வடையின் வாசனையும்
உருளைக்கிழங்கு வருவலும்
உடனே தெரிந்துகொண்டு
வேகமாக வந்து நிற்பாய்.
ஆறும்வரை பொறுமையின்றி
அப்போதே வேண்டுமென்று
அவசரம் காட்டியே
அக்கா! என அழைப்பாய்.
காலை நேர பிஸ்கட்டும்,
குவளையில் நீரும் என்று
கொஞ்சலாகக் கேட்டு நீ
சன்னலைத் தட்டுவாய்.
விசேஷ நாட்களின்
விருந்து என்றாலோ
முக்கிய விருந்தினராய்
முன்னதாகச் செல்வாய்.
வடகம் வத்தலுக்காக
விரட்டியவரின் அழைப்பைக்கூட
பெருந்தன்மையோடு
ஏற்றுக்கொள்வாய்.
கூடி கூடிப் பேசியே
கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு
கூர்மையான அலகுதனை
அவ்வப்போது தீட்டுவாய்.
கருஞ்சாம்பல் கலரும்
கரையும் உன் குரலும்
காணாமல்தான்
வியக்கிறேன்
ஊர்மாற்றி வந்தாலும்
தினமும் உன்னை நினைக்கிறேன்.
காக்கை இல்லா ஊரிலே
இப்போது நான் வசிக்கிறேன்.