நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

வீடு:

வீடு என்ற சொல் இல்லம், இல்லறம் என்ற இரண்டு விதமான அபிப்பிராயங்களைத் தாங்கி நிற்கிறது.  

1.இல்லம் (House): 

இல்லம் என்பது அதன் இருப்பிடம், தோற்றம், அமைப்பு, பொருளாதார மதிப்புப் போன்ற கட்டடத்தின் தன்மையாக, புறப்பொருளாக, வசிப்பிடமாக வெளிப்படுகின்றது.  மேலும், தனக்குள் வாழும் மனிதர்களின் (கல்வி, பதவி, செல்வாக்குப் போன்ற) சிறப்புகளைத் தானும் பெற்று, இன்னாருடைய வீடு என்ற சிறப்பு அடையாளமும் பெறுகிறது.  

2.இல்லறம் (Home): 

இல்லறம் என்பது வீட்டிற்குள் இயங்கும் வீடு.  இது வீட்டின் சுவர்களுக்கிடையே இருக்கும் வெற்றிடத்தை அன்பால் நிறைத்து, கண்ணுக்குத் தெரியாத உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டு, வாழ்க்கையின் அடையாளமாக, இல்லறமாக இயங்குகிறது.

இது, உறவுகளுக்குப் பாதுகாப்புத் தருகின்ற; உணர்வுகளைப் பரிமாறுகின்ற; அன்பையும், பண்பையும், நம்பிக்கையையும் வளர்க்கும் இடமாக இருக்கிறது.  இவ்வாறு மெல்லிய உணர்வுகளால் கட்டப்பட்ட, வலிமையான இல்லறத்தில் உருவாகும், அகவாழ்க்கையின் உயர்வே சமூகத்தில் வெளிப்படையாகத் தெரிகின்ற புறவாழ்க்கையின் உயர்வுக்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது.   

நமக்குள் இருக்கும் நாம்: 

இல்லத்தின் உயர்வுக்கு அடிப்படை காரணமாக இல்லறம் இருப்பதுபோலவே, வெளிப்படையாகத் தெரியக்கூடிய நம்முடைய செயல்களுக்கும், உடல்நிலைக்கும் வெளியில் தெரியாத மனநிலையே முக்கியமான காரணமாக இருக்கிறது.  எனவே, வெளிப்படையான உடல்நிலையும், அது வெளிப்படுத்தும் செயல்பாடுகளும், வெளியில் தெரியாத மனநிலையும் ஒன்றாக இணைந்து, நாம் என்ற அடையாளமாகக் காணப்படுகிறது.

உடல்நலன்:

உடல்நலனை ஆரோக்கியமாகப் பேணுவதற்குப் பாதுகாப்பான சூழல், பொருத்தமான உணவு, உண்மையான உழைப்பு, அளவான உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, தூய்மையான பழக்கங்கள், மிதமான பேச்சு, நேர்த்தியான உடை போன்ற சில செயல்முறைகள் உதவுகின்றன.

மனநலன்: 

ஒருவருடைய மனநலனைப் பொறுத்தே அவருடைய உடல்நிலையும்,  செயல்பாடுகளும் இயங்குகின்றன.  எனவே, சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஆரோக்கியம் என்பது மனநிலை, உடல்நிலை என்ற இருநிலைகளிலும் பாதுகாக்கவேண்டியது கடமையாகும்.

மனஉணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நிலை மாற்றமாக வெளிப்பட்டு, அதுவே நம்முடைய செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.  மனதின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் வெளிப்படுத்தும் செயல்களின் விளைவே நம்முடைய வாழ்க்கையாகவும் அமைகிறது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று கூறுவதற்கேற்ப, வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக நம்மை இயக்கும் மனம், நமக்குள் எவ்வாறு இயங்குகிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்வதே, அதை நாம் பாதுகாப்பாகக் கையாள்வதற்கான வழியாக இருக்க முடியும்.  

மனதின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள, பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகள், பெருமக்களின் அனுபவத்தில் விளைந்த அரிய கருத்துகள் என்று ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன.  அவர்கள் கூறும் கருத்துகள் கடலின் ஆழம் அளந்து கூறுவதுபோல துல்லியமானவையாக இருக்கலாம்.  

ஆனால், இந்தப் பதிவில் நாம் காண இருப்பது கடற்கரையில் நின்று கையளவு நீரை அள்ளிப்பார்ப்பது போன்ற சிறுமுயற்சியின் வெளிப்பாடுகளே.    

கருவிகள்:

அளவற்ற தகவல்கள் உலகில் இருந்தாலும், உடலின் ஐம்புலன்கள் வழியாக அறியப்பட்ட தகவல்களை மட்டுமே (சேமித்துவைத்தத் தகவல்கள் மற்றும் அவ்வப்போது கிடைக்கும் தகவல்கள்) அடிப்படையாகக்கொண்டு ஆற்றல்மிக்க சிந்தனைகள் மூலம் மனம் நம்முடைய வாழ்க்கையை இயக்குகிறது.  

இவ்வாறு, வெளியிலிருந்து தகவல்களை மனம் உடனுக்குடன் பெறுவதற்கு உதவும் கருவிகளாக ஐம்புலன்கள் இயங்குவது போலவே, மனதின் உணர்வுகளைச் செயல்களாக வெளிப்படுத்துவதற்கும் சிறப்பான சில கருவிகள் நமக்குள் தொடர்ந்து இயங்குகின்றன.

மனதின் உணர்வுக்கும், உடலின் செயல்பாட்டுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் இந்தக் கருவிகள் தகவல் பரிமாற்றத்திற்கு முழுமையான காரணமாக இருந்து நம்மைச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன.  

ஐம்புலன்களைக் கவனத்துடன் கையாளும் வாய்ப்பு நம்மிடமே இருப்பதால், நம்மை இயக்கும் மனதை நமக்கு ஏற்ற வகையில் கையாள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  

1.மனதின் நிலைகள்:

1. விழிப்புநிலையில் இயங்கும் ஐம்புலன்களால் தெரிவிக்கப்படும் விவரங்கள், 

2. மேல்நிலை மனதில் (conscious mind) பெறப்பட்டு, 

3. அந்த நிலையில் இயங்கும் புத்தியில் (intelect mind), எதிர்வினையாற்றுகிறது.  

4. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து ஆழ்மனதில் (memory mind) நினைவு அடுக்குகளில் பதிவாகின்றன.  

5. இந்தப் பதிவுகள் ஏற்கனவே நினைவு அடுக்குகளில் இருக்கும் பழைய பதிவுகளோடு இணைவதும், ஒப்பிடுவதும், தேவைப்படும்போது வெளியிடுவதும் நடக்கிறது.  

6. இவ்வாறு, நினைவுகளில் தொடர்ந்து பதிவாகும் விவரங்கள் இயற்கையான மரபியல் குணங்களோடு இணைந்து, அனுபவ அறிவால் பல மாற்றங்கள் ஏற்பட்டு, சிந்தனையால் சிறந்து, தொடர்ந்து வளரும் பண்புகளாக (character), மனிதனின் தனிப்பட்ட குணஇயல்புகளாக உருவாகின்றன.

2. தன்னிலை ஆளுமை (ஈகோ):

மனதில் பதிந்திருக்கும் தனிமனிதப் பண்புகள், ஆழ்மன நினைவுகள், நடைமுறை அறிவு, வினையாற்றும் திறன், ஐம்புலன் நுகர்ச்சி போன்ற எல்லா நிலைகளிலும் எப்போதும் தொடர்புகொண்டு ஆளுமை செய்யும் கருவியாக ஈகோ செயல்படுகிறது.  

மனதின் ஒவ்வொரு நிலைகளிலும் தோன்றுகின்ற ஆற்றல்களான எண்ணங்களையும், சிந்தனைகளையும் தாங்கிவரும் கருவியாக தன்னிலை ஆளுமை செயல்படுகிறது.  இது உள்ளுணர்வின் தூண்டுதலால் சூழ்நிலையின் தேவைக்கேற்ப உள்ளிருந்து வெளியே செயலாக வெளிப்படுகிறது.

3. விழிப்புநிலை:

புறத்தேயிருக்கும் ஐம்புலன்கள் மூலம், உள்ளே இருக்கும் ஆழ்மனதிற்கு செல்லும் தகவல், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பல நிலைகளைக் கடந்து பல மாற்றங்கள் பெற்று நம்மைச் செயல்பட வைக்கிறது.  இவ்வாறு கடந்து வரும் தகவல், மனதின் ஒவ்வொரு நிலையிலும், சரியான காலஅளவில் தொடுவதும், விடுவதும் விழிப்பு நிலையாகும்.

இவ்வாறு விழிப்பு நிலையில் ஆழ்மனதில் பதியப்படும் நினைவுகள் நாளடைவில் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இயல்பான பழக்கமாகப் பதிவாகிறது.  

உதாரணமாக, நாம் வாகனத்தைச் செலுத்தும்போது ஒவ்வொரு வினாடியும் ஒரு சூழ்நிலையைக் கவனமாகக் கவனித்து வாகனத்தைச் செலுத்துவதும், கவனித்ததை விடுவதும், மீண்டும் புதிய சூழலைக் கவனிப்பதும் என்று வினாடி நேரத்திற்குள் தொடர்ந்து நடப்பதுபோல, புறமனதில் தெரிவிக்கப்படும் விவரங்களோடு அவ்வப்போது அகமனதில் தொடர்பு கொள்வதும்.  அகத்திலேயே தங்கிவிடாமல் தகுந்த நேரத்தில் புறத்தில் செயல்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.  இந்தத் தன்மையே புத்தியை விழிப்போடு இயக்கி  “Spontaneous” ஆக செயல்பட வைக்கிறது.  

4. உள்ளுணர்வு:

ஐம்புலன்கள், மனதின் நிலைகள், தன்னிலை ஆளுமை, விழிப்புணர்வு போன்ற கருவிகளின் பயன்களால் ஏற்படும் எண்ணங்கள், சிந்தனைகள் போன்ற ஆற்றல்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தும் கருவியாக உள்ளுணர்வுச் செயல்படுகிறது.  

மிகினும் குறையினும் மாறும் விளைவுகள்:

1. நாமே பரிமாறிக்கொள்ளும் வகையில் பலவகையான உணவுகள் இருந்தாலும், நம் உடல்நிலைக்குப் பொருந்துகின்ற உணவைத் தேர்ந்தெடுத்துத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் தரும்.  

2. பலவகையான தகவல்கள் கொட்டிக்கிடக்கும் சமூகச்சந்தையில் அறிவை வளர்க்கும், வாழ்க்கையை வளப்படுத்தும் புதிய வாய்ப்புகளைத் தேடிச்சென்று, ஐம்புலன்கள் மூலம் சுயகட்டுப்பாட்டுடன் பெறுவது மன ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

3. உப்பு உணவின் சுவைக்கு முக்கியமானது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும்  அவசியமானது.  அதுபோல செயல்திறனுக்கு அடிப்படையாக இயங்கும் ஈகோ, மனநலனுக்கும் மிகவும் அவசியமானது. அதேநேரத்தில் அதன் அளவறிந்து உள்ளுணர்வோடு பயன்படுத்துவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சுவை சேர்க்கும் வழியாகும்.  

4. மனதின் எண்ணங்களும், சிந்தனைகளும் நம்முடைய செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், மனதிற்கு மேலும் சக்தியைத் தரும் வகையில் நேர்மறை ஆற்றலாக இயங்குவது வாழ்க்கையை வளமாக்கும்.

பயன்கள்:

மனம் எவ்வாறு இயங்குகிறது என்று தெரிந்துகொள்வதில் என்ன பயன் இருக்கிறது?  

நம்முடைய செயல்பாடுகளின் விளைவுகளால் வாழ்க்கையில் சில நல்ல பலன்களும், சில பாதிப்புகளும் அடைகிறோம்.  இதற்குக் காரணமாக இருக்கும் நம்முடைய மனதின் செயல்பாடுகளில் எந்த இடத்தில் என்ன நிகழ்வதால், இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன என்ற சிறிய உள்நோக்கு சிந்தனை, நம்மை மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்கும் என்பதே, இதனுடைய பலனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சுழற்சி:

உயர்ந்த திறமைக்குக் காரணமாக இருக்கும் ஐம்புலன்கள் விழிப்பு நிலையில் இயங்குவதும், மனதின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஈகோ உள்ளுணர்வோடு வெளிப்படுவதும், மனஆற்றலுக்கும் செயல் ஆற்றலுக்கும் நல்ல சுழற்சி பரிமாற்றமாக இருக்கும்.  இந்தப் பரிமாற்றம் ஆரோக்கியமான தன்னம்பிக்கையுள்ள செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என்பதால் நாம் முழுமையாக நலமாக வாழமுடியும் என்று நம்புகிறேன்.

 

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *