உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்
வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்
உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே
உண்மையான உன் பெயரைச் சொல்லு.
எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே
நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே
குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே
குழலின் இசையில் குழையும் காற்றே.
தெற்கிலிருந்து வீசும்போது
தென்றலாகத் தவழ்கிறாய்.
வடக்கிருந்து வந்தால் மட்டும்
வாடையாக வாட்டுகிறாய்.
கிழக்கிலிருந்து கிளம்பிவந்து
கொண்டலைத் தருகிறாய்
மென்காற்றே மெல்ல வளர்ந்து
இளங்காற்று ஆகிறாய்.
திசைக்கொரு பெயரைச் சுமந்துகொண்டு
திகைக்க வைக்கும் காற்றே நீ
உண்மையான உன் பெயரைச் சொல்லு.
கோடையும் தணியுமாம் மழைக்காற்றில்
அம்மியும் பறக்குமாம் ஆடிக்காற்றில்
மார்கழிக்கே குளிருமாம் பனிக்காற்றில்
தேவையெல்லாம் நிறையுமாம் பருவக்காற்றில்
உலகின் இயக்கமாய் உலவிடும் காற்றே நீ
உண்மையான உன் பெயரைச் சொல்லு.
சின்னகுழந்தை ஸ்பரிசம் போல
சிலிர்த்து வீசும் சிறு காற்றே!
கடலின் அலையைத் தள்ளிதள்ளி
கரையில் வீசும் கடற்காற்றே!
வேலிப்போட்டும் அடங்காமல்,
வேகத்தையும் குறைக்காமல்,
எல்லைகள் யாவும் எடுத்தெறிந்து,
எழுந்து நிற்கும் பெருங்காற்றே!
கப்பலைத் திருப்பும் கடுங்காற்றாய்
புரட்டிப் போடும் புயல்காற்றாய்
சுழற்றி வீசும் சூறைக்காற்றாய்
வையம் உணரச் செய்கின்றாய்.
நிலையில் தாழ்வு என்றாலோ
புரட்சிக் காற்றாய் மிரட்டுகின்றாய்.
வகைவகையாய் வீசி உந்தன்
வன்மை காட்டும் காற்றே நீ
உண்மையான உன் பெயரைச் சொல்லு.
ஒலி, ஒளியின் ஊடகமாய்
வாசனையின் வாகனமாய்
வலம் வரும் காற்றே!
தட்பத்தையும் வெப்பத்தையும்
தாங்கி நிற்கும் கலமே!
அளவோடு இருந்து கொண்டால்
அணுக்கமாக இருந்திடுவாய்.
அழுத்தம் அதிகரித்தால்
அணுகுண்டாய் வெடித்திடுவாய்.
ஐந்தில் ஒன்றாய் இருந்துகொண்டு
ஐந்திலும் இருக்கும் உன் பங்கு.
அனைத்திலும் நிறைந்த காற்றே நீ
உண்மையான உன் பெயரைச் சொல்லு.
பந்துகளில் பதுங்கிகொண்டு
விளையாடும் குழந்தை காற்றே
வாகனத்தின் வளையம் நுழைந்து
வலிமை காட்டும் இளமை காற்றே.
பார்க்கும் இடமெங்கும் பரவி நின்றும்
கண்ணில் தெரியாக் கள்ளக் காற்றே.
உணர்வின் உறவில் உலவும் காற்றே, உந்தன்
உண்மையான பெயரைச் சொல்லு.
கோடையில் உனைத் தேடியும்
குளிரென்றால் உடல் மூடியும்
காணக்கிடைக்கா உன்னோடு
காலந்தோறும் ஆடுகின்றோம்.
உலகைக் காக்கும் உன் திறமை!
உயர்ந்து நிற்கும் உன் தலைமை!
களிப்புடன் காப்பது உன் அருமை!
கணக்கிலடங்கா உன் பெருமை!
உண்மையான உன் பெயரைத் தேடி,
உலகமெங்கும் சுற்றினாலும்,
இயற்கையின் மடியில் மலரும் காற்றே,
பசுமையில் செழித்து வளரும் காற்றே, நீ
மெதுவாய்த் தவழும் அழகைக் கண்டு
மனமே சொல்லும் மகிழ்ச்சி என்று.
# நன்றி .