சூழ்நிலை காரணமாகவோ, தன்னிலை காரணமாகவோ தவிர்க்கமுடியாத சில மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் சுயத்தைத் தொலைத்துவிட்டு பலவீனம் அடைந்துவிடாமல், சுயபலத்தோடு வாழ்வதற்குத் தேவைப்படும் மனவலிமையே எதிர்கால வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறது.
மாற்றங்களை விழிப்புணர்வு இன்றி சந்திக்கும்போது அவை புறநிலை மாற்றங்களாக, அல்லது புறத்தோற்றங்களை மட்டுமே மாற்றிக் கொள்ளும் மேலோட்டமான செயல்களாக இருக்கும்.
ஆனால், விழிப்புணர்வோடு ஏற்றுக்கொள்ளப்படும் மாற்றங்கள், பலவீனங்களைப் பலமாக மாற்றக்கூடிய வலிமையான முன்னேற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் புத்துணர்ச்சி தோற்றத்திலும் புதுப்பொலிவை ஏற்படுத்துகின்றன.
பறவை இனங்களில் வலிமையான இனமாகக் கூறப்படும் ஒரு கழுகின் சராசரி வாழ்நாள் காலம் எழுபது வருடங்கள் ஆகும். ஆனால் அத்தகைய கழுகின் நாற்பதாவது வயதிலேயே இரையை உண்ண முடியாதவாறு அதனுடைய அலகு மிகவும் இறுகி வளைந்து விடுகிறது. சிறகுகளும் அடர்த்தியான இறகுகளால் எடை அதிகமாகிவிடுகிறது. கால் நகங்களும் இரையைப் பலமாகப் பிடிக்க முடியாமல் பலகீனப்பட்டு விடுகின்றன.
ஒரு கழுகிற்கு அதுவரை எவையெல்லாம் பலமாக இருந்தனவோ அவையெல்லாம் அதனுடைய நாற்பதாவது வயதில் பலவீனங்களாக மாறிவிடுகின்றன. ஆனால் அது தான் இன்னும் முப்பது வருடங்கள் வாழவேண்டியது இருக்கும் என்ற உறுதியான எதிர்கால கணிப்பையே தன்னுடைய நம்பிக்கையாகக் கொள்கிறது. இதனால் வலிமையான மறுவாழ்வு பெறுவதற்கு ஏற்ற உறுதியோடு, 150 நாட்கள் கடுமையான தவத்திற்குத் தயாராகிறது.
இதைத் தொடங்குவதற்கான நாளில், உயர்ந்த மலையுச்சியில் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கிறது. அங்குள்ள பாறையில் தன்னுடைய அலகை வேகமாகத் தட்டிதட்டி முழுவதுமாக உடைத்து விடுகிறது. அதன் பின்னர் புதிய அலகு வளரும்வரை காத்திருக்கிறது.
புதிதாக வளர்ந்த அலகை நன்கு கூர்தீட்டிக்கொண்டு அடர்ந்திருக்கும் தன்னுடைய இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி எடுக்கின்றது. உடல் வலியைத் தாங்கிக்கொண்டு மொத்த இறகுகளையும் எடுத்துவிட்டு, மனவலிமையோடு காத்திருந்து புது இறகுகள் முளைப்பதற்கு ஆகும் காலம்வரைப் பொறுமையாக இருக்கிறது.
அதன்பிறகு கால்களில் இருக்கும் வளைந்த நகங்களையும் தன்னுடையக் கூர்மையான அலகால் கொத்திப் பிடுங்கி எடுத்துவிட்டு புதிய நகங்கள் வளரும்வரைப் பொறுமையாக இருக்கிறது. இவ்வாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் நிலை மிகப்பெரிய போராட்டமாக இருந்தாலும் அதை வலிமையோடு 150 நாட்களும் (ஐந்து மாதங்கள்) பொறுமையாக இருந்து செய்து முடிக்கிறது.
இவ்வாறு தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு புதுவடிவம் பெற்ற கழுகு, தன்னுடைய முழுப்பலத்தையும் திரும்பவும் பெற்று வாழ்நாளை வலிமையோடு எதிர்கொள்ளும் தகுதியோடு வெளிவருகிறது.
தனக்கு ஏற்பட்ட தவிர்க்க முடியாத பலவீனத்தைப் பலமாக மாற்றியத் தெளிவும், வலிமையும் ஒரு கழுகுக்கு இருப்பதால்தான், பறவைகளில் இதுவும் ஒரு இனம் என்று சாதாரணமாகக் கடந்துபோக முடியாத அளவுக்கு மிக வலிமையானதாக இருக்கிறது.
அசாத்தியமான இந்தச் செயல் எப்படி சாத்தியமாகிறது?
1. தன்னுடைய பலம் எது என்று தெரிந்திருக்கிறது.
2. பலமே பலவீனமாக மாறிய நிலையை உணர்ந்து ஒத்துக்கொள்கிறது.
3. பலவீனத்தை வெல்ல வேண்டும் என்று உறுதிகொள்கிறது.
4. அதை, எப்போது? எங்கே? எப்படி? எவ்வளவு காலம்? என்று தீர்மானித்துப் பாதுகாப்பாகத் திட்டமிடுகிறது.
5.பலம்பெறுவதற்குத் தேவையான மாற்றங்களைத் தனக்கு தானே செய்து கொள்ளும் வலிமையோடு இருக்கிறது.
6. தன்னுடைய பலத்தை மீண்டும் பெறும்வரை பொறுமையாக இருக்கிறது.
7.தனது “எதிர்காலத்தை மதித்து”, தன்னுடைய தகுதியைப் புதுப்பித்துக்கொண்டு, தனக்குத்தானே மறுவாழ்வு பெறுகிறது.
8. மீண்டும் தான் முழுபலம் அடைந்ததை உறுதியாகத் தெரிந்துகொண்டு, நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியோடும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறது.
“பலவீனத்தை இழந்தால்தான் பலத்தைப் பெறமுடியும்” என்ற உயர்ந்த தத்துவத்தைப் பிரமிக்கும் வகையில் உணர்த்துகிறது.
மழைக்காலங்களில், மரக்கிளைகளிலும், பொந்துகளிலும் இடம் தேடாமல், மழைமேகங்களுக்கும் மேலே சென்று, உயரப்பறக்கும் கழுகு, தன்னுடைய தனித்துவமான வலிமையை எப்போதும் தனக்குள் நிருபித்துக் கொள்கிறது.
இதுவே, உயர்ந்தத் தகுதிகளைப் பெறுவதற்கும், அத்தகைய தகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எத்தகைய கடின முயற்சிகள் செய்யவேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது.
# நன்றி.