நேரநிர்வாகம் எப்படி செயல்படுகிறது? Time Management Eppadi Seyalpadukirathu? TIME TO WISH.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 

நல்ல நேரம்:

ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் பொதுவான கால அளவு.  சிலர் இந்த நேர அளவைப் பயன்படுத்தி வெற்றிக்கான தகுதியைப் பெறுகிறார்கள்.  வேறு சிலர், தன்னை எழுப்பி எவரும் வெற்றியைத் தரவில்லை என்று கூறுகிறார்கள்.  இந்த இருவேறுபட்ட நிலைகளுக்கும் முக்கிய காரணம் அவர்களுடைய நேரநிர்வாகத்தில் உள்ள வேறுபாடே என்று உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  

இந்தப் பிரபஞ்சமே கால அளவின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்பதால் “நேரம் நம்மை நிர்வாகம் செய்கிறது” என்பதுதான் உண்மை.  எனவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள செயல்களை முறையாக நிர்வாகம் செய்வதையே நாம் நேரநிர்வாகம் என்கிறோம்.  இதைப் புரிந்துகொண்டு “நேரத்தை மதித்து, பொருத்தமான வேலைகளைச் சிறப்பாக நிர்வாகம் செய்பவருக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தான்”.

 

நேரநிர்வாகம் :

Time: 

ஒவ்வொரு வேலை செய்வதற்கும் அதற்குரிய குறிப்பிட்ட கால அளவு தேவைப்படுகிறது.  இது பெரும்பாலும் எல்லோருக்கும் பொதுவான கடிகார நேரத்தில் குறிப்பிடப்பட்டாலும், உண்மையில் இது செயல்படுபவரின்  (mind clock)  மனநேரத்தைச் சார்ந்தே அமைகிறது.  எனவே, கடிகாரம் காட்டும் நேரத்தோடு, இணைந்து செயலாற்றும் மனநேரமே (mind clock) நேரநிர்வாகத்திற்குப்  பெரிதும் தேவைப்படுகிறது.  

முன்னதாகத் திட்டமிட்டு, அமைக்கப்பட்ட கடிகார நேரத்தில் ஒலிக்கும் அலாரம் விழிப்புமணியா, தாலாட்டா என்பது அவரவர் மனநேரத்தைப் (mind clock) பொறுத்தே அமைகிறது.

Timing: 

எந்த வேலையும் அதற்குப் பொருத்தமான நேரத்தில் சரியாகச் செயல்படும்போதுதான் முழுமையான பலனை அளிக்கிறது.  

ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, குளிர் காலத்தில் கம்பளி ஆடை அணிவது, இளமையில் கற்பது, பசிக்கும்போது உண்பது, தேர்வு நேரத்திற்குள் விடை அளிப்பது.  போன்ற எல்லா வேலைகளும் பொருத்தமான நேரத்தில் நிகழும்போதுதான் முழுமையான பலனைத் தருகிறது.

நேரமின்மை ஏன் ஏற்படுகிறது?:

நேரமின்மை என்பது கடிகார நேரத்தைக் குறிப்பதாக இருந்தாலும், உண்மையில் மனம் (mind clock) ஒத்துவராத நிலையே  இதற்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது என்று ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

செயலுக்குப் பொருத்தமற்ற சூழல், முக்கியத்துவம் குறைந்த செயல் போன்ற அடிப்படை காரணங்களுடன், செயலை அணுகும் மனநிலையும் இதற்கு முக்கிய காரணமாகலாம்.  

ஒருவரே, ஒரே வேலையை ஒரு சமயத்தில் விரைவாகவும்,  மற்றொரு சமயத்தில் மெதுவாகவும் செய்வதற்கு அவருடைய மனநிலையே முக்கிய காரணமாக இருக்கிறது.

எனவே, ஒரு செயலின் தன்மைக்கு மனமே முக்கிய காரணமாக இருப்பதால், நேர நிர்வாகம் என்பது பெரும்பாலும் மனநிலை சார்ந்தே இயங்குகிறது.

மனநிலை:

1. எதிர்மறை எண்ணம்:

வேலையின் முடிவை (Result) குறித்த எதிர்மறையான கற்பனை அல்லது  மற்றவர்களின் விமர்சனங்கள் குறித்த கற்பனை போன்றவை, அந்த வேலையைத் தாமதமாக்குவதற்கும், தள்ளி போடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

இது குழுமனப்பான்மையைப் பாதித்து, ஒத்துத்துழைப்புத் தரும் மற்றவர்களுடன் போராட்டமான மனநிலையை (mental war) உருவாக்குகிறது. 

இந்நிலையில், செய்யப்படும் வேலையின் தரம் பாதிக்கப்படுவதும், அதைச் சரிசெய்வதற்கு மறுபடியும் செயல்படுவதும், என ஒருவேலைக்கு இருவேலையாக மாறுவதற்கும் வாய்ப்பாகிறது.  இதனால் வேலையை முடிக்க அதிக நேரமும் தேவைப்படுகிறது.

2. அலட்சியம்:

மிக எளிமையானது என்று நினைத்து அணுகும் வேலையில் எதிர்பாராத நடைமுறை சவால் ஏற்படும்போது, எளிதாக நினைத்த வேலையே அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. 

3. கட்டுப்பாடு:

கவனம் சிதறாமல் மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்குத் தேவையான மனக்கட்டுப்பாடு, நேரநிர்வாகத்திற்கு அவசியமான ஒன்று.

ஒரு வேலையைத் திட்டமிடுவதும், அதை மனதில் காட்சிப்படுத்துவதும் (visualization), அந்த வேலையைச் சிறப்பாகச் செயல்படுத்த உதவும்.  ஆனால், அதீத யோசனையில் (over thinking) எப்போதும் கற்பனையிலேயே நேரம் கடந்து செல்வதும் நேரநிர்வாகத்தில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

4. பரிபூரணம்:

Perfection என்ற நிலையை வாழ்க்கை முழுவதும் தேடி, தானும் எந்த வேலையையும் நேரத்தோடு செய்ய முடியாமல், மற்றவர் வேலைகளிலும் திருப்தி அடையாமல் தவிப்பதற்கு இதுவே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. 

உலக அளவில் உயர்வாக பேசப்படும் செல்போனின் இன்றைய தயாரிப்புப் பன்னிரண்டு, பதிமூன்று, பதினான்கு என்று தரத்தை உயர்த்திக்கொண்டே வெளிவருகிறது.  இப்போதைய அதன் சிறப்புகள் அனைத்தையும் அதனுடைய முதல் மாடலில் இருந்திருக்க வேண்டும் என்று தயாரித்தவர்கள் நினைத்திருந்தால், அந்த முதல் மாடல் இன்றும் வெளிவராத வெறும் கற்பனை மடலாகவே இருந்திருக்கும்.  

இப்போது வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் மாடலும் perfection என்ற நிலையை எட்டிவிட்டதாகக் கூறமுடியாது.  ஏனெனில் perfection என்ற தொடுவானத்தை நோக்கியப் பயணமே மகிழ்ச்சி என்று அந்த வளர்ச்சிப் பாதையில் பயணிப்பவர்கள் கூறுகிறார்கள். 

நேரநிர்வாகத்திற்கு தேவையானவை:

1. மனமே மார்க்கம்:

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வேலையை, அதற்கு உகந்த நேரத்தில் மற்றவர்களோடு இணைந்து, வேலையைப் பகிர்ந்து சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றால் உடல் ஆரோக்கியம் போலவே மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

2. விருப்பம்:

எந்த வேலையையும் சிறப்பாகச் செய்வதற்கு, அந்தச் செயல்மீது உள்ள விருப்பமே முதல் காரணம்.  

தவிர்க்க வேண்டிய வேலைகளைச் சரியாகக் கண்டறிந்து தவிர்ப்பதற்கும், தவிர்க்கக் கூடாத வேலைகளை விருப்பத்துடன் செய்வதற்கும், அவற்றின் பலன்கள், விளைவுகள் போன்றவற்றின் மீதான தெளிவு, சிறப்பான செயல்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும்.  

3. முன்னேற்பாடு:

பெரும்பாலான வேலைகளுக்கு அவற்றை மனதில் காட்சிப்படுத்துதலும், அதை முறையான வகையில் திட்டமிடலும், அதற்கேற்ப செய்யப்படும் முன்னேற்பாடுகளும், ஒரு வேலையை அதற்குரிய நேரத்திற்குள் செய்து முடிக்க ஏதுவாக இருக்கும்.

4. முன்னுரிமை:

வேலைகளை, முன்னுரிமை அடிப்படையில் அட்டவணைப்படுத்துதல், கடினம் என்று நினைக்கும் வேலைகளை சிறுசிறு வேலைகளாகப் பிரித்து அவற்றை எளிமைப்படுத்துதல் போன்றவை நேர நிர்வாகத்திற்கு உதவும் வழிகளாக இருக்கின்றன.

5. நிதானம்:

பதறாதக் காரியம் சிதறாது என்பது போல, நிதானமான மனநிலையோடு கையாளப்படும் வேலைகள் சரியான நேரத்தில், நேர்த்தியாகச் செய்யப்படுவதால் நேரநிர்வாகம் வெற்றிகரமாகக் கைவசமாகும்.

மற்றவர்களோடு இணைந்து செய்யக்கூடிய வேலைகளிலும் மனம் நிதானமாக இருந்தால்தான், இணக்கமான, தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து,  குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்.

6. பொழுதுபோக்கு:

நாள்முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளைச் சந்தித்துக் களைப்படைந்த மனம் சற்று அமைதிப்பெறவும், மீண்டும் ஆற்றலுடன் செயல்படுவதற்கு ஏற்ற சக்தியைப் பெறவும் “ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்” மிகவும் உதவுகின்றன.  

செல்போனுக்குச் சக்தி அளிப்பது (சார்ஜ் செய்வது) போன்ற, பயனுள்ள பொழுதுபோக்குகள் தருகின்ற ஊக்கமும், உற்சாகமும் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தைத் தரும் என்பதால் இதுவும் நேரநிர்வாகத்திற்குத் தேவையான ஒன்றாகும். 

7. அன்பு:

மனஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது அன்பு.  குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என்று நம்மோடு பயணிக்கும் சகமனிதர்களைச் சந்திக்கும் நேரத்தைப் பொன்னான நேரமாக உயர்த்தி, இனிமையான நினைவுகளைச் சேகரிப்பதே வாழ்க்கையாகும். 

இதற்கான அன்றாட முயற்சியே மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி முறையான நேரநிர்வாகத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். 

மனநிர்வாகம்:

தனிப்பட்ட வகையில் நேரமின்மைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும்,  அதைச் சீர்செய்வதற்கும், சிறப்பான வகையில் செயல்களைத் திட்டமிட்டு, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவதற்கும் மனநலனே முக்கிய காரணமாக விளங்குகிறது. 

அவரவர் தேவைகளுக்கேற்ப வேலைகளைப் பட்டியலிட்டு, அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மனதை ஆரோக்கியமாக நிர்வாகம் செய்வதே நேர நிர்வாகத்திற்கு அடிப்படை என்பதே இதில் முக்கியமாக கூறப்படும் கருத்தாக உள்ளது. 

எனவே, மனநலனே வாழ்க்கையின் எல்லா நலன்களையும் உரிய காலத்தில் உருவாக்குகிறது என்பது மேலும் உறுதியாகிறது.

# நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *