ஈகோ, நல்லதா? கெட்டதா?
ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது. இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது. எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ செயல்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் தனக்குத் தேவையானதைப் பெற்றுத் தந்த ஈகோவை, தான் வளரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆயுதமாகப் பயன்படுத்தி சாதித்துக்கொள்ளும் மனநிலைதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் குழந்தைப் பருவத்தின் ஈகோ, வளரும் பருவத்தில், அவர்கள் வளர்ச்சிக்கே கடினமான தடையாக மாறுகிறது.
இந்த பருவத்தில் அவர்கள் சந்திக்கும் ‘NO’ என்ற மென்மையான, உறுதியான ‘மறுப்பு’, ஈகோ எனும் திரையை விலக்கி நிதர்சனமான சூழ்நிலையை ஒவ்வொன்றாகக் கவனிக்க வைக்கிறது.
ஈகோவின் எல்லை:
நாம் உண்ணும் உணவு பசியைப் போக்கி, உடலுக்குச் செயலாற்றும் சக்தியையும் தருகிறது. ஆனால், அதை அளவோடு நிறுத்தாமல் ருசிக்காக அதிகமாக உண்டால், அந்த உணவே சோம்பலை ஏற்படுத்தி, பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கும் காரணமாக அமைகிறது.
ஈகோவும் கிட்டத்தட்ட இதே விளைவுகளையே ஏற்படுத்துகிறது. புதிதாகச் செய்ய வேண்டிய, நல்ல முயற்சிகளில் தன்முனைப்பாக ஈடுபடுவதற்கு, மிகமிக ஆரம்ப நிலையில் ஒரு உந்துசக்தியாக மட்டுமே ஈகோ தேவைப்படுகிறது. இந்த நிலையோடு ஈகோவை நிறுத்தி, பின்னர் ஆற்றல் மிக்க செயல்களை வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு, சரியான இடத்தில் ஈகோவை தவிர்க்காதபோது, ஒரு செயலை மதித்து முழுமையாகக் கற்றுக்கொள்ளக்கூடிய பணிவு இருக்காது. மேலும், Perfection என்ற அதிகப்படியான எதிர்பார்ப்பினால் மிகுந்த மனபதட்டமும், வெறுப்பும் ஏற்படும். இதனால் இயல்பான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுத் தாழ்வு மனப்பான்மையும் உருவாகிவிடும்.
தன்னுடைய முயற்சியில் இயல்பாக ஏற்படக்கூடிய தவறுகளைத் திருத்திக்கொள்வதைவிட, மற்றவர்களின் விமர்சனங்களை முக்கியமாக மனதில் முன்னிறுத்துவதால், எப்போதும் எதிர்ப்பு மனநிலையே வெளிப்படுகிறது.
தோல்வி ஏற்பட்டால் அதையே அவமானமாகக் கருதி மனஅழுத்தம் ஏற்படுகிறது அல்லது வெற்றி கிடைத்தால் தன்னை மிக உயர்வாக கருதும் ஆணவம் ஏற்படுகிறது.
இவ்வாறு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, எதிர்ப்பு மனநிலை, மனஅழுத்தம், ஆணவம் போன்ற குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஈகோ, வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடிய எதிர்மறையான குணமாகும்.
உணவுப்பொருட்களுக்கும், மருந்துகளுக்கும் Exp.தேதி என்று பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு எல்லை தேதி இருப்பதுபோல, ஈகோவையும் அதற்கான எல்லையில் நிறுத்துவது பாதுகாப்பானது.
நமது எண்ணங்களும் அதன் வெளிப்பாடுகளும் எந்த நோக்கத்தில் செயல்படுகிறது என்று தொடர்ந்து கண்காணிப்பது மனதை வழிநடத்த உதவியாக இருக்கும். இதைச் செயல்படுத்த உள்ளுணர்வு எப்போதும் விழிப்போடு இருப்பது அவசியமாகிறது.
ஈகோவின் விளைவுகள்:
இதுவரை கிடைத்தவற்றில் நல்லதை நினைத்து மனநிறைவே அடையாமல், வாழ்நாள் முழுதும் தான் எனும் அகம்பாவத்தை வளர்த்துகொண்டே போகும் ஏக்கப்பாத்திரம். தன் விஸ்வரூப எதிர்பார்ப்பினால், வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகளையும், பாராட்டுகளையும், சுருங்கச் செய்யும் சுயநலம்.
எப்போதும் தன்னை பெருமையாகவே நினைக்கும் ஈகோ, நடைமுறையில் சந்திக்கும் தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் எதிர்நோக்க முடியாமல், அகங்காரம் எனும் கவசத்துக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் தந்திரம் கொண்டது.
தன்னை VIP ஆக நினைத்து, இந்த உலகமே ஒதுங்கி நின்று தனக்காக வழிவிட வேண்டுமென எதிர்ப்பார்த்து, (ரியாலிட்டியை) உண்மை நிலவரத்தைத் தாழ்வாக நினைக்கும் நாடகத்தன்மை கொண்டது. எப்போதும் ‘தன்னை மட்டுமே முக்கியமாக நினைக்கும் ஈகோ, தன் இயல்புகளை அப்படியே வெளிப்படுத்தும் மனிதனுக்கு, தானே எதிரியாகவும் செயல்படுகிறது’.
சுயமதிப்பு:
ஈகோவை நிறுத்திய எல்லையிலிருந்து சுயமாகத் தொடங்குவது சுயமதிப்பு. இது ஆர்வத்தைத் தகுதியாகப் பயன்படுத்தி தேவையானவற்றைப் பணிவாக கற்றுக்கொள்ள உதவும் உணர்வு. கற்றுக்கொண்டதைத் தன்னம்பிக்கையோடு செயல்படுத்தி, தவறுகளைத் திருத்திக் கொண்டு, அடுத்த முயற்சியை நோக்கி தொடர்ந்து நடைபோடக்கூடியது.
தனிப்பட்ட பலம், பலவீனம் ஆகியவைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் நிதானமாகச் செயல்படும் தன்மை கொண்டது. நியாமான ஆலோசனைகளை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டு, புத்துணர்ச்சியுடன் செயல்படக்கூடியது. மனிதனின் மனநிலைக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.
சுயமதிப்பு என்பது பழைய அனுபவங்களின் அடிப்படையில், படிப்படியாக உயரக்கூடியது. உள்ளுணர்வை அதிகரித்து விழிப்புணர்வோடு செயல்பட வைக்கும் தன்மை கொண்டது. தற்பெருமையோ, தாழ்வு மனப்பான்மையோ பெருமளவு மனதைத் தாக்காமல், வெற்றி, தோல்விகளை அந்தந்த செயல்களில் கிடைத்த அனுபவங்களாக மாற்றக்கூடியது.
தனக்குத்தானே கட்டுப்பாடுகளை அமைத்துத் திட்டமிட்டு, நேர்மையான வரையறைக்குள் செயல்படக்கூடியது. சுயமரியாதையை உயர்த்தும் வகையில், நேர்மறையான நடத்தைகளை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. இந்தச் சுயமதிப்பு, ‘தன்னை உயர்த்துபவரை மேன்மைபடுத்தும் தன்னடக்கம் நிறைந்த சிறந்த குணம்’ ஆகும்.
# நன்றி.