ஒரு நாட்டின் மன்னர் தன் நாட்டுமக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டவராக இருந்தார். அதனால் அனுபவம் நிறைந்த மதியுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்தி நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
மேலும், மக்களின் உண்மையான நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல சட்டங்களைச் சீரமைத்துச் சரியான முறையில் வழிநடத்தி மக்களுக்கான நல்லாட்சி செய்ய வேண்டும் என நினைத்தார். எனவே, மக்களுக்கு உள்ள குறைகளையும், மக்களிடம் உள்ள குறைகளையும் பற்றிய உண்மையான தகவல்களைத் தெரிந்துகொள்ள நம்பிக்கையான ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார்.
எனவே, வயது காரணமாக இப்போது ஓய்வில் இருக்கும், அனுபவம் மிக்க வீரசேனர் என்பவரை மன்னர் சந்தித்தார். அவர் மிகச்சிறந்த நாட்டுப்பற்று மிகுந்த அதிகாரியாகப் பணியாற்றி நல்ல பெயர் பெற்றவர். மூன்று தலைமுறை மக்களைச் சந்தித்திருக்கும் அவரிடம் மக்களின் மனநிலையைப் பற்றிய தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டார்.
மன்னரின் கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்ல வேண்டும் என்று சிந்தித்த வீரசேனர், “நான் என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும், அதில் நான் கண்ட அனுபவங்களையும் கூறுகிறேன், அவை உங்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள்” என்று கூறிவிட்டுத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதையைக் கூறினார் வீரசேனர்.
“நான் போர் வீரனாகப் பணியாற்றிய என் இளமை காலத்தில் ஒருநாள் மாலைநேரத்தில், எல்லைக்காவல் பணிக்காகக் குதிரையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஊர் எல்லையில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் கேட்டது. யாரென்று அருகில் சென்று பார்த்தபோது, நிறைய நகைகள் அணிந்திருந்த ஒரு இளம்பெண் அழுது கொண்டிருந்தாள்”.
“அருகில் சென்று அவளை விசாரித்தபோது, அவள் தன்னுடைய கணவன் வீட்டுக்குச் செல்வதற்காக அண்ணனுடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தபோது, ஆற்றுவெள்ளம் அதிகமாக வந்து விட்டது என்று கூறினாள்.
திடீரென்று வெள்ளம் அதிகமானதால் வண்டியோடு அண்ணனையும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றும், அப்போது தான் மாட்டு வண்டியிலிருந்து கீழே விழுந்து காலில் அடிபட்டதனால் தன்னால் நடந்து சென்று தேடவும் முடியவில்லை என்றாள்.
மேலும், பக்கத்து ஊரிலுள்ள தன்னுடைய கணவரும் பெரியவர்களும் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்”, என்று கூறி அழுதாள்.
“அதைக் கேட்ட நான், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணின் அண்ணனைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை வைத்தியரிடம் ஒப்படைத்துவிட்டு, அவளுக்கும் சிகிச்சை அளித்தப் பிறகு, அந்தப் பெண்ணை அவளுடைய கணவன் வீட்டில் பத்திரமாய் சேர்ப்பதற்குள் இரவுநேரம் ஆகிவிட்டது”.
“செல்வந்தர்களான அந்த வீட்டு பெரியவர்களும் அவளுடைய கணவரும் மிகவும் நல்லவர்கள். தங்கள் வீட்டு மருமகளை நல்லபடியாகக் கொண்டுவந்து சேர்த்ததற்கும், அவளுடைய சகோதரனை காப்பாற்றியதற்கும் நன்றி கூறினார்கள். பிறகு அன்புடன் உபசரித்து, நான் கிளம்பும்போது தங்கநாணயங்கள் உள்ள பணமுடிப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வந்தார்கள்”.
“நான் அதை வாங்க மறுத்துவிட்டு, ‘ஒரு வீரனாக என் நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தேன். இரவு நேரத்தில் உண்ண உணவு கொடுத்து உபசரித்தீர்கள், உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி’, என்று கூறிவிட்டு அங்கிருந்து மகிழ்ச்சியாகக் கிளம்பிவிட்டேன்.
இந்த நிகழ்ச்சியைத் தெரிந்துகொண்ட மக்கள், அந்தப் பெண்ணின் துன்பத்தைத் தகுந்த சமயத்தில் போக்கியதற்காகத் தங்களது அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தினார்கள். அந்த மனநிறைவு நீண்ட நாட்களுக்கு என் மனதில் மகிழ்ச்சியாக அப்படியே இருந்தது”.
“பிறகு, நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பதவியில் உயர்ந்து விட்டேன். அந்தச் சமயத்தில் உடன் இருந்த மக்கள் அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும்போது, அந்தப் பெண்ணின் கணவர் வீட்டில் கொடுத்தப் பணமுடிப்பை வாங்கியிருக்க வேண்டும் என்றும், செய்த உதவிக்குத்தானே அன்பளிப்புக் கொடுத்தார்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களே, என்றும் கூறினார்கள். பின்னர் அந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதெல்லாம் மனதில் வருத்தமே ஏற்பட்டது” என்று வீரசேனர் கூறினார்.
இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மன்னர் வியப்பாக வீரசேனரைப் பார்த்து, “அதைப்பற்றி நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு வீரசேனர் “இப்போது அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் நினைக்கவே விரும்புவதில்லை, ஆனால் இன்றைய மக்கள் அதைப் பற்றி பேசும்போது எனக்குக் கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது” என்றார்.
இதைக் கேட்ட மன்னர் மிகுந்த ஆச்சர்யத்துடன் “அப்படி என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டார். “எந்த ஆதரவும் இல்லாத நிலையில் கிடைத்த வசதியான இளம்பெண்ணை அழைத்துவந்து திருமணம் செய்து கொண்டிருக்கலாமே, அழகான இளம்பெண்ணையும், நிறைய நகைகளையும் கைநழுவவிட்ட, பிழைக்கத் தெரியாதவன், என்று இளைஞர்கள் கேலி பேசுகிறார்கள்”, என்றார் வீரசேனர்.
“அன்றைய மக்களின் மகிழ்ச்சி என்பது கடமையில் கண்யத்தையும், நடத்தையில் கெளரவத்தையும், வெளிப்படுத்துவதாக உயர்ந்த மனநிலையில் இருந்தது”.
“பின்னாளில், செய்த நன்மைக்குப் பிரதியாக ஏதாவது அன்பளிப்புப் பெறுவதுதான் மகிழ்ச்சி என்ற நிலைக்குத் தாழ்ந்தது”.
“ஆனால், இப்போது, மற்றவர் உணர்வுகளை மதிக்காமல், யாரையும் எப்பாடு படுத்தியாவது தான் பகட்டாக வாழ்வதே மகிழ்ச்சி என்ற நெறியற்ற மனநிலையில் இருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது” என்று வீரசேனர் கூறினார்.
இதைக்கேட்ட மன்னர், மக்களின் மனநிலையில் பொருள் சேர்க்கும் ஆசை படிப்படியாக உயர்ந்து பேராசையாக வளர்ந்து விட்டதைத் தெரிந்து கொண்டார். அதோடு, சகமனிதரின் துன்பத்திலும் தன்னலம் தேடும் ஆபத்தான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பக்குவமாக உணர்த்திய வீரசேனருக்கும் நன்றி தெரிவித்தார்.
சுயநலத்திற்காகப் பண்பை இழக்க நினைக்கும் மக்களின் மனநிலையை மாற்றுவதே நல்லாட்சியின் அடிப்படையான தேவை என்று நினைத்தார்.
பண்பான செயல்களே தனது தகுதியின் அளவுகோல் என ஒவ்வொருவரும் உணரும் வகையில் நெறிமுறைகள் அமைத்து, மக்கள் வாழ்க்கைக்கு வளம்தரும் திட்டங்களை ஏற்படுத்தி, மனவளம் நிறைந்த மக்களின் ஆட்சியாக உயர்த்துவதே தனது கடமை’ என்று மன்னர் உறுதி கூறினார்.
# நன்றி.