மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

மற்றவர்களைப் புரிந்துகொள்வது எளிதா? Matravargalai Purinthukolvathu Elidha? Empathy. Is It Easy To Understanding Others?

புரிதல்:

மற்றவர்களை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?

இந்தச் சமூகத்தில் மனமுதிர்ச்சிப் பெற்ற மனிதராக வாழ்வதற்கும்; இதமான வாழ்க்கைச் சூழலுக்கும்; உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்த சுமுகமான உறவுநிலைக்கும்; பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் மற்றவரைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது. 

ஆனால், அப்படி எல்லோரையும் புரிந்துகொள்வது என்பது அவ்வளவு எளிமையாக இருப்பது இல்லை என்று இதைப்பற்றி ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள்.    

வாழ்நாள் முழுவதும் ஒருவரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தாலும், அவரை ‘முழுமையாகப் புரிந்துகொள்வது’ என்பது இயலாத காரியம் என்றும், ஒன்றாக இணைந்து வாழும் கணவன் மனைவி உறவாகவே இருந்தாலும் தன்னுடைய துணையை முழுமையாகப் புரிந்துகொண்டதாகக் கூறியவர் எவரும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.  

மனிதர்களின் நடவடிக்கைகள் வயது, இடம், சூழ்நிலை, வாய்ப்பு, மனநிலை, உடல்நிலை, மனமுதிர்ச்சி, அனுபவம் போன்றவற்றைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. 

இத்தகைய பல்வேறு காரணங்களின் தாக்குதலால் மனமாற்றங்கள் ஏற்படலாம் எனும்போது, ஒருவருடைய அடிப்படையான பண்புகளை வைத்து அவருடைய அணுகுமுறைகளை யூகிக்க முடியுமே தவிர, எப்போதும் இப்படியே நடந்துகொள்வார் என்று முழுவதும் உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் கூறுகிறார்கள்.  

முயற்சி:

ஒருவரை, முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது ஆய்வுக்குரியதாக இருந்தாலும், புரிந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியால், பழகும் நேர்த்தியால் ஓரளவேனும் புரிந்துகொள்ள முடியும்.  

இத்தகைய முயற்சிகள்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களாக அமைந்து, உறவுகளையும் பலப்படுத்துகின்றன.  எனவே, புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய முயற்சிகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தகுதி:

மற்றவரைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் நம்மை நாம் புரிந்துகொள்வதுதான் மிகவும் அடிப்படையான தகுதியாகும்.  

நம்மையே நாம் புரிந்து கொள்ளாதபோது மற்றவருடைய அணுகுமுறைகளையும் அவருடைய எண்ணங்களையும் புரிந்துகொள்வது மிகக் கடினம்.

ஏனெனில், மற்றவரின் அணுகுமுறை பெரும்பாலும் நம்முடைய அணுகுமுறையின் எதிர்வினையாகவே இருக்கின்றன.  இந்த நிலையில், நாம் எப்படி நடந்துகொள்கிறோம், நம்முடைய அணுகுமுறை மற்றவரிடத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிற புரிதல் அவசியம்.

மேலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனக்கு ஏற்படுகின்ற உணர்வுகள், அவற்றைத் தான் கையாளும்முறை, தன்னுடைய பலம், பலவீனம் போன்ற  தன்னையறிதலே மனஉணர்வுகளின் அளவுகோலாக நின்று மற்றவரைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதியாக விளங்குகிறது.

2. Verbal and Non Verbal Communication. 

ஒருவரை நாம் புரிந்துகொள்ள அந்த நபருடன் ஏற்படுத்தும் Communication மிகவும் முக்கியமான ஒன்று.  ஒருவர் பேசும்போது அவருடைய கண்கள், முகபாவனைகள், உடல்மொழி, பேசப்படும் கருத்துகள், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவை நமக்குள் ஏற்படுத்தும் உள்ளுணர்வு அவரைப் பற்றி ஓரளவு புரிதலைத் தருகிறது.

3. கவனித்தல்.

ஒருவர் பேசுவதை மிகவும் அக்கறையாக முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கும்போது, நம்முடைய கருத்திலிருந்து மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்துகளையும், அவ்வாறு கூறுபவரின் பார்வையில் நின்று சிந்திக்கும்போது, அவருடைய மனநிலை, உணர்வுகள் போன்றவற்றையும் புரிந்துகொள்ள முடியும்.

4. வெளிப்பாடுகள்.

எந்த விஷயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்.  எந்த விஷயத்திற்கு மகிழ்ச்சி அடைகிறார், எதற்கு அதிகம் பாதிப்படைகிறார், பிடித்ததும் பிடிக்காததும் எவை என்ற தனிப்பட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவருடைய communication இல் உள்ள வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.

மேலும், மகிழ்ச்சி, பாதிப்பு, கோபம் போன்றவற்றை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறார் மற்றும் இவற்றிற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதும் இதில் கணிக்கமுடியும்.

5. சொன்னதும், சொல்லாததும்:

உண்மையில், தான் இத்தகையவர் என்று மற்றவர் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் இத்தகைய வெளிப்பாடுகள் மட்டுமே ஒருவரைப் புரிந்துகொள்ளப் போதுமானவையாக இருப்பது இல்லை.

ஏனெனில், 

உணர்வுகளை மிகமிக மென்மையாக வெளிப்படுத்துதல், தெளிவற்ற நிலையில் வெளிப்படுத்துதல், எதையும் பிரச்சனைபோல வெளிப்படுத்துதல், பிரச்சனையைக்கூட வெளிப்படுத்தாது இருத்தல் போன்ற நிலைகள் புரிந்துகொள்வதற்குக் கடினமான சூழலாகும்.  

எனவே, இத்தகைய நிலையில் இயங்கும் ஒருவரை மிகுந்த பொறுமையோடு, நிதானமாகப் பழகும்போது அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது.

குழப்பமானவர்கள்:

தனக்கென்ற நிலையான அடிப்படைப் பண்புகள் இல்லாமல், அவ்வப்போது முரண்படுகின்ற பழக்கம் இருப்பவர்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் புரிந்து கொள்வது மிகக் கடினம்.  ஏனெனில் அவர்கள் ஏற்படுத்தும் சூழல் மற்றவர்களுக்கு மட்டும் அல்ல அவர்களுக்கும் குழப்பத்தையே உருவாக்கும்.

Left இல் Indicator போட்டு Right இல் கையைக் காண்பித்துவிட்டு நேராக செல்லும் வாகனத்தைப் போல, தெளிவில்லாதவர்களின் வெளிப்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும்.  

ஒரு சிலர் வேண்டுமென்றே மற்றவர்களைத் திசைத்திருப்பும் தந்திரமாகவும் இதைப் பயன்படுத்திக் குழப்பலாம். 

காதலும் புரிதலும்:

வருடக்கணக்கில் பேசிப் பழகி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டதாகக் கூறும் காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு காதல் கசந்து வாழ்க்கை திசைமாறுவது எதனால் ஏற்படுகிறது?

திருமணத்திற்கு முன்பு பெரும்பாலும், தேர்ந்தெடுத்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், போன்ற திட்டமிட்ட ஒரு அமைப்பிற்குள், ஒரேமனநிலையில், ஒரேவகையான விருப்பத்துடன் தினமும் சந்தித்துப் பேசும்போது, இவர்களின் முன்னேற்பாடுகளும், வெளிப்பாடுகளும் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதால் அந்தக் காலகட்டம் மகிழ்ச்சியாக இயங்குகின்றது.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு, ஆர்வமான முன்னேற்பாடுகள் இல்லாத, நிர்ணயிக்கப்பட்ட நிலையான சூழல் மனதில் ஒரு சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை வாழ்க்கையின் பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் போன்றவை கூடுதல் சுமைகளாக மாறுகின்றன.

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திட்டமிடப்பட்ட மனதின் ஆர்வத்தை, இப்போது எல்லா நேரமும் எல்லாச் சூழ்நிலைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் மனம் சோர்வடைகிறது. 

இதனால், பொறுமையிழந்த மனநிலையின் வெளிப்பாடுகள் அவர்களுக்குள் இருக்கும் அபிப்பிராயங்களை மாற்றுகின்றன.  மேலும், அவ்வப்போது புதுப்பிக்கப்படாத உணர்வுகளின் புரிதல் நாளடைவில் காணாமல் போவதே காதல் கசந்து போவதற்குக் காரணமாகிறது.

எனவே, மாறுகின்ற சூழலுக்கு ஏற்றபடி, மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் புரிதலே காதலை வளர்க்கும் களமாக இயங்கும்.

திருமணம்:

சிலருடைய வாழ்க்கையில், திருமணத்திற்கு முன்பு இருக்கும் காலகட்டம் என்பது, மற்றவர் கவனமாக ஓட்டுகின்ற வாகனத்தில், தான் விரும்பியவாறு உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்தபடி பயணிப்பதுபோல மனதில் உற்சாகத்தைத் தரலாம்.  

ஆனால், திருமணத்திற்குப் பின்பு என்பது பெரும்பாலும், தானே கவனமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் பயணத்தைப்போலப் பொறுப்புணர்வுடன் கூடிய மகிழ்ச்சியைத் தரக்கூடியது.

திருமண உறவில் இணைந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்கும் “இருவருக்குமே” இந்தப் பொறுப்பு இருக்கிறது என்பதால் ஒருவர் உணர்வுகளை மற்றவர் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், தெளிவான, பக்குவமான communication என்பது மிகமிக அவசியம்.  

இந்தப் பகிர்தலே நம்பிக்கையான புரிதலை ஏற்படுத்தி, வாழ்க்கையை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் பயணிக்க உதவும் நுட்பமாகச் செயல்படுகிறது.

அன்பின் சக்தி:

ஒருவரைப் புரிந்துகொள்ளவோ, ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவோ அன்பே அடிப்படை மொழியாகும்.  கருணை, காதல், உறவு, நட்பு என்று எத்தனை விதமான வண்ணங்கள் இருந்தாலும், அவை அத்தனையும்  தூய்மையான அன்பின் பிரதிபலிப்புகள்தான்.

தாய்த் தன் குழந்தையைப் புரிந்துகொள்வதற்கு, இது ‘தன்னுடைய குழந்தை’ என்கிற உணர்வின் ஒரு லாஜிக் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.  அதுபோல ஒருவரைப் புரிந்துகொள்ளவும், புரிதலைப் புதுப்பித்துக்கொள்ளவும் அவரிடம் நாம் கொண்டிருக்கும் நிலையான அன்பே முக்கியக் காரணமாக இருக்கிறது.

உள்ளுணர்வு:

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

போலியாகப் பழகுபவர்களிடம் அவரைப்போலவே முகத்தளவில் மட்டும் பேசிப் பின்னர் அத்தகையவரைத் தவிர்த்து விலகிவிட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.  

நாம் சந்திக்கும் மனிதர்களுள் இரண்டற கலந்திருக்கும் போலியானவர்களை அல்லது உள்நோக்கத்தோடு பழகுபவர்களை, ஆரம்ப நிலையிலேயே புரிந்துகொள்வதற்கு, விழிப்போடு இருக்கும் நம்முடைய உள்ளுணர்வு துணைசெய்யும்.  இத்தகைய சூழலைப் புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தும் இந்த உள்ளுணர்வு நம்மைப் பாதுகாக்கும் கேடயமாகும்.

இந்த உள்ளுணர்வே உண்மையாகப் பழகும் உறவுகளின் அன்பை நுணுக்கமாக உணரும் சிறந்த பண்பாகவும் விளங்குகிறது.  இவ்வாறு, அன்பை உணர்ந்து, அன்பை வெளிப்படுத்தும் பழக்கத்தால்தான் குடும்பம், உறவுகள், நண்பர்கள், சந்திக்கும் மனிதர்கள் என அனைவரையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.  

மேலும், இத்தகைய அன்பின் துணையால் மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், மரம், செடி, இயற்கை என்ற அனைத்தையும், முழுவதுமாக இல்லாவிட்டாலும் நமது முயற்சியின் ஆழம்வரை புரிந்துகொள்வது என்பது சாத்தியமே.

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *