உயிர்களின் சாட்சி, செயல். வள்ளுவர் கூறும் SoftSkills.Uyirkalin Saatchi, Seyal. Valluvar Koorum SoftSkills. Activity is the Witness of Liveliness.

எது சிறந்த செயல்?: 

உலகின் ஒவ்வொரு அசைவும் ஒரு செயல், அசையாதிருப்பதும் செயலே.  பேச்சும் செயலே, மௌனமும் செயலே.  விளைவுகளை ஏற்படுத்தும் எதுவும் செயலே.  

ஞானியின் (நினையாத, நீங்காத) மௌனம் மோனம்.  குருவின் மௌனம் உபதேசம்.  (பாஞ்சாலியின்) துகிலுரிந்த சபையின் மௌனம் வன்முறை.  கைகேகியின் மௌனம் பாடம்.  

சராசரி வாழ்க்கையில் மௌனம் என்றால் சம்மதத்தின் அறிகுறி மட்டுமல்ல, இயலாமை, புறக்கணிப்பு, கோபம், பயம், வருத்தம், நாணம், பொறுமை, அடக்கம், மன்னிப்பு, முதிர்ச்சி, பாதுகாப்பு என பலவிதமாக வெளிப்படுகின்ற, பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற, செயல்.  

மௌனத்தையும் மற்ற செயல்களைப்போலவே இடம் பொருள் அறிந்து விளைவுகளை உணர்ந்து சிறப்பாகப் பயன்படுத்தும்போதுதான், மௌனம் உன்னதமானதாக உயர்கிறது.  வார்த்தைகள் அற்ற எல்லையில் இறைவனின் மொழியாக உணரப்படுகிறது.   

அமைதியான மௌனமே இத்தனை விளைவுகளை ஏற்படுத்துமெனில் ஆர்ப்பாட்டமான செயல்களின் விளைவுகள்! ஆராய வேண்டியவை.

விளைவுகளைப் பொறுத்தே செயல்களின் தன்மையும், சிறப்பும்  தீர்மானிக்கப்படுகின்றன.  எனவே, விளைவுகளைக் கருத்தில் கொண்டு, செயல்களின் வகையறிந்து  கையாள வேண்டிய வழிமுறைகளை,  இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான திறன்களாக வள்ளுவர் வகைப்படுத்திக் காட்டுகின்றார்.  

எது கூடாது?

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 

மற்றன்ன செய்யாமை நன்று.

ஏன் செய்தோமோ! என்று வருந்தக்கூடியச் செயலை ஒருபோதும் செய்யக்கூடாது.  அறியாமையினால் ஒருவேளை அவ்வாறு செய்து விட்டாலும் அதைபோல மறுபடியும் செய்யவே கூடாது.  

எது தீமை?

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 

செய்யாமை யானுங் கெடும். 

ஒவ்வொரு மனிதனும், தான் செய்யக்கூடாத செயல்கள், செய்ய வேண்டிய செயல்கள் என இரண்டையுமே நடைமுறையில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.  

செய்யக்கூடாத தீயச் செயல்களைச் செய்வது எத்தகைய தீமையோ அதுபோலவே செய்ய வேண்டிய நல்ல செயல்களைச் செய்யாமல் இருப்பதும் தீமையே என்று வள்ளுவர் கூறுகிறார்.

பகுத்தறிதல்:

செயல்களும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வள்ளுவர், செயல்களை எவ்வாறு அணுக வேண்டும் என்றும்  கூறுகிறார்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க 

தூங்காது செய்யும் வினை.

கட்டாயம் செய்ய வேண்டிய நல்ல செயல்களாக இருந்தாலும், சில செயல்கள் தகுந்த காலத்திற்காகக் காத்திருந்து பொறுமையாகச் செய்ய வேண்டியதாக இருக்கும்.  சில செயல்களைச் சற்றும் தாமதிக்காமல் உடனைடியாகச் செய்ய வேண்டியதாக இருக்கும்.  எனவே, எந்தச் செயலை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து செயல்படுவது நன்மை பயக்கும்.

திட்டமிடல்:

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை 

உள்ளறிவான் உள்ளம் கொளல்.

செய்ய வேண்டிய நல்ல செயலைச் சிறப்பாகச் செய்ய நினைப்பவன் அதன் செயல்முறைகளையும், ஏற்கனவே அச்செயலைச் செய்துமுடித்தவர் அனுபவங்களையும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.

தயார்நிலை:

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் 

இருள்தீர எண்ணிச் செயல்.

செய்யவேண்டிய நேர்மையான செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, செயலுக்குத் தேவையான பொருள், தகுதியான கருவி, உகந்த காலம், மேற்கொள்ள வேண்டிய செயல்முறை, பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் சிந்தித்துத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

தெளிவு:

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 

படுபயனும் பார்த்துச் செயல்.

செய்ய வேண்டிய செயலின் முடிவும், செயல்படும் நிலையில்  ஏற்படும்  இடையூறும், செயல் முடிந்தபின் ஏற்படும் விளைவையும் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தெளிவோடு செயல்பட வேண்டும்.

செயல்வீரர்:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

திண்ணிய ராகப் பெறின்.

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய நினைத்து, நினைத்தவாறே அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமெனில், செயலைச் செய்ய நினைப்பவர் திடமான மனவுறுதி மிக்கவராக இருக்க வேண்டும்.

வெல்லும் வழி:

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் 

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

மேற்கண்ட வழிகளில் நன்கு ஆராய்ந்து செய்யப்படும் செயல் நிச்சயம் வெற்றி பெரும்.  ஒருவேளை அவ்வாறு இல்லையெனில், குறிப்பிட்ட அச்செயல் வெற்றிபெறுவதற்கான நுணுக்கமான வழியைக் கூர்ந்து நோக்கி  செயல்படுத்த வேண்டும்.. 

பயன்:

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் 

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

தன்னலம் கருதாமல் தான் எடுத்துக்கொண்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பவன், தன் சுற்றத்தார் அனைவரின் துன்பத்தைப் போக்கி, அவர்களைத் தாங்கிடும் தூண் போன்றவனாக இருப்பான்.

புகழ்:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் 

ஊறெய்தி உள்ளப் படும்.

மிகுந்த செயல்திறன் கொண்டவரின், செயற்கரிய பெருமை மிகுந்த செயல்,  ஆட்சியில் உள்ளவர்களையும் கவர்ந்து, பெரிதும் மதித்துப் பாராட்டப்படும். 

செயலே சாட்சி:

மனிதனின் செயல்கள், உலகையே உருட்டி முன்னோக்கி செலுத்துகின்ற  வலிமைப் படைத்தவை.  அத்தகைய திறன்மிகு செயல்களையும், அதனால் விளையும் பயன்களையும் வள்ளுவர் சிறப்பாக வரையறுத்துக் கூறுகிறார். 

ஒவ்வொரு செயலும் அம்பு போல வெளிப்படுவதாக இருந்தாலும், அது பாயும் வேகமும், சென்றடையும் இலக்கும் எய்தவனின் திறமையைக் காட்டுகின்றன. சாமான்யர்களாக இருந்தாலும், சாதனையாளர்களாக இருந்தாலும், அவர்களது செயல்களே அவர்களை அவ்வாறு அடையாளப் படுத்துகின்றன.  பிறந்தது முதல் தொடர்ந்து செய்யப்படும் செயல்களே வாழ்க்கையாக வளர்கிறது.  அதுவே நம் இருப்பிற்கான சாட்சியாகவும் விளங்குகிறது. 

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *