மகிழ்ச்சி:
மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம். “மகிழ்ச்சி” என்கிற நம்முடைய வரையறைக்குள் பொருந்தாத சூழ்நிலைகளை மகிழ்ச்சியாகப் பார்க்கும் மனநிலை என்பது சாத்தியமா என்கிற சந்தேகம் நமக்குள் எழுவது இயற்கையே.
ஆனால், சவாலான சூழ்நிலைகளைச் சந்திக்கும் நிலையிலும், தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படுபவர்கள் மனதில் அமைதியான நீரோடையாக மகிழ்ச்சி எனும் உணர்வு ஓடிக்கொண்டே இருப்பதை உணர்கிறார்கள். எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும், பலருக்கும் நன்மை தரக்கூடிய சூழலாக மாற்றும் தங்களுடைய பண்பையும், திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாகப் பார்க்கும் மனநிலையால் எப்போதும் நம்பிக்கையோடு செயலாற்றுகிறார்கள்.
இதுபோன்ற நேர்மறையான மகிழ்ச்சியை விரும்பும் எவரும், தங்களுடைய அன்றாட வாழ்வியல் ஒழுக்கங்களின் மூலமாக, அணுகுமுறை மாற்றங்களின் விளைவாக, சிறந்த குறிக்கோளை நோக்கி முன்னேறும் முயற்சிகளின் வழியாக மனநலம் பேணும் மிதமான மகிழ்ச்சியை மனதில் நிரந்தரமாக அமைத்துக்கொள்வது சாத்தியம் என்பதையும் இவர்கள் உணர்த்துகிறார்கள்.
மனநிலை:
மகிழ்ச்சியான மனநிலையை எப்படிப் பெறுவது?
ஒவ்வொரு சவாலான சூழ்நிலையும் நம்மை தீவிரமாகச் சிந்திக்க வைத்து, திறனோடு செயல்பட வைத்து, அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் தருகிறது.
ஒரு சவாலைச் சந்திப்பதற்கு முன்பு இருக்கும் மனநிலைக்கும், அந்தச் சவாலைச் சந்தித்து அதன் விளைவுகளை எதிர்கொண்ட பின்னர் மனதில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கும் இடையில் ஏற்படுகின்ற அனுபவமே வாழ்க்கை என்கிற பார்வையும், இத்தகைய அனுபவத்தில் நம்முடைய பொறுப்பை உணர்ந்து அதில் முழுமையான பங்களிப்பைத் தருகின்ற நம்முடைய அணுகுமுறையும்தான் மனத்தில் ‘மகிழ்ச்சியை உருவாக்குகின்ற செயல்கள்’ ஆகும்.
எந்தவிதமான கள்ளமும் கபடமும் இல்லாமல் மனம் என்பதே வளராத நிலையில் தூய்மையான உள்ளத்தோடு பிறக்கும் குழந்தை எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனாலும், அது பிறக்கும்போதே அதனுடன் சில அத்தியாவசிய தேவைகளும் பிறந்துவிடுவதால் மிகக் குறைந்தபட்ச நிலையில் இருக்கும் அதனுடைய அடிப்படை தேவைகள் (மற்றவர் உதவியினால்) பூர்த்தியாகும் நிலையில் மட்டுமே அக்குழந்தை அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கிறது.
அந்தக் குழந்தை நாளடைவில் முழுமையான மனிதனாக வளர்கின்ற நிலையில், தன்னுடைய இயல்பான தேவைகளையும் அதன் விளைவாக ஏற்படுகின்ற கடமைகளையும் தனக்கேற்ற வகையில் கணிசமாக வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால் உருவாகின்ற உயர்ந்த கனவுகளின் தூரத்துக்கு ஏற்ப தொடர்ந்து எதிர்நீச்சல் போடவேண்டிய நிலையில், உறுதியான தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு அலையாகக் கடக்கும் அந்தப் போராட்ட குணமும், முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளுமே மனதின் மகிழ்ச்சியாக உணரப்படுகிறது.
ஒரு சிறந்த குறிக்கோளை அமைத்துக்கொண்டு அதில் வெற்றி பெற்ற பின்புதான் மகிழ்ச்சி கிடைக்கும் என நினைத்தால், அந்தக் குறிக்கோளில் வெற்றிபெற்ற பின்னர் எதிர்கொள்கின்ற புதிய சவால்களினால் மகிழ்ச்சி என்பது நிழலைப் பிடிப்பது போன்றதாக இருக்கலாம்.
மனதில் படிந்திருக்கும் ஏக்கம் எனும் ஏழ்மையை அகற்றுவதும், தன்னையே குறைவாக நினைக்கும் எண்ணங்களைத் தவிர்ப்பதும் மனதை சுத்தம் செய்யும் ஆரோக்கியமான சிந்தனைகளாகும். நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நமக்கு முழுமையான தகுதி உண்டு என்று உணர்வதும், நம்முடைய திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்புகளைத் தேடுவதும் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் வளமான சிந்தனைகள் ஆகும்.
நமக்கு இயற்கை தந்த நல்வாய்ப்பாக, இன்றைக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்புகளுக்கு மனநிறைவோடு நன்றி செலுத்துவதும், நம்மால் முடிந்த உதவிகளை அவரவர் பண்பறிந்து இன்முகத்தோடு செய்வதும் மகிழ்ச்சியின் நறுமணம் மனதில் நிறைவதற்கு உதவும் செயல்களாகும். இதுவே, வருகின்ற நாளை நம்பிக்கையோடு வரவேற்று, சந்திக்கும் சவால்களை மனவுறுதியோடு எதிர்கொள்வதற்கான சக்தியைத் தருகின்ற வாய்ப்பாக அமையும்.
உலகில் பெரும்பாலான மக்களுக்கு பணம் இருந்தாலே மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. ஆனால், உலகின் முதல் பணக்காரர் என்ற நிலையில் இருப்பவரும் இரண்டாவது நிலையைப் பின்னடைவாகக் கருதி, தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டிய நிலை இருப்பதால், அவரவர் தேர்ந்தெடுக்கும் குறிக்கோளுக்காகத் தொடர்ந்து செய்யப்படுகின்ற முயற்சிகளில்தான் மகிழ்ச்சி உள்ளது என்று புரிகிறது.
‘கடமையை மறக்கச்செய்யும் மகிழ்ச்சி கடுங்கோபத்தை விட கொடுமையானது’ என்றும், ‘மகிழ்ச்சியில் ஏற்படுகின்ற கர்வம் இகழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்றும் வள்ளுவர் எச்சரிக்கை செய்வதால், நேர்மறையாகவும், நேர்மையான வழியில் கடமையைச் செய்யும்போதும் உருவாகும் மகிழ்ச்சியே உண்மையானதாக இருக்கும். இந்த மகிழ்ச்சியே நிரந்தரமான மனநிலையாக நிலைபெறும்.
இன்றைய கடமைகளைப் பொறுப்போடு செயல்படுத்துகின்ற திறனே, நாளைய உரிமைகளை மகிழ்ச்சியோடு பெறுகின்ற தகுதியைத் தருகிறது. மேலும், மனிதனின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளே மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கின்றன என்கிற அறிவியலும் இதை உறுதியாக நிரூபிக்கிறது.
சூழ்நிலைகள்:
நாம் சந்திக்கும் சில சூழ்நிலைகளை, மகிழ்ச்சியானவை என்றோ அல்லது அதற்கு எதிரானவை என்றோ மற்றும் வேறு வகையான உணர்வுகளை உள்ளடக்கியது என்றோ எளிதாக இனம்காணும் நிலையில், அவற்றை அந்தச் சூழல்களுக்கு ஏற்றவகையில் பொருத்தமாகக் கையாளும் முறையினால் நேர்மறையான மனநிலையைப் பெறமுடியும்.
ஆனால், நாம் பெரும்பாலும் சந்திக்கின்ற சூழ்நிலைகள் யாவும் குறிப்பிட்ட எந்த உணர்வையும் மிகையாக வெளிப்படுத்தாத நிலையில் இருப்பதாலும் அல்லது அவற்றின் தன்மையை நாம் சிந்தித்துத் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாலும் அத்தகைய சாதாரண சூழ்நிலைகளை மகிழ்ச்சிக்கு எதிரானவையாக உணர்கிறோம்.
இத்தகைய சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நாம் சிந்தித்து, நம்பிக்கையானவர்களின் உதவியோடு அவற்றை மகிழ்ச்சியாகக் கையாளுவதற்கு முயற்சி செய்யலாம். கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலை எனில் அதனோடு சுமுகமாகப் பயணித்து வருவதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமையோடு தைரியமாகச் செயல்பட்டு மகிழ்ச்சியைப் பெறலாம்.
உதாரணமாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கூடியிருக்கும் ஒரு இடத்தில், ‘ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசையாக நில்லுங்கள்!’ என்றால் அவர்கள் சரியாக நின்று விடுவார்கள்.
ஆனால், அந்தக் கூட்டத்தில் உள்ள ‘குழந்தைகள் மட்டும் வரிசையாக நில்லுங்கள்!’, என்றால் சில குழந்தைகள் வரிசையில் நின்றாலும், சில குழந்தைகள் அதில் நிற்க தெரியாத அளவுக்கு சிறிய குழந்தைகளாக இருக்கலாம், சிலர் ‘நாங்கள் குழந்தைகள் அல்ல!’ என்ற நினைப்போடு அந்த வரிசையில் நிற்க மறுக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையில் அந்தக் குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில்கொண்டு பொறுமையாகக் கையாள்வது போலவே, எத்தகைய உணர்வுகளையும் குறிப்பாக உணர்த்தாத சில சூழ்நிலைகள், மகிழ்ச்சியா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாத சூழ்நிலைகளாக வெளிப்படும் நிலையில் அவற்றை அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையின் தன்மையாக ஏற்றுக்கொள்வதன் மூலமும் மனமகிழ்ச்சியைப் பெறமுடியும்.
நிபந்தனை:
நாம் எதிர்பார்ப்பது போலவே நிகழ்வதுதான் மகிழ்ச்சி என்றோ, முழுமையான வெற்றியே மகிழ்ச்சி என்றோ நிபந்தனைகளை வகுத்துக்கொள்வது வாழ்க்கைக்குப் பொருந்தாத ஒன்று. ஏனெனில், பலரோடு இணைந்து செல்லும் இந்த வாழ்க்கை பயணத்தில், நாமும் ஒரு பங்களிப்பாளாராகப் பொறுப்பேற்கும் நிலையில் நம்மால் முடிந்த அளவு இணக்கமாக இணைந்து, முழுமையான ஒத்துழைப்புத் தந்து, சிறப்பாகச் செயலாற்றுவது மட்டுமே மகிழ்ச்சியான மனநிலைக்கு வழிவகுக்கும்.
நாம் எதிர்கொள்ளும் ஒரு வாய்ப்பு நம்முடைய உணர்வுகளோடு மட்டுமல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளோடும் இணைந்து நெய்யப்படுகின்ற வாய்ப்பாக, அனைவரும் பங்குபெருகின்ற நிலையில், பலரது உணர்வுகளையும் ஓரளவுக்கு உணர்ந்து நேர்மையாக, முறையாகச் செயல்படுவதன் மூலமும் நியாயமான மனமகிழ்ச்சியை உணர முடியும்.
பணத்தை ரூபாய் நோட்டுகளாகப் பயன்படுத்தாமல் அட்டைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனை செய்வதுபோல, மாறுகின்ற பாதைகளைப் புரிந்துகொண்டு, சில சிந்தனைகளைக் காலமாற்றத்திற்கு ஏற்ப பரிசீலித்து, சில மாற்றங்களோடு சீரமைத்துச் செயல்படுகின்ற நிலையில் அந்த மாற்றங்களும் மகிழ்ச்சிக்குத் துணையாகச் செயல்படுகின்றன.
சமநிலை:
மூளையில் வலியை உணரும் அமைப்பும் மகிழ்ச்சியை உணரும் அமைப்பும் ஒன்றுதான் என்றும் வலியையும் மகிழ்ச்சியாக உணரமுடியும் என்றும் கூறுகிறார்கள். இந்த அறிவியல் இயல்பான நடைமுறைக்குச் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் மனதைக் கையாள்வதற்கு சில சிந்தனை மாற்றங்கள் உதவுகின்றன என்பது மட்டும் பலரது அனுபவத்தில் காணும் உண்மை.
மனதை ஒருநிலைப்படுத்தும் முயற்சியில், தேவையான நேர்மறையான சிந்தனைகளை, செயல்களைத் தேர்ந்தெடுப்பது முதன்மை பெறுகிறது. அதுபோலவே, மகிழ்ச்சியைக் கெடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்ற தாழ்வுமனப்பான்மை, பொறாமை, கையாள முடியாத கோபம் போன்ற தேவையற்ற சிந்தனைகளை, செயல்களைக் கண்டறிந்து அவற்றை களையெடுப்பதும் அடிப்படையான ஒழுங்கு முறையைத் தருகிறது.
உடல்நிலை, மனநிலை, அறிவுநிலை, மற்றும் தொடர்புநிலை (communication) என்ற முக்கியமான சக்திகளை ஒழுங்கான சமநிலையில் வைத்து கையாளுகின்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் நம்மை சரியான திசையில் இயக்குகின்ற ‘மிகப்பெரும் ஆற்றலாக’ இருக்கின்றது. இந்த ஆற்றலே வாழ்க்கையின் நடைமுறையோடு ஒத்திசைந்து எந்த நிலையிலும் மகிழ்ச்சியான மனநிலையோடு வாழ்வதற்கு பெரிதும் உதவுகிறது.
மானிட்டர்:
மின்விளக்கு, மின்விசிறி என மின்சார சாதனங்கள் பலவகையில் பயன் தந்தாலும், அனைத்திற்கும் பொதுவாக மின்சாரம் என்பது முதன்மையாக இருப்பதுபோல, மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவதற்கு பல வகையான வழிகள் இருந்தாலும், நம்முடைய மனதிற்கு உயிர்சக்தியாக விளங்கும் அன்பே மகிழ்ச்சியான மனநிலைக்கு அடிப்படை தகுதியாக இருக்கிறது.
முகத்தில் இருக்கும் இரண்டு கண்களே வெளியில் இருக்கும் கோடிக்கணக்கான காட்சிகளைக் காட்டுவதுபோல, மனதில் இருக்கும் அன்பு எனும் ஒரு உணர்வே நாம் சந்திக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் ஒளிந்திருக்கும் மகிழ்ச்சியை உணர்கிறது.
நம்முடைய செயல்களே நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்குகின்றன என்கிறபோது, உலகத்தைக் காணுகின்ற நம்முடைய பார்வையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்பதும் உண்மையே.
‘உன்னை உன்னால்தான் உயர்த்திக்கொள்ள முடியும்’ என்ற உபேதசத்தைப் போலவே, நம்மை நாம்தான் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால், மகிழ்ச்சிக்கான வழிகளைக் காணும் தெளிவான பார்வையை நம்முடைய மூலதனமாக வைத்து மகிழ்ச்சியான மனநிலையை நிரந்தரமாகப் பெறுவதற்கு முயற்சி செய்வோம்.
# நன்றி .