இயற்கை சொல்லும் பாடம்:
ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது. இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன. பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல நாட்களாக எண்ணற்ற மனிதர்களின் உழைப்புகளைப் பெற்றுக்கொண்ட பின்புதான் நம் கைக்கு உணவாக வந்து சேர்கிறது.
ஒரேஒரு வேளை உணவிற்கே இத்தனை காலநேரமும், இத்தனை மனிதர்களின் உழைப்பும் தேவைப்படும் என்றால், வாழ்க்கையின் முக்கியமான வெற்றிகள் மட்டும் விதைத்தவுடன் விளைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமாகுமா?
நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான் என்று மிகச் சாதாரணமாக நினைத்துக் கூறப்படும் காளான்கள்கூட, அவை விட்டுச்சென்ற விதைகள் முளைப்பதற்கு அடுத்த மழை வரை காத்திருக்கின்றன.
இதைப்போல, ஒவ்வொரு விதையும் இந்தப் பூமியில் மக்கிப்போகாமல் தன்னைத் தனக்குள் உயிர்ப்போடு புதுப்பித்துக்கொண்டு, தகுந்த சூழ்நிலை வரும்வரை காத்திருந்து, தான் விதையாக விழித்தே இருந்ததை நிருபிக்கிறது. இந்த வலிமையான பூமியைத் தனது மென்மையான தளிர்களால் திறந்து, தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றது. ஒவ்வொரு விதை முளைப்பதற்கும் ஒவ்வொரு காலநேரம் தேவைப்படுவது இயற்கை. பொறுப்பும், பொருமையும் காலத்தின் தேவை.
இயற்கை தன் பணியைச் செய்வதற்குப் பொருத்தமான காலநேரம் வகுத்துத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறது. மனிதனும் இயற்கையில் பிறந்தவன்தானே இயற்கையைப் புரிந்துகொண்டு வாழ்வதுதான் நியாயம். ஓரறிவு தாவரங்கள் என்று கூறி அவற்றைக் குறைவாக மதிப்பீடு செய்யும் நாம், அவற்றை விட நுட்பமாக, சிந்தித்து வாழ்ந்து காட்டுவதுதான் மனிதனின் அறிவுக்கு மேன்மை தரும்.
கனவுகளின் பலன்கள்:
இன்றைய குழந்தைகளின் கனவுநாயகன் அப்துல் கலாம் அவர்கள், தூங்கும்போது வருவது கனவல்ல நம்மைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று கூறினார். “தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றால் மனம் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து, தனக்கான சூழ்நிலை வரும்வரை தகுதிகளைத் திடமாக வளர்த்துகொண்டே விதைபோல விழித்திருக்கும் நிலையைத்தானே கூறுகிறார்.
கலாம் அவர்களின் நல்ல வார்த்தைகள் நமக்கு வழிகாட்டுவது போலவே அவருடைய வாழ்க்கையும் நமக்குச் சிறந்த பாடம் அல்லவா? உலகமெல்லாம் போற்றும் அந்த உத்தமரை நாம் அன்பாக நேசிப்பதற்கு என்ன காரணம்? தூங்கவிடாமல் செய்த அவருடைய கனவில் அவர் வெற்றி பெற்றார் என்பதாலா? உண்மையில், விமானியாகவேண்டும் என்று சிறு வயதுமுதல் அவர் கண்ட கனவு நிறைவேறவில்லை. ஆனலும் மனவுறுதியோடு வாழ்ந்து, கிடைத்த வாய்ப்புகளில் தன்னை ஈடுபடுத்தி முழுமையாக உழைத்தார்.
அதிலும், பல சோதனைகளும், தோல்விகளும், கடினமான சூழ்நிலைகளும் அவருடையப் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருந்தன. அவற்றை மனவுறுதியுடன் நிதானமாகக் கையாண்டு தன் வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்ததன் பலனாக, அவருடைய கனவில் ஒருநாளும் நினைத்திராதப் பதவிகளும், பட்டங்களும், அன்பான மக்களின் மனதில் உயரிய இடமும் கிடைத்தன.
விமான ஓட்டியாக வேண்டும் என்ற தன்னுடைய கனவு நிறைவேறாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ‘கவலைப்படாதீர்கள், பின்னாளில் நீங்கள் சிறந்த விஞ்ஞானியாக புகழ்பெற்று, ஜனாதிபதியாக உயர்ந்து, மக்கள் மனதில் நிறைந்து விடுவீர்கள்’ என யாராவது அன்று கூறியிருக்க முடியுமா?
வாழ்க்கை என்பது நீண்ட பயணம். அதில் எங்கே எப்படி திருப்பம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. வெற்றியும் தோல்வியும் கடந்து செல்லவேண்டிய மேடுபள்ளங்கள். செல்லும் பாதையை மறைத்துச் சுவர் கட்டியிருந்தாலும், அதையும் கடந்துசெல்ல மாற்று வழிகள் இருக்கும், அது நம் கனவை விட சிறந்த வாய்ப்பாகவும் இருக்கலாம். ‘உயர்ந்த கனவுகளுக்காக உண்மையாக உழைத்தால், அந்த உழைப்பே நாம் நினைத்ததைவிட உயரிய வாய்ப்புகளை வழங்கி, நம்மை மேலும் உயர்த்தும்’, என்று வாழ்ந்து காட்டிய மாமனிதர் கலாம் அவர்களை மதித்து வாழ்வோம்.
கடமை:
பள்ளிக் குழந்தைகளுக்குச் சிறந்த மனிதர்களின் வெற்றிகளைச் சொல்லி உற்சாகம் ஊட்டுவது, அவர்களின் முன்னால் இருக்கும் பாதைகளைக் காட்டுவதற்குக்காகத்தான். அதற்காக அவை எளிதாகப் பெறப்பட்ட வெற்றிகளாக நினைக்க முடியுமா?
பட்டாம்பூச்சியாகப் பறக்க நினைத்தாலும், கூட்டுப்புழு பருவத்தைக் கடந்துதான் சிறகுகளைப் பெறமுடியும். இது இயற்கையின் நியதி. இத்தகைய சூழலில் ஆற்றலை முதலீடு செய்து, ஆக்கபூர்வமாகச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் முன்னேற்றமே.
பலப் போராட்டங்களைக் கடந்த ஒருவருடைய வெற்றி, அவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அவரை முன்னுதாரமானமாகக் கொண்டு பின்பற்றும் பலருக்கு நம்பிக்கையாகவும், சமுதாயத்தின் நேர்மறையான வளர்ச்சியின் மைல்கல்லாகவும் கொண்டாடப்படும்.
சமுதாயத்திற்குப் பயன்படும் எந்தத் துறையாக இருந்தாலும், உழைத்து நேர்மையாக முன்னேறும் எல்லா வேலைகளும் மனித அறிவுக்குச் சாட்சியாக விளங்கும் வெற்றியின் அடையாளங்களே.
நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபராக இருந்தாலும், நாம் அனைவருமே சமுதாயத்தின் ஒரு அங்கத்தினர்தான். நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத பல்வேறு தடைகளைப் படிப்படியாகக் கடந்துதான் இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம். எந்தத் தடைகளும் இல்லாமல் தெளிவான பாதைகள் இருக்கவேண்டும் என எதிர்ப்பார்ப்பது நம்முடைய எதிர்காலக் கனவு.
அந்தக் கனவின் பாதையில் மனவுறுதியோடும், நம்பிக்கையோடும் தொடர்ந்து நடைபோடுவோம். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடைவது என்பது மற்றொரு குறிக்கோளுக்கான பாதையின் துவக்கம்.
வெற்றி என நாம் நினைக்கும் இலட்சியங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே, கனவின் பாதையில் திடமான நம்பிக்கையும், மனந்தளராத விடாமுயற்சியும் நமது வெற்றியை உறுதிப்படுத்தும்.
# நன்றி.