தருகின்ற பெரும்பாலான சூழல்களை மகிழ்ச்சியோடு எளிதாகக் கடந்துவருவது அனைவருக்கும் இயல்பாக இருகின்றது.
ஆனால், அத்தகைய சூழல் இல்லாத நிலையிலும் தடுமாறாத மனநிலையோடு, தடம் மாறாத குறிக்கோளும் கொண்டவர்களுக்கு எத்தகைய சூழ்நிலையும் அமைதியாகக் கடந்து செல்கிறது. இவ்வாறு மனவுறுதி கொண்ட பெருமக்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பெரும் ஆற்றலாகப் பயன்படுத்துவதால் இவர்களுடைய வாழ்க்கை சிறந்த செயல்வடிவமாக உருவாகிறது.
எனவே, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நிலையில் மனம்போன போக்கில் உணர்வுகளை நெறியின்றி வெளிப்படுத்துவதில் எந்த உயர்வும் இருப்பதில்லை. மாறாக, சந்திக்கும் சூழ்நிலை சிக்கலாக இருந்தாலும் அதில் மாட்டிக்கொள்ளாமல், egoவை கட்டுப்பாட்டில் வைத்து மனதை நிதானமாகக் கையாளும் திறனே பல வெற்றிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதே இவர்களுடைய வாழ்க்கையின் பாடமாக வெளிப்படுகிறது.
நடைமுறை:
உதாரணமாக, ஒருவர் தன்மீது சிறிதளவு நீர் பட்டவுடன் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் நீரைக் கொட்டியவர் யார் என்பதை பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, குழந்தை என்றால் ஒருவிதமாகவும் மற்றவர் என்றால் வேறுவிதமாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றால் மாறுபட்டும் இருக்கலாம். அதுவே மழைநீராக இருந்தால் நகர்ந்து போகலாம். அபிஷேக நீர் என்றால் தானே தலையை நீட்டி மேலும் நனைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு ஒருவருடைய வெளிப்பாடுகள் என்பது சூழ்நிலையைப் பொறுத்து மாறுவது இயல்பு என்றாலும், எதிர்பாராத எதிர்மறையான சூழ்நிலைகளிலும் அவ்வாறு நிதானமாக நடந்துகொள்வது சிறந்த மனநிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. இவ்வாறு தங்களது தெளிந்த மனநிலையால் எப்படிப்பட்ட சூழலையும் நேர்மறையாக மாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெறுகிறார்கள் என்பதை வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு மூலமாக அறிந்துகொள்கிறோம்.
வங்கி லாக்கரைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ஒரு திறவுகோல் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியிடம் மாஸ்டர் கீ என்ற மற்றொரு முக்கியமான திறவுகோல் இருக்கும். இந்த மாஸ்டர் கீ பயன்படுத்தப்படும் நிலையில் மட்டுமே வாடிக்கையாளர் வைத்திருக்கும் திறவுகோல் அதன் பணியைச் செய்ய முடியும்.
அதுபோல வெளியிலிருந்து தாக்குகின்ற சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் அதனால் அதிகமாகப் பாதிப்பு அடையாமல் தனிப்பட்ட மனதை மாஸ்டர் கீ போல செயல்பட வைப்பது மிக உயர்ந்த பக்குவப்பட்ட நிலையாகும்.
வெற்றி பெற்ற மாமனிதர்கள் பலர் தங்களது மனதை மாஸ்டர் கீயாக பயன்படுத்தி சூழ்நிலையின் தன்மை உணர்ந்து நேர்மறையான வாய்ப்புகளை மட்டுமே மனதில் அனுமதித்து அதை முறையாகப் பயன்படுத்தும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் இவர்கள் தங்கள் வாழ்நாளில் பயனுள்ள பல சாதனைகள் செய்து வெற்றியாளர் பட்டியலில் நிலையான இடம் பெறுகிறார்கள்.
சாதனையாளர்:
1820 செப்டம்பர் 26ல் மேற்கு வங்கத்தில் பிறந்த ஈஸ்வர சந்திர வித்தியா சாகர், சிறந்த கல்விமானாகவும், “Ocean of Knowledge” என்ற பட்டத்திற்கு ஏற்ப அறிவார்ந்தவராகவும், சமூக சிந்தனை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த செயல்பாட்டாளராகவும் வாழ்ந்தவர்.
பெண்கள் கல்விபெரும் வாய்ப்பை மேம்படுத்தும் வகையில் கல்கத்தாவில் பள்ளிகளை உருவாக்கிய அவர் அங்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டவேண்டும் என்று நினைத்தார். எனவே, அதற்கு தேவையான பொருளுதவிகளைப் பொதுமக்களிடமும், பெரும்செல்வந்தர்களிடம் நன்கொடையாகக் கேட்டார். இத்தகைய உதவிகளைக் கல்கத்தாவில் மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கேட்டுப் பெற்றுவந்தார்.
அவ்வாறு பெறும்போது செல்வந்தர்கள் பலர் கூடியிருக்கும் அயோத்தியா நவாப் மாளிகைக்கும் சென்றார். அங்கிருந்த நவாபிடம் தனது தேவையை விளக்கிக்கூறி அதற்கு நன்கொடை அளிக்குமாறு கேட்டார். ஆனால் அந்த நவாப் வித்தியா சாகரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் தனது ஒரு காலணியைக் கழட்டி, அவர் வைத்திருந்த நன்கொடை பையில் தூக்கிப் போட்டார்.
தெளிவான குறிக்கோளோடு, நேர்மறையான மனநிலையோடு இருந்த வித்தியா சாகர், தன்னை அவமானப்படுத்தும் வகையில் நிகழ்ந்த அந்தச் சூழலை வெகுமானமாக மாற்ற நினைத்தார். இதனால் நவாப் மாளிகையின் வெளியே கூட்டத்தைக் கூட்டி தன்னிடம் இருந்த நவாபின் ஒற்றை காலணியை ஏலத்தில் விற்று மிகப்பெரிய தொகையைப் பெற்றார்.
பலர் கூடியிருக்கும் சபையில் அவமானப்படுத்தியபோதும் மனம் கலங்காமல் அதையும் நேர்மறையாக மாற்றிய வித்தியாசகரின் செயல் நவாபின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது தவறை உணர்ந்த நவாப் வித்தியா சாகரை மாளிகைக்கு அழைத்து அவர் ஏலத்தில் பெற்ற அதே அளவு பெருந்தொகையை அவரிடம் நன்கொடையாகக் கொடுத்தார்.
வித்தியா சாகரின் குறிக்கோளைப் புரிந்துகொண்டு சமூகச் சிந்தனையோடும் நம்பிக்கையோடும் உதவியவர்களின் நன்கொடைகள் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு பெருமளவு உதவியது என்பது நேர்மறையான சூழல். அதே சமயத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்மாறான சூழலையும் தன்னுடைய குறிக்கோளின் வெற்றிக்காக மனவுறுதியோடு சந்தித்து, தெளிவான மனநிலையோடு சூழ்நிலையைக் கையாண்டவிதம் அவருடைய மனமுதிர்ச்சிக்குச் சாட்சியாக இருக்கிறது.
மேலும், நேர்மறையான மனிதர்களின் நாகரிகமான வலிமையான செயல்கள் மற்றவர்களின் மனதிலும் அவ்வாறே செயல்பட்டு இருவருக்கும் மேன்மையான உணர்வைத் தரக்கூடிய நிகழ்வாக அமைவது மேலும் சிறப்பான சூழலாகும்.
இவ்வாறு தங்கள் கொள்கைகளிலும் குறிக்கோள்களிலும் உறுதியாக நின்று கருமமே கண்ணாகக் கொண்டு செயல்படுபவர்களைத் தேவையற்ற குறுக்கீடுகள் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இதனால்தான் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாகச் சிந்தித்து, தெளிவாகச் செயல்படுகின்ற மனம் படைத்தவர்கள் சாதனையாளர்களாக சரித்திரத்தில் இடம்பெறுகிறார்கள்.
# நன்றி.