வாழ்க்கையின் சிறப்பு:
ஒரு ஊரில், குடிநீரைத் தேடி நீண்ட தூரம் நடந்து களைப்போடு இருந்த குதிரை ஒன்று அங்கிருந்த ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டது. அந்த பள்ளம் சற்று ஆழமாக இருந்ததால் குதிரையால் மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. பசியும் தாகமும் வாட்டினாலும் பள்ளத்திலிருந்து மேலே ஏறுவதற்கு ஏதாவது உதவி வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சத்தமாகக் கனைத்துக் கொண்டிருந்தது.
குதிரையின் சத்தம் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பள்ளத்தைச் சுற்றி மேலே நின்றபடி குதிரையை வேடிக்கைப் பார்த்தார்கள். அப்போது சோர்வாகக் கீழே நின்றிருக்கும் குதிரையின் நிலைமையைப் பார்த்து சிலர் பரிதாபப்பட்டார்கள். அவர்களுள் ஒருவன், ஒரு பெரிய ஏணியை உள்ளே இறக்கி அதில் குதிரையை மெதுவாக ஏற்றி மேலே கொண்டு வரலாம் என, அவனுக்குத் தோன்றியதைக் கூறினான்.
மற்றொருவன் குதிரையால் அப்படியெல்லாம் ஏறமுடியாது, அதை நாம்தான் கயிறுகட்டி மேலே தூக்க வேண்டும் என்றான். உடனே ஒரு பெரிய துணியில் நான்கு மூலைகளிலும் வலிமையான கயிறு கட்டி குதிரைக்கு அருகில் இறக்கினார்கள். முதலில் குதிரை சற்று தயங்கினாலும் இப்போதைக்கு வேறு வழியில்லையே என்று நினைத்துக்கொண்டு அந்தத் துணியில் ஏறியது. அங்கே இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து குதிரையை மேலே தூக்கினார்கள். ஆனால் பாதிதூரம் வந்ததும் அந்தத் துணி கிழிந்து குதிரை பொத்தென்று கீழே விழுந்தது.
ஏற்கனவே சோர்வாக இருந்த குதிரைக்கு இப்போது உடல் முழுதும் பலமாக அடிபட்டதால் அதனால் கத்தகூட முடியாமல் அமைதியாகப் படுத்துக்கிடந்தது. குதிரை எந்த அசைவும் இல்லாமல் மயங்கி கிடப்பதை பார்த்த சிலர் இனி இந்தக் குதிரையை நம்மால் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அந்தப் பள்ளத்தை மூடுவதற்கு ஆளுக்கொரு மண்வெட்டி எடுத்துவந்து பள்ளத்தில் மண்ணை தள்ளினார்கள்.
மயக்கத்தில் படுத்திருந்த குதிரை தன்மீது மண் விழுவதை அறிந்ததும் விழித்து எழுந்து உடலை சிலிர்த்து உதறியது. அப்போது, மேலேயிருந்து தொடர்ந்து விழுகின்ற மண் கீழே குவியலாக விழுவதைக் கண்டதும் அந்த மண்குவியலின் மீது ஏறி நின்றது. உடனே தான் சிறிது உயரம் மேலே ஏறுவதை அறிந்த குதிரை தன்மீது விழுகின்ற மண்ணை உதறியபடி நம்பிக்கையோடு தொடர்ந்து ஏறியது.
விழித்துக்கொண்ட குதிரையின் தன்முனைப்பைப் பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் அதற்கு உதவும் நோக்கத்தோடு வேகமாக வேலை செய்தார்கள். இதனால் பள்ளத்திலிருந்து மேலே ஏறிய குதிரை தனது பார்வையால் அங்கிருந்த மக்களுக்கு நன்றி கூறிவிட்டு, வரமாகக் கிடைத்த புதிய வாய்ப்பில் தனது வாழ்க்கையை நோக்கி மகிழ்ச்சியாக ஓடியது.
மனிதனும் தனது உடல்நிலை, மனநிலை, சூழ்நிலை போன்றவற்றில் இயல்பாக ஏற்படுகின்ற எத்தனையோ இடையூறுகளைச் சந்தித்துக் களைப்படையும் வேளையில், நச்சு மனிதர்களின் சூழ்ச்சி, பொறாமை, சுயநலம், துரோகம் போன்ற தந்திரமான பள்ளங்களில் தவறி விழுந்து விடுகின்றான். ஆனாலும், இத்தகைய பாதிப்பு ஏற்படுத்துகின்ற சூழ்நிலைகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு, விடாமுயற்சியோடு போராடும் மனிதனுக்கு, அவனுடைய தன்னம்பிக்கையின் பரிசாகக் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும் வாழ்க்கையின் சிறந்த வரமாக அமைகிறது.
இவ்வாறு, எதிர்பாராத நிலையில் கீழே விழுகின்ற சூழ்நிலையிலும் விழிப்புடன் எழுந்து, ஊக்கத்துடன் மீண்டும் செயல்படுகின்ற மனஆற்றலே வாழ்க்கையில் கிடைக்கும் முதல் வரம் ஆகும். இதுவே வாழ்க்கையில் தன்னுடைய இருப்பின் சிறப்பை உணர்த்துகின்ற வெளிச்சம் ஆகும்.
ஊக்கமே உயர்வு தரும்:
ஒவ்வொரு நாளும் காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுவது அன்றைய நாளை வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருப்பதுபோலவே அறியாமை, இயலாமை, இழப்பு, தோல்வி, சோம்பல், தேவையற்ற பழக்கங்கள் போன்ற பள்ளங்களில் விழுந்த மனிதனும், அதிலிருந்து மீண்டு விழிப்புடன் எழுந்து, தன்னம்பிக்கையோடு வாழ்வதும் மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த வாய்ப்பில் சந்திக்கின்ற சூழ்நிலைகளை விடாமுயற்சியோடு எதிர்கொள்ளும் நிலையில், தான் வெற்றிகரமாக வாழ்வதற்கான வாய்ப்பை வரமாகப் பெறுகிறான்.
விழுந்ததை எண்ணி வருந்தி, சுயபச்சாதாபத்தினால் சோர்ந்து போவதில் பயனில்லை என்று உணர்ந்து, ஆக்கபூர்வமான உதவிகளை முறையாகப் பயன்படுத்தித் தற்காத்துக்கொள்ளும் தனிமனிதனின் ஊக்கமே விழுந்தாலும் உடனே எழுவதற்கான முயற்சியைத் தருகிறது. இந்த விடாமுயற்சியே மனம் தளராமல் மீண்டும் எழுந்து தொடர்ந்து வாழ்வதற்கான முதல் தகுதியாக இருக்கிறது.
விடாமுயற்சியின் விளைவால் கிடைக்கும் இந்தத் தகுதி, புதிய பலத்தையும், தன்னம்பிக்கையும், தன்முனைப்பையும் தருகின்ற சக்தியாக வெளிப்படுகிறது. இது, தனிமனித வளர்ச்சிக்கு மட்டுமல்ல சமுக வளர்ச்சிக்கும், தொழில்துறைகள் புத்துணர்ச்சி பெறுவதற்கும், பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகள் மறுமலர்ச்சி அடைவதற்கும் மிகமிக அவசியமான ஊக்கச்சக்தியாக உள்ளது. முறையான வளர்ச்சிக்குத் தேவையான திறன்களைப் பெறுவதற்கும், பெறுகின்ற ஆற்றல்களை முறையாகப் பயன்படுத்தும் நுட்பத்திற்கும் மனதின் இந்தச் சக்தியே பெரிதும் பயன்படுகிறது.
குறைகளும் சேர்ந்ததே முழுமை:
உடைந்துபோன பீங்கான் பொருள் மீண்டும் உறுதியாக ஒட்டப்பட்டு, அவ்வாறு ஒட்டிய இடத்தில் தங்கமுலாம் பூசப்பட்டு அந்தப் பொருளின் மதிப்பை மேலும் கூட்டுகின்ற ஜப்பானியர்கள், மனம் தளராமல் முயற்சி செய்தால் உடைந்த பொருளும் உன்னதமான பொருளாக மாறமுடியும் என்றே உணர்த்துகிறார்கள். குறையை நிறையாக மாற்றும் ஜப்பானியர்களின் இந்த யுக்தி வாழ்க்கையின் சிக்கலையும் எளிமையாக தீர்த்துவைக்கும் சிறந்த வழியாக உள்ளது.
எனவே, மாற்றமுடியாத பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் மனம் உடைந்து போகாமல், எந்நிலையிலும் வாழ்க்கையைப் புதியதாகத் தொடங்கி முழுமையாகச் சிறப்பாக வாழ்வதற்கான தகுதி ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. இத்தகைய வாய்ப்பும் சிறப்பும் பெற்ற மனிதன், தன்னுடைய தகுதியைத் தான் அறிந்து செய்கின்ற சுயமுயற்சியே உடைந்ததை ஒட்டவைத்து மறுஉருவாக்கம் செய்வதற்கான அடிப்படையான வேலையாகும். இந்த சுயமுயற்சியின் விளைவால், வாழ்க்கையை நம்பிக்கையோடு அணுகுவதும், இதையே சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்துவதும் தங்கமுலாம் பூசப்பட்ட பொருள்போல தன்னிலையை மேலே உயர்த்துவதற்கான விடாமுயற்சியின் விளைவுகளாக இருக்கின்றன.
பூரணமான மனிதன் என யாருமே இல்லை (Nobody is Perpect) என்று கூறப்படுவது உண்மை எனில், உயர்ந்த நிலையில் ஜொலிப்பவர்கள் பெரும்பாலும் உடைந்த இடத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட பொருட்களைப் போல பாதிப்பு ஏற்பட்ட இடத்தைப் பலமாக்கி, அதையே சிறப்பு தன்மையாக வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையாகும். குறைகளை நிறைகளாக மாற்றும் இத்தகைய சாதனையளர்களின் தனித்தன்மையை உணரும்போது, அனைவரும் அவரவர் வாழ்க்கையின் சிறப்பையும் அதை பலமாக்கும் திறனுள்ள தனித்துவமான வழிகளையும் அறிந்துகொள்ள முடியும்.
தவிர்க்கமுடியாத நிலையில் நிகழ்ந்த குறைபாடுகளை, மனதின் தழும்புகளை எண்ணி வருத்தம் அடையாமல், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, நிகழ்காலத்தின் செயல்பாடுகளில் மேலும் சிறப்பாகக் கவனம் செலுத்துவதே மனஅமைதியைத் தரும் என்கிற ஜப்பானியரின் “வாபிசாபி” என்னும் வாழ்வியல் கருத்து நமக்கு சிறந்த துணையாக இருக்கிறது. மேலும் இது நடைமுறை வாழ்க்கையில் மனநிறைவு பெறுவதற்கும் எளிமையாக வழிகாட்டுகிறது.
உடைந்துபோன சந்தர்ப்பத்தை உயர்வதற்கான சந்தர்ப்பமாக உருமாற்றுகின்ற தன்னம்பிக்கையே உன்னதமான வாழ்க்கையை உருவாக்குகிறது. எனவே, எந்த நிலையிலும் மனம் தளராமல், கிடைத்த வாய்ப்புகள் அனைத்துமே சேர்ந்துதான் வாழ்க்கையை அழகாக்குகின்றன என்ற மனநிலையோடு, இன்றைய வாழ்க்கையைப் புதிய வாய்ப்பாகத் தொடங்கி சிறப்பாக வாழலாம் என்ற கருத்தைப் பதிவு செய்வதே இன்றைய சிந்தனையின் நோக்கம் ஆகும்.
# நன்றி.