நம்பிக்கைகள்:
என்னுடைய சிறு வயதில் ஒருநாள், நான் என் தந்தையுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கடைத்தெருவில் ஒருவன் ஒரு சிறிய கரடியை மரத்தடியில் கட்டிவைத்துக்கொண்டு அந்தக் கரடியின் முடியை மோதிரமாக அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் என்று சத்தமாகக் கூவிக்கொண்டிருந்தான். அதை நம்பி நான்குபேர் கரடியின் முடியை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
இதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தபடியே நடந்துகொண்டிருக்க, “கரடிமுடி அதிர்ஷ்டமுன்னு சொல்றான், அந்தக் கரடியவே கையிலே வச்சுக்கிட்டு அவன் ஏன் தெருவோரத்துல உக்காந்து கத்திக்கிட்டு இருக்கான்?”, என்று கூறியபடி சிரித்த என் தந்தையின் கேள்வி எனக்குள் தொடர்ந்து சிந்தனைகளைத் தூண்டியது.
என் தந்தை கூறியது முற்றிலும் அறிவார்ந்த சிந்தனை, ஆனால் அதை உறுதியாகக் கூறுவதற்கு சில தகவல்கள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. புத்தகங்கள் விற்பவர் அவற்றை பயன்படுத்தி அதன் பலனை முழுவதுமாக அடைந்துவிட்டதாகக் கூறமுடியாது. மருந்து விற்பவர் அந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், அதிர்ஷ்டத்தின் சாவி எனக்கூறி கரடிமுடி விற்றவர் மட்டும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும் என்ற கேள்விக்கும் வாய்ப்பு இருந்தது.
புத்தகங்கள் விற்பவர், மருந்து கடைக்காரர் போன்றவர்கள் அவர்களுக்கு அந்தப் பொருட்கள் தேவைப்படுகின்ற சூழ்நிலை என்றால் அவர்கள் அவற்றை நிச்சயம் பயன்படுத்துவார்கள். இருமல் மருந்து விற்பவர் தொடர்ந்து இருமிக்கொண்டே மருந்து விற்றால் மருந்தின்மீது நம்பிக்கை ஏற்படுமா?
அதுபோலவே பணமும் அதிர்ஷ்டமும் தற்போது அவசியம் தேவைப்படுகின்ற சூழ்நிலையில் இருப்பவனும் அதிர்ஷ்டம் என்கிற மாயையை மற்றவர்க்கு உருவாக்குவதுதான் உழைப்பின் மீது சலிப்பை ஏற்படுத்துகின்ற மூடநம்பிக்கை.
ஆனால், தன்னுடைய அன்றாட தேவைகளுக்காக மற்றவர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு, அதிர்ஷ்டத்தின் பெயரைச் சொல்லிய அந்த மனிதன், அந்தக் கரடியையும் வைத்துக்கொண்டு, நாள் முழுவதும் கத்திக்கொண்டு, ஏதோ ஒரு வகையில் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினான் என்பதுதான் அவன் சொல்லாத உண்மை.
இன்றைய நவீன உலகிலும் ஏதாவது ஒரு கரடியை கையில் பிடித்துக்கொண்டு, கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை கைப்பற்றுவதற்கு பலவகையிலும் ஆசை காட்டப்படுகிறது. அவ்வாறு காட்டப்படும் கரடியின் உருவம்தான் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறதே தவிர கரடிவிடுவது ஒரே பாணியில்தான் இருக்கிறது.
நமக்கே தெரியாமல் பலவகையான நம்பிக்கைகள் நமக்குள் ஊறிப்போய் கிடக்கின்றன. எனவே சமுதாயச் சந்தையில் கொட்டிக்கிடக்கும் எத்தனையோ நம்பிக்கைகளுள் நம்முடைய மனவளர்ச்சிக்கு உதவக்கூடிய நேர்மறையான நம்பிக்கைகள் எவை என்பதை கண்டறிவதற்கு ஒரு நொடியும் அசராமல், எப்போதும் விழிப்போடு இயங்கவேண்டிய நிலை உள்ளது.
எனவே, நேர்மறையான உந்துதலைத் தரக்கூடிய, நேர்மையான முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக இயங்கக்கூடிய, நாம் விழிப்போடு பயணிப்பதற்கு உதவக்கூடிய நம்பிக்கைகள் நம்முடைய செயல்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட நம்பிக்கைகளாகும்.
அத்தகைய ஊக்கத்தைத் தருகின்ற சக்திமிக்க நேற்றைய நம்பிக்கைகளும், சிந்தனைகளும் இன்றைய மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன. இந்த மாற்றங்களில் இன்று ஏற்படுகின்ற நேர்மையான வளர்ச்சியும், புதுமையும்தான் நாளைய முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்பதால் நமது நம்பிக்கைகள் ஆக்கபூர்வமாக இருப்பது அவசியம் ஆகிறது.
அதிர்ஷ்டம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத நல்வாய்ப்பாக இயங்குகிறது என்ற நம்பிக்கை உள்ள நிலையில், அந்த நல்வாய்ப்பைப் பெறுவதற்கான அறிவுபூர்வமான தகுதியைப் பெறுவதுதான் நமது கட்டுப்பாட்டில் உள்ள செயல்படுத்தக்கூடிய முயற்சியாகும்.
நேர்மையான நிலையான குறிக்கோளும், அதற்கு பொருத்தமான முறையான உழைப்பும், திட்டமிட்டுச் செயல்படும் நேர்த்தியும், எதிர்பார்க்கும் நேர்மறையான விளைவுகளுக்குத் தேவைப்படுகின்ற காலமும் நல்வாய்ப்புகளுக்கான திறவுகோல்கள் ஆகும்.
அழகு :
ஒரு அடர்ந்த காட்டில் இருந்த மான் ஒன்று குளத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது தன்னுடைய உருவத்தை நீரில் பார்த்தது. நிமிர்ந்து நிற்கும் கிளைகள்போல நன்றாக வளர்ந்திருக்கும் கொம்புகளைப் பார்த்ததும் தன்னுடைய அழகை நினைத்து கர்வப்பட்டது.
மேலும் தன்னுடைய தலையில் மகுடம் போல இருக்கும் இந்தக் கொம்புகளுக்கு ஏற்றாற்போல கால்கள் அழகாக இல்லாமல் குச்சிகுச்சியாக நீண்டு அசிங்கமாக இருக்கிறதே என்றும் நினைத்துக்கொண்டது.
இவ்வாறு தன்னுடைய அழகைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்த மான் திடீரென்று தூரத்தில் புலி உறுமுகின்ற சத்தம் கேட்டதும் தன்னிச்சையாக அங்கிருந்து ஓடியது. அப்போது வழியில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கொடியில் அதனுடைய கொம்புகள் சிக்கிக்கொண்டன .
எவ்வளவோ முயற்சி செய்தும் அது தன்னுடைய கொம்புகளை அந்தச் சிக்கலிலிருந்து விடுவிக்க முடியாமல் திணறியது. அப்போது புலியின் சத்தம் வெகு அருகாமையில் கேட்டதும் மானின் பதட்டம் அதிகமானது. எனவே கால்களை முன்னோக்கி உறுதியாக வைத்து தலையை வேகமாக இழுத்தது. இப்போது அந்தக் கொடியிலிருந்து கொம்புகள் விடுபட்டதும் அங்கிருந்து வேகமாக ஓடிய மான் மிக நீண்ட தூரத்தில் இருக்கும் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அப்போதுதான் மானிற்கு ஒரு உண்மை புரிந்தது. தன்னிடம் இருக்கும் எல்லா உறுப்புகளும் சிறப்பு வாய்ந்தவைதான். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது, அவற்றுள் தனிப்பட்ட அழகாகத் தெரிகின்ற கொம்புகள் மட்டுமே முக்கியம் என நினைத்து மற்றவற்றை அலட்சியமாக நினைத்தது தன்னுடைய தவறு என உணர்ந்தது. மேலும், உயர்ந்திருக்கும் கொம்புகள் கொடிகளில் சிக்கினாலும் உடனே வேகமாக ஓடி ஆபத்திலிருந்து தப்புவதற்கு உதவிய கால்களின் உறுதித்தன்மையை உணர்ந்து மகிழ்ந்தது.
மேலும், பலவகையான விலங்குகள் வாழ்கின்ற இந்தக் காட்டில், பாதுகாப்புத் தருகின்ற திறன்களைப் பலப்படுத்துவது அவசியம் என அறிந்துகொண்டது. சூழ்நிலைக்கு ஏற்றபடி வெவ்வேறு வகையில் பயன்படுகின்ற திறன்களை அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து வாழ்வதுதான் உண்மையான அழகு என்பதையும் புரிந்துகொண்டது.
பலதரப்பட்ட விலங்குகள் இருக்கின்ற காட்டில் மட்டுமல்ல, பலவிதமான எண்ணங்கள் உள்ள மனிதர்கள் கலந்து வாழ்கின்ற நாட்டிலும், ஒவ்வொருவரும் தங்களது திறன்களை உணர்ந்து வாழ்வது சிறப்பைத் தரும்.
பண்பை உயர்த்தக்கூடிய, நடைமுறைக்குத் தேவையான, முன்னேற்றத்திற்கு அவசியமான, பாதுகாப்பான சிந்தனைகளை, வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் திறன்களை, வளர்த்துக்கொள்வதும், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து முறையாகச் செயல்படுவதும்தான் உண்மையான அழகாக இருக்க முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
சுதந்திரம்:
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஒரு செய்தியில், கூண்டுக்குள் பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கரடி ஒன்று, விலங்குகள் நல ஆர்வலர்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர், காட்டில் விடுவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கரடியோ முன்பு கூண்டில் அடைப்பட்டிருந்தபோது எப்படி ஒரு வட்டத்திற்குள்ளேயே நடந்துகொண்டிருந்ததோ, அதுபோலவே அந்தக் காட்டிலும் குறிப்பிட்ட ஒரு சிறிய வட்டத்திலேயே நடந்துகொண்டிருந்த காட்சி மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு, பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் சுதந்திர உணர்வு என்பதே மறந்து பரிதாபமான நிலையில் இருந்த அந்தக் கரடியைப்போல நாமும் பழக்கப்பட்ட வழக்கங்களையே எல்லைகளாகக் கொண்டு, சிந்தனைகளில் சுதந்திரம் என்பது பற்றி எந்தத் தெளிவும் இல்லாமல், பரந்துவிரிந்திருக்கும் இந்த உலகத்தின் சிறப்பை உணராமல் பழகிப்போன குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் தோன்றியது.
குறிக்கோளை நோக்கி செயல்படுகின்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளைச் சீராக விரிவாக்கம் செய்வதும், விழிப்புணர்வோடு மனதை ஒருநிலைப்படுத்துவதும் நமது சுதந்திரத்தின் எல்லைகளை நாம் நிர்ணயிப்பதற்கு வழிகாட்டுகிறது. இதுவே, உலகத்தோடு இணைந்து நேர்மறையாகச் செயல்படுவதற்கும், அதில் ஏற்படுகின்ற சவால்களை நம்பிக்கையோடு சந்திப்பதற்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.
அதேபோல நேர்மறையான வளர்ச்சிக்கு உதவாத சிந்தனைகளை, மூடநம்பிக்கைகளைக் களைவதும், கவனத்தைத் திசைதிருப்பும் எல்லைமீறல்களைத் தவிர்ப்பதும் முன்னேற்றத்தின் பாதையில் மேலும் தெளிவான மனதோடு பயணிக்க உதவுகிறது.
சுதந்திரமே மகிழ்ச்சி என்று தெரிந்தாலும் அதன் வலிமையும் எல்லையும் அறிந்து முறையாகப் பயன்படுத்தப்படும் நிலையில் மட்டுமே அது வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் மனதின் மகிழ்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கிறது.
# நன்றி.