சிந்தனைகள்:
இயல்பாகச் சிந்திக்கும் சிந்தனைகளில் சில சிந்தனைகள் ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றன. சில சிந்தனைகள் செயல்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. இவ்வாறு சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே அவற்றை நேர்மறையானவை, எதிர்மறையானவை, அதீத சிந்தனை என்று வகைப்படுத்திக் கூறுகிறார்கள்.
அனைவருக்குமே இந்தவகை சிந்தனைகள் பற்றிய கருத்துகளும் அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களும் நிச்சயம் இருக்கும். எனவே, நமக்கு நேர்மறை பலன்களைத் தரக்கூடிய சிந்தனைகள் பற்றிய சில பார்வைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறன்.
நேர்மறை சிந்தனைகள்:
இயல்பான ஒரு சூழ்நிலையில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சிந்தனைகளையும், எதிர்மறையான சூழ்நிலையிலும் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியே வருவதற்கு உதவும் சிந்தனைகளையும், நேர்மறையான சிந்தனைகள் என்கிறோம்.
இயல்பான மற்றும் எதிரான சூழ்நிலைகளைக் கவனமாகக் கவனித்துப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்கு மிகவும் அவசியமான, எச்சரிக்கைத் தருகின்ற சில சிந்தனைகள் விளைவுகளை நேர்மறையாக்கும் அருமருந்தாகச் செயல்படுகின்றன.
நேர்மறையான சிந்தனையின் போக்கிலேயே உருவாகின்ற பாதுகாப்புத் தரக்கூடிய இத்தகைய சிந்தனை, அதன் எல்லையைக் கடந்து அதீத சிந்தனையாகும் நிலையில் அதுவே எதிர்மறை சிந்தனையாக மாறிவிடுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, அதீத சிந்தனையை அதன் பாதுகாப்பு எல்லையிலேயே கவனத்துடன் நிறுத்தி, நேர்மறையாகவே அணுகும்போது மட்டுமே அது நேர்மறை சிந்தனையாகப் பலன் தருகிறது.
அதீத சிந்தனை:
காலத்தின் கையில் ஒளிந்திருக்கும் தீர்வுகளை உடனே கண்டுபிடிக்க நினைப்பதும், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதும், தவிர்க்க முடியாத மற்றும் தவிர்க்கக் கூடாதத் திருப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், கடந்துபோன நிகழ்வுகள் முடிந்துபோகாமல் மனதைச் சுரண்டும் நினைவுகளாக ஒட்டிக்கொண்டு இருப்பதும் அதீத சிந்தனைக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
எல்லை மீறுகின்ற சிந்தனை மனதில் பயத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தி விடுவதால், வலிமையான செயல்களைத் துணிந்து செய்வதற்கு மனமே பெரிய தடையாகிவிடுகிறது. இதன் விளைவாக நிகழ்காலத்தின் வாய்ப்புகள் வலுவிழந்து, வெற்றிகளும் திசைமாறுவதால் இயல்பான சூழ்நிலையையும் எதிர்மறையாக மாறிவிடுகிறது.
சிந்தனையில் தடுமாற்றம் தருகின்ற இந்த எல்லைக்கோட்டில், அதீத சிந்தனையால் ஏற்படுகின்ற எதிர்மறை சிந்தனையை மடைமாற்றம் செய்து நேர்மறையாகக் கையாளும் திறனே “விரைவான சிந்தனைத் திறனையும், முழுமையான செயல்திறனையும்” வளர்க்கிறது.
சிந்தனையின் பலம்:
பயம் என்ற உணர்வு, உலகில் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக இருந்தாலும், அந்தப் பயத்திற்கு எதிராக அவை வெளிப்படுத்தும் தற்காப்புத் திறனே, அவற்றின் சிறப்புத் தன்மையாக வெளிப்பட்டு, பயத்தைப் பலத்தால் வெல்லும் திறனாக வெளிப்படுகிறது.
பகுத்தறிவு எனும் திறனைப் பலமாகக் கொண்ட மனிதனுக்குச் சிந்தனையே வெல்லும் சக்தியைக் கொடுக்கிறது. எனவே, மனஅமைதியைக் கெடுக்கும் எண்ணங்களையும் நேர்மறையாக மாற்றும் வகையில், முறையாகக் கையாளும் திறனே மனிதனின் நேர்மறை சிந்தனையின் பலமாக வெளிப்படுகிறது.
பழக்குதல்:
நேர்மறை சிந்தனையால் கிடைகின்ற நல்ல விளைவுகளை மனதளவில் மகிழ்ச்சியோடு அனுபவிப்பது மூளை நேர்மறையாகச் சிந்திப்பதற்கு உதவும் நல்ல பயிற்சியாகும்.
இயற்கை நம்மை விரும்பிக் கொடுத்திருக்கும் ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் நன்றியை வெளிப்படுத்துவது நேர்மறையான சிந்தனையை மேலும் வலுப்படுத்தும் சிறந்த வழியாகும்.
நமக்கு நாம் நட்பாக இருந்து சிந்திக்கும்போது, நமது சிந்தனைகள் பாதுகாப்பாகச் செயல்பட்டு, நமக்கும் நம்மால் மற்றவர்களுக்கும் நன்மையே செய்கின்றன.
எனவே, நல்லதைச் சிந்திப்போம் நல்லதைச் சந்திப்போம் .
# நன்றி.