கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்:
திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார். அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார். இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன் என்ற வீரன் அந்த நியாய அதிகாரியின் திறமையைப் பலமுறை கேள்விப்பட்டதனால், அந்த அதிகாரியை நேரில் காணவேண்டும் என்று விரும்பினான். அவ்வாறு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர் விசாரித்து, தீர்ப்பு வழங்கும் முறையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டான்.
எனவே, அவன் தன்னுடைய ஊரிலிருந்து குதிரையில் புறப்பட்டு தலைநகரம் நோக்கி சென்றான். நீண்ட தூரம் சென்ற பயணக்களைப்பும், பசியும் ஏற்பட்டதால் நகரத்தின் எல்லையில் இருந்த ஒரு விடுதியில் உணவருந்திவிட்டு, சற்று ஓய்வெடுத்த சுகந்தன், மீண்டும் தனது பயணத்தைத் தொடர நினைத்து குதிரையின் அருகில் வந்தான்.
அப்போது முதியவன் ஒருவன் சுகந்தனிடம் வந்து, தான் தலைநகரத்தைச் சேர்ந்தவன் என்றும், நீண்ட தொலைவு நடப்பது தனக்கு சிரமம் என்பதால் தன்னை குதிரையில் ஏற்றிச்சென்று ஊருக்குள் விடுமாறும் கேட்டுக்கொண்டான். தானும் அங்குதான் செல்ல வேண்டும் என்று கூறிய சுகந்தன் அவனை தன்னோடு குதிரையில் ஏற்றிக்கொண்டு சென்றான்.
ஊருக்குள் சென்றதும் சுகந்தன் முதியவனை குதிரையிலிருந்து இறங்கும்படி சொன்னான். ஆனால் முதியவனோ “நீ முதலில் இறங்கு” என்று கூறினான். அவன் இறங்குவதற்கு தான் உதவிசெய்ய வேண்டுமோ! என்ற நினைத்த சுகந்தன் முதலில் தான் இறங்கிய பின்னர் அவனை இறங்கும்படி கூறினான்.
ஆனால் அவனோ குதிரையின் முன்பக்கம் நகர்ந்து கடிவாளங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, “நான் ஏன் இறங்க வேண்டும்? இது என்னுடைய குதிரை, இந்த ஊருக்குப் புதிதாக வருகிறாயே என்று நான் உனக்கு உதவி செய்தால் நீ என்னையே இறங்க சொல்கிறாயா?”, என்று உரத்தக் குரலில் பேசினான். அவ்வாறு அவன் அதட்டலாகப் பேசுவதை கேட்ட சுகந்தன் சற்று அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தான். இதனால் சுகந்தன் பயந்துவிட்டதாக நினைத்த அவன் உடனே, “விசாரணை கூடம் இங்குதான் இருக்கிறது, நீ என்னிடம் வம்பு செய்தால் உன்னை விசாரணைக்கு இழுத்துவிடுவேன் ஜாக்கிரதை!”, என்றான்.
ஏற்கனவே, நியாய அதிகாரியை பார்ப்பதற்கு என்ன வழி என்ற யோசனையில் இருந்த சுகந்தன், முதியவன் அவ்வாறு கூறியதும் இதுதான் சரியான சமயம் என்று நினைத்து, “அப்படியென்றால் அதிகாரியைப் பார்த்துவிடலாம் வா”, என்று கூறியபடியே அவனையும் உள்ளே இழுத்துச் சென்றான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவன் உடனே குதிரையின் அங்க அடையாளங்களை அவசரமாகக் கவனித்துக்கொண்டான்.
இருவரும் உள்ளே நுழைந்த சமயத்தில் நியாய அதிகாரி வேறொரு வழக்கை விசாரித்துக்கொண்டிருந்ததை சுகந்தன் கவனித்தான். அந்த விசாரணைக்கு வந்திருந்தவர்களில் ஒருவன் எண்ணெய் செக்கு வைத்திருப்பதாகக் கூறினான். எண்ணெய் ஊறிய அவனுடைய உடையும், தோற்றமும் அவன் கூறுவது உண்மை என்பதற்கு சாட்சியாக இருந்தன. வழக்கில் அவனுக்கு எதிராக இருந்தவன் இளைஞனாக இருந்தான். அவனுடைய கையில் நாணயங்கள் கட்டிவைத்த துணிமுடிச்சு இருந்தது.
வழக்கு என்ன என்று அதிகாரி கேட்டதும், எண்ணெய் செக்கு வைத்திருப்பவன் அதிகாரியை வணங்கிவிட்டுப் பேசத்தொடங்கினான். “எதிரில் இருப்பவன் என்னுடைய மரச்செக்கு இருக்கும் இடத்திற்கு வந்து தன்னிடம் இருக்கும் தங்க நாணயத்திற்கு இணையாக சில்லறை நாணயம் வேண்டும் எனக் கேட்டான். இதனால் நான் அவனுக்காக பணப்பெட்டியிலிருந்த சில்லறை நாணயங்களை எடுத்து எண்ணி துணியில் வைத்துக்கொண்டிருந்தபோது இவன் திடீரென்று அந்தத் துணிமுடிப்பைக் கையிலிருந்து பறித்துக்கொண்டு ஓடினான். அவன் கூறியபடி தங்கக்காசையும் என்னிடம் தரவில்லை, எனவே அவனை ஓடிச்சென்று பிடித்து இங்கே கொண்டுவந்தேன்”, என்றான்.
அந்த இளைஞனோ அதை முழுவதுமாக மறுத்தான். “நான் சந்தனத்தூள் விற்றதனால் கிடைத்த காசுகளை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து எண்ணிகொண்டிருந்தேன், அப்போது இவன் அருகில் வந்து நாணயங்கள் இருக்கும் முடிப்பைத் தருமாறு மிரட்டினான். நான் தர மறுத்தவுடன், உடனே அங்கு கூட்டம் சேர்த்து இவனே ஒரு கதையைத் திரித்துக் கூறினான். அங்கு கூடிய மக்கள்தான் எங்களை இங்கே அனுப்பி வைத்தார்கள்”, என்றான்.
இருவரையும் உற்று கவனித்த அதிகாரி அவர்கள் கூறியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த இளைஞனை அருகில் அழைத்து அவனிடமிருந்த துணிமுடிப்பை வாங்கி அதிரிலிருந்த சில்லறைகளைக் கையில் எடுத்தார், பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துவரக்கூறி அந்த நாணயங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீர் கிண்ணத்தில் போட்டார்.
சற்று யோசித்துவிட்டு, மிரட்டி பணம் பறிக்க நினைத்தவனை நல்லறிவு பயிற்சிப் பட்டறைக்கு அனுப்புமாறு அறிவித்துவிட்டு இளைஞனிடம் அவன் கொண்டுவந்த நாணயங்களை அவனிடமே கொடுத்து அதனுடன் தன்னுடைய பரிசாக ஒரு தங்க நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பினார் .
விசாரணையை எளிமையான முறையில் கையாண்டு மறுப்பு ஏதும் இல்லாத சுமுகமான தீர்ப்பு வழங்கியதைப் பார்த்த சுகந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.
அப்போது சுகந்தனின் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இருவரும் நியாய அதிகாரியின் முன்பு நிறுத்தப்பட்டனர். அப்போது சுகந்தன் தான் தலைநகரத்திற்கு வந்த காரணத்தையும், அந்தச் சமயத்தில் முதியவன் தன்னோடு இணைந்துகொண்டதையும் குறிப்பிட்டு, நடந்ததை நடந்தவாறே உறுதியாகக் கூறினான். முதியவனோ தீர்ப்பு தனக்குச் சார்பாக வரும் வகையில் பலமாகச் சித்தரித்துக் கூறினான். மேலும் குதிரையின் நிறம், மச்சம், சுழி என்று அவன் கவனித்த அனைத்து அடையாளங்களையும் அதிகாரியிடம் வேகமாகக் கூறினான். அவர்கள் கூறுவதை நன்கு கவனித்த அதிகாரி, வீரர்களின் பிடியில் இருந்த குதிரையின் அருகில் இருவரையும் அழைத்துச் சென்றார்.
முதியவன் குதிரையின் அருகில் வந்தபோது அது அவனை கண்டுகொள்ளாமல் இருந்தது. பின்னர் சுகந்தன் அருகே வந்ததும் ஆசுவாசமாக அவன் தோளில் முகம் வைத்துகொண்டது. சுகந்தனும் அந்தக் குதிரையை அன்பாக அணைத்து ஆதரவாகத் தட்டிக்கொடுத்தான். இதனைக் கண்ட நியாய அதிகாரி குதிரையின் உணர்வுகளையே முக்கிய சாட்சியாக ஏற்றுக்கொண்டார். அடுத்தவர் உடமையை தனதாக்கிக்கொள்ள நினைத்த முதியவனுக்குத் தகுந்தமுறையில் நல்லறிவு கற்பிக்க ஆணை பிறப்பித்தார்.
பின்னர், தன்னை காணவேண்டும் என்ற ஆர்வத்தில் தலைநகருக்குப் புதியதாக வந்த சுகந்தனுக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்து, அதற்கு பரிகாரமாக அவனுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தார். எனவே, அவனுக்கு என்ன உதவி வேண்டும் என்று அவனிடம் கேட்டார். அப்போது சுகந்தன், முந்தைய வழக்கில் அந்த நாணயங்கள் இளைஞனுடையது என்று எப்படி அவர் கண்டுபிடித்தார் என்ற தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைக்குமாறு நியாய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டான்.
அப்போது அவர் சுகந்தனை நேராகப் பார்த்தபடி, “அந்த எண்ணெய் செக்கு வைத்திருந்தவன் உடல், கைகள், உடை எல்லாமே எண்ணெய்யாக இருந்தது. எனவே அவன் கூறியது போல, அவனிடமிருந்த காசுகளை அவன் ஒவ்வொன்றாக எண்ணியிருந்தால் அந்த நாணயங்களில் எண்ணெய் லேசாக ஒட்டியிருக்க வேண்டும். ஆனால், நாணயங்கள் எந்தப் பிசுக்கும் இல்லாமல் சுத்தமாக இருந்தன. அவற்றை தண்ணீரில் போட்டபோதும் எண்ணெய் ஏதும் மிதக்கவில்லை”.
“மேலும், அந்தத் துணி முடிப்பிலும் எண்ணெய் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருந்ததோடு, அந்த இளைஞனின் மீது வீசிய சந்தனத்தின் நறுமணம் அந்தத் துணிமுடிப்பின் மீதும் வந்தது. நாணயத்தை நீரில் போட்டபோது மிகச் சிறிதளவு சந்தன துகள்கள் மட்டுமே மிதந்தன இதனால்தான் செக்கு வைத்திருந்தவன் கூறியது பொய் என்றும் இளைஞன் கூறியதே உண்மை என்பதும் உறுதியாயிற்று”, என்றார்.
தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததற்கு நன்றி கூறிய சுகந்தன், “இப்படி மற்றவர்களை ஏய்த்து பிழைக்கும் குணம் உள்ளவர்களைத் தண்டிக்காமல், அவர்களை நல்லறிவு பயிற்சிப் பட்டறைக்கு அனுப்புவதற்கு என்ன காரணம்?”, என்று தனது இரண்டாவது சந்தேகத்தையும் அவரிடம் கேட்டான்.
“வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாத அறியாமையினால்தான், பேராசையின் காரணமாக இத்தகைய தவறுகள் செய்கிறார்கள். இவர்களைத் தண்டிப்பது அவர்களுடைய மனசாட்சி எனும் நியாய அதிகாரியின் நிரந்தரமான கடமை. அந்தக் கடமையை அவர்களுடைய மனசாட்சிக்கு நினைவூட்டி எப்போதும் விழிப்போடு செயலாற்ற தூண்டுவதே நமது வேலை. அதற்கான முயற்சிதான் இந்தப் பயிற்சி பட்டறை” என்றார்.
மேலும் தொடர்ந்து, “இந்தப் பயிற்சிகளை இளமையிலேயே பெறுவதற்கு வாய்ப்பு இல்லாதவர்களே இத்தகைய தவறுகள் செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை உணர்ந்து, பாதுகாப்பான மனிதராக மாற்றம் அடைந்து, சமூகத்தில் நேர்மையாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் சிறந்த பயிற்சிகளின் மூலம் தயார்படுத்துகிறோம். இதனால் இங்கு தவறுகள் முழுவதுமாகத் திருத்தப்படுகின்றன”, என்று அந்த நியாய அதிகாரி விளக்கமாகக் கூறினார்.
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், தீரவிசாரிப்பதும் மட்டுமல்ல சொல்லப்படாத வார்த்தைகளும், சொல்லாமல் சொல்லும் உணர்வுகளும்கூட நியாயத்தை வெளிக்கொண்டுவரும் சக்தி பெற்றவை. இவ்வாறு வார்த்தைகளுக்கு இடையில் இருக்கின்ற இடைவெளியையும் புரிந்துகொண்டு, உள்ளத்தின் உணர்வுகளை உணர்ந்து, அவற்றை செம்மையாக செயல்படுத்தும் திறனும் உள்ளதனாலே அந்த நியாய அதிகாரி புகழுடன் இருக்கிறார் என்று அறிந்த சுகந்தன், அவருக்கு மனதார நன்றி கூறினான். மேலும், நாட்டில் ஏற்படுகின்ற தவறுகளை முழுமையாகக் களைவதற்கான வழிகளை அன்பாகச் செயல்படுத்தும் நேர்த்தியும் அறிந்து அவரிடம் மிகுந்த மரியாதை கொண்டான்.
விசாரணை முறையில் சுகந்தனுக்கு இருந்த ஆர்வத்தையும், அதை தெரிந்துகொள்ளும் தைரியத்தையும், பழகுவதில் உள்ள பண்பையும் பணிவையும் கண்ட அதிகாரி சுகந்தனைத் தன்னுடைய உதவியாளராக பணியமர்த்தி அவனுடைய திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புக் கொடுத்து வாழ்த்தினார்.
# நன்றி .