நண்பர்களும், நட்பும். Nanbargalum, Natpum. Friends and Friendship.

நட்பு எனும் நாகரிகம்:
பிறப்பால் ஏற்பட்ட உறவுகள் எவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைவதில்லை.  தேர்ந்தெடுக்கப்படும் உறவுகள் எல்லாம் நட்பாய் மலர்வதில்லை. 

அன்பால் இணைந்த இத்தகைய உறவுகளும் நட்போடு பழகும்போது அந்த உறவு மேலும் பலப்படும் என்பதால் அன்பினும், நட்பு உயர்ந்த நாகரிகமாகப் போற்றப்படுகிறது. 

இதனால்தான், பெற்றோர், பிள்ளைகள்; கணவன், மனைவி; உடன்பிறந்தவர், உறவினர் என்று அன்பால் இணைந்த குடும்ப உறவுகளும் நட்போடு பழகுதே ஆரோக்கியமான அணுகுமுறை என்று மனநலம் பேணுபவர்களும் கூறுகிறார்கள்.
குடும்ப உறவுகளையும் கடந்து ஆசிரியர், மாணவர், அலுவலர், ஆட்டோக்காரர், காவலர் என்று சமூகத்தில் சந்திக்கும் அனைவருமே தாங்கள் நண்பர்களாகப் பழகுவதைச் சிறப்புத் தகுதியாகக் கூறுகிறார்கள்.  இவ்வாறு அவரவர் கடமையில் நேர்மையாக இயங்குபவர்கள் நட்போடு பழகும்போது சமுதாயம் மிக உயர்ந்த நிலைக்கு உயரும் என்பது உண்மையே.  
நண்பர்கள்:

அனைவருமே விரும்பும் இந்த நட்பு சாத்தியமாவதற்கு முக்கியமான சில பண்புகள் அவசியம் என்றும், நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே ஒருவரை நட்பு கொள்ளவேண்டும் என்றும் சான்றோர் கூறுகின்றனர்.  நேர்மையானவருடன் அன்போடு பழகுவது நமது சமூகக்கடமை.  அதற்கும் மேலாக, அவருடைய தன்மையை ஆராய்ந்து பார்த்தப் பின்னரே நட்போடு பழக வேண்டும் என்பதன் அவசியம் என்ன?

மனம், நம்முடைய பலம், பலவீனம் ஆகியவற்றை நன்கு தெரிந்து, அமைதியாக நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது.  இத்தகைய மனதிற்கு மிக நெருக்கமாகும் நண்பர், நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனதின் சாட்சியாக, நமது மனசாட்சியின் வடிவமாக இயங்கும் பாதுகாப்பானவராக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமான தகுதிதானே.

மேலும், நெருக்கமான நண்பர் கூறும் கருத்துகள், ஆலோசனைகள், செயல்கள் போன்றவை கப்பலைத் திருப்பும் சுக்கான் போல வாழ்க்கையின் திசையைத் திருப்பும் சக்திப் பெற்றவை.  எனவே, நாம் எத்தகையவர் என்பதை பிரதிபலிக்கக்கூடிய நட்பை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும் என்று காலந்தோறும் சான்றோர்கள் கூறுகிறார்கள். 

இதனால்தான் சமூகத்தில் எண்ணற்ற மனிதர்களைச் சந்தித்து, அவர்களிடம் அன்பாகப் பழகினாலும், அவர்களுள் தேர்ந்தெடுத்த ஒருசிலரை மட்டுமே நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறோம்.  

பண்புகள்:

குற்றமில்லாத, நேர்மையான நட்பு நண்பர்களுக்கிடையில் மகிழ்ச்சியைத் தருவதோடு சமூகத்தாலும் உயர்வாக மதிக்கப்படுகிறது.  இவ்வாறு அனைவருமே விரும்பி மதிக்கின்ற சிறந்த நட்பு, அதற்கே உரிய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  
* Prophet Friendship:
  • உணர்வுகளின் அடிப்படையில் உண்மையாகப் பழகுவது.  
  • ஒரே கருத்தோடு, இயன்ற வழிகளில் எல்லாம் துணை நிற்பது.
  • நண்பரின் தனிப்பட்டத் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவது. 
  • முன்னேற்றம் தரக்கூடிய பொருத்தமான குறிக்கோளைக் கண்டுபிடிக்க உதவுவது.  
  • தயக்கம், பயம் போன்றவற்றை விலக்கி, முக்கியமான, முன்னேற்றமான செயல்களைச் செய்வதற்கு ஊக்கப்படுத்துவது.
  • முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரங்களில் சுயநலமில்லாமல் நேர்மையாக வழிகாட்டுவது. 
  • அவரவர் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிப்பது.
* All Weather Friendship:
  • வெற்றியிலும், தோல்வியிலும் மனதளவில் உடனிருந்து, மாறாத மனநிலையோடு நம்பிக்கைத் தருவது.
  • ஆறுதலான வார்த்தைகளால் மனப்பதட்டத்தைக் குறைத்து ஊக்கம் அளிப்பது.  
  • கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும் நிலையில் மனதின் நடுக்கத்தைப் போக்கி, நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் (mental support) பாதுகாப்பை உருவாக்குவது.
  • ஒருபோதும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல், எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது.
* Confidant Friendship: 
  • நண்பரைப் பற்றிய தனிப்பட்ட செய்திகள் மற்றும் அவரே தன்னிடம் மனம்விட்டுப் பேசியவற்றை வெளிப்படுத்தாமல் காப்பது. 
  • மேலும், அவை கிட்டத்தட்ட மறக்கப்படவேண்டியவை என்கிற உணர்வோடு பழகுவது.
* Truth Teller Friendship:  
  • சிரித்துப்பேசி மகிழ்வதோடு மட்டும் அல்லாமல், முழுமையான பாதுகாப்பும், நம்பிக்கையும் பகிர்வது. 
  • பாராட்டுக்குரிய செயல்களைக் கவனித்துத் தேவையான அளவு பாராட்டுவது.  
  • மகிழ்ச்சிக்காகப் போலியாகப் புகழாமல், சரியான கணிப்புகளைச் சொல்வது. 
  • தவறுகளை மறைக்காமல் உண்மையாக நடந்து கொள்வது. 
  • நல்ல வழியிலிருந்து சிந்தனைகள் தவறும்போதே அதை எடுத்துக்கூறி, திருத்தி, நல்வழிக்குத் திருப்புவது.
  • தவறுகளைத் திருத்தும்போது மனம் பாதிக்காத வகையில் பக்குவமாகச் சொல்லித் திருத்துவது. 
  • நேர்மறையான இரண்டு செய்திகளுக்கிடையில் (sandwich போல) திருத்த வேண்டிய தவறைக் குறிப்பிட்டு, அந்தத் தவறு இல்லாமல் இருந்தால் இந்தச் செயல் மேலும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தைப் பக்குவமாக ஏற்படுத்துவது.
நட்பு:
 
பார்க்காமலேயே நண்பர்கள், பழகிய நண்பர்கள், பேனா நண்பர்கள், பேஸ்புக் நண்பர்கள் என்று இலக்கியக் காலம் முதல் இன்றைய காலம்வரை எத்தனையோ விதமான நண்பர்களைப்பற்றி  கேள்விப்பட்டிருப்போம். 
அத்தகைய நண்பர்களின் காலமும், களமும் வேறுபட்டிருந்தாலும் மாறுபடாத நட்பு மட்டும் மணம் வீசும் மலராக நம் மனதில் என்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இவ்வாறு நாம் காலந்தோறும் வியந்து மகிழும் நட்பு, நண்பர்களின் சிறப்பைக் கூறுவதன் மூலம் அந்த நட்பின் மதிப்பையும் உயர்த்துகிறது. 
நட்பு என்பது பகிர்தலின் மூலம் (Communication) உருவாகும் நம்பிக்கையான உணர்வு.  தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் மனதளவில் பாதுகாப்புத் (psycological safety) தரும் உறவே உண்மையான நட்பு.  
இயல்பாகவே இத்தகைய குணங்கள் இழையோடும் நிலையில் ஏற்படும் அலைவரிசையே நட்பான சூழலை உருவாக்குகிறது.
நட்பு என்பது, அன்பால் இணைந்து, ஒத்த உள்ளுணர்வினால் வளர்ந்து, எல்லாச் சூழ்நிலைகளையும் தாங்கிநிற்கும் நம்பிக்கையாக நிலைபெற்று, பாதுகாப்பு என்னும் பலம் தந்து, உரிமையோடு உறவாடும் உயர்வு பெற்று, மனதில் எப்போதும் முழுமையான மகிழ்ச்சி தரும் நிறைவான உணர்வாகும். 
#  நண்பர்களுக்கு நன்றி.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *