மதில்சுவர் கடந்த,
பக்கத்து வீட்டுத் தோட்டத்தில்,
செம்பருத்தி செடியின்
இரண்டடி உயரக் கிளையை
இறுக்கமாகப் பிடித்துத்
தொங்கியபடி,
பூனைக்குட்டி கத்துகிறது!
பயத்தின் பற்றுதலை
விடுவதற்குத் துணிந்தால்,
விடுதலையின் தொடக்கம்
காலடியில்தான் இருக்கிறதாம்!
விடாமல்
கத்துகிறது பூனைக்குட்டி!
செய்வதற்கு
நிறைய வேலைகள் இருந்தும்,
எதையும் செய்ய முடியாமல்
பூனைக்குட்டியின் சத்தம்
மனதைத் துளைக்கிறது.
உதவும் உந்துதலில்,
நீண்ட குச்சியை எடுத்து,
செம்பருத்தி செடி நோக்கி
மெதுவாக நீட்டுகிறேன்.
மிகவும் வேகமாகக்
கத்துகிறது பூனைக்குட்டி!
வேறு வழியும் தெரியாமல்
விட்டுச்செல்லவும் முடியாமல்
மனம் தவிக்கும்போது,
அப்பாடா!
பூனைக்குட்டியின் தாய் ஓடி வருகிறது.
குச்சியை நீட்டியபடியே நிற்கும்
என்னை முறைத்தவாறே,
வேகமாக வந்து, தாவிக்குதித்துக்
குட்டியின் கழுத்தைக் கவ்வி,
தூக்கிச்சென்று கீழே விட்ட பின்னர்
திரும்பிப் பார்க்கிறது தாய்ப்பூனை.
பயந்ததைச் சொல்லும்
மெல்லியக் குரலில்
சத்தமின்றி
கத்துகிறது பூனைக்குட்டி!
நாவால் அன்பைத் தடவி,
குளிரவைத்துக் கொஞ்சுகிறது
செல்லப் பூனை.
அன்பில் நனைந்தபடி
அமைதியாகக்
கத்துகிறது பூனைக்குட்டி!
# நன்றி .