வெனிஸ் நகரத்து வணிகன்:
ஷேக்ஸ்பியர்(Shakespeare) எழுதிய The Merchant of Venice என்ற நாடகத்தையும் அதில் வரக்கூடிய திருப்பங்களையும், திருப்பத்திற்குக் காரணமான கதாபாத்திரங்களையும் நம்மால் என்றுமே மறக்க முடியாது.
இந்த நாடகத்தின் கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துகின்ற முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் சில பாத்திரப் படைப்புகளை நம்முடைய பார்வையில் சிந்திக்கலாம் என்ற முயற்சியில் இந்தப் பதிவு.
வணிகனும் நண்பர்களும்:
கதாநாயகன் ஆன்டோனியோ(Antonio) வெனிஸ் நகரத்து வணிகன். கப்பல் வணிகம் செய்து பெரும் செல்வந்தனாக இருக்கும் இவனுக்குப் பல நண்பர்கள் இருந்தாலும் பசானியோ(Bassanio), லாரன்ஸோ(Lorenzo) என்ற இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள்.
இரக்கக் குணம் உள்ள ஆன்டோனியோ தன்னிடம் கடன் கேட்பவர்களுக்கு வட்டியில்லாமல் பணம் கொடுப்பதால் அங்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஷைலாக்(Shylock) ஆன்டோனியோ மீது பகை உணர்வோடு இருக்கிறான்.
இந்நிலையில், பெல்மொன்ட் நகரத்தில் வாழும் செல்வவளம் நிறைந்த (Portia)போர்ஷியாவைத் திருமணம் செய்ய நினைக்கும் பசானியோ தான் பெல்மொன்ட் செல்வதற்குத் தேவைப்படும் பணத்தை ஆன்டோனியோவிடம் கேட்கிறான்.
ஆனால், அப்போது கப்பல் வணிகத்தில் முழுவதும் முதலீடு செய்திருந்த ஆன்டோனியோ, நண்பன் பாசானியாவுக்கு நேரடியாக உதவ முடியவில்லை. அதனால், வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஷைலாகிடம் தன்னுடையப் பெயரைப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ள உதவுகிறான்.
அந்தச் சமயத்தில் ஷைலாகின் மகள் ஜெசிக்கா(Jessica), ஆன்டோனியோவின் நண்பன் லாரன்ஸோவுடன் காதல்கொண்டு, வீட்டிலிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு, அவனுடன் ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள்.
ஏற்கனவே ஆன்டோனியோ மீது பகை உணர்வுடன் இருந்த ஷைலாக், இப்போது மகளின் செய்கையால் கூடுதலான ஆத்திரத்துடன் இருக்கிறான். எனவே, ஆன்டனியோவைப் பழிவாங்க இதுவே சமயம் என்று தீர்மானித்து, பசானியோ கேட்டபடி மூவாயிரம் ducats பணத்தை வட்டியில்லாமல் தருவதாகவும், ஆனால், குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தைத் திருப்பி தரவில்லை என்றால் ஒரு பவுன்ட் சதையை ஆன்டனியோ நெஞ்சிலிருந்து எடுத்துக்கொள்வதாகவும் பத்திரம் எழுதினான்.
குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தைத் திருப்பி கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆன்டனியோ பத்திரத்தில் எழுதி உள்ளதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், எதிர்பாராதவிதமாக ஆன்டனியோவின் மூன்று கப்பல்களும் கடலில் காணாமல் போய்விட்டதால், பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தேதிக்குள் பணம் கட்டமுடியாத நிலையில், ஷைலாகின் வஞ்சத்தில் சிக்கிய ஆன்டனியோ நீதிமன்றத்தில் நின்றான்.
இப்போது பெல்மொன்ட்டில், போர்ஷியாவைத் திருமணம் செய்துகொண்ட பசானியோ தன் நண்பனின் நிலையை அறிந்து உடனே வெனிஸ் நகரத்திற்கு விரைகிறான். அங்கு தன்னுடைய நண்பனைக் காப்பாற்றுவதற்காக ஷைலாக்கிடம் கெஞ்சுகிறான். தன் நண்பன் மீது கருணை கொள்ளுமாறும், தான் இருமடங்கு பணம் தருவதாகவும் கூறுகிறான்.
ஆனால், வஞ்சக எண்ணம் கொண்ட ஷைலாக் பத்திரத்தில் உள்ளபடி ஆன்டனியோவின் ஒரு பவுண்ட் சதையை எடுப்பதே நியாயம் என்று பிடிவாதமாகக் கூறுகிறான்.
வாழ்க்கையை மாற்றும் வார்த்தைகள்.
தீர்ப்புச் சொல்லவேண்டியவர்களும் வேறு வழியில்லாமல் திகைக்கும்போது, பால்தசார்(Balthazar) என்ற புதிய வழக்கறிஞர் திடீரென்று வந்து ஆன்டனியோவுக்காக வாதாடுகிறார்.
ஆனால், இரக்கமற்ற ஷைலாக் எதற்கும் ஒத்துக்கொள்ளாமல் பத்திரத்தில் உள்ளபடி செய்வதுதான் நீதி என்று கூறியபடி கையில் கூர்மையான கத்தியும், தராசும் எடுத்துக்கொள்கிறான்.
அப்போது மாற்று சிந்தனையாக Lateral Thinking கொண்ட அந்த வழக்கறிஞர், “பத்திரத்தில் உள்ளபடி செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒரு துளி இரத்தம் கூட வெளியே வரக்கூடாது. ஏனெனில் இரத்தத்தைப் பற்றி பத்திரத்தில் குறிப்பிடவில்லை” என்று கூறுகிறார்.
பால்தசாரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஷைலாக் எழுதிய பத்திரம் சாத்தியமில்லாத ஒன்று எனக்கூறி நிராகரிக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷைலாக், அப்படியானால் பசானியோ கூறியபடி இருமடங்கு பணத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறுகிறான்.
அப்போது, இரக்கமற்ற முறையில் பத்திரம் எழுதி, அதிலும் நீதி வேண்டும் என்று மனசாட்சி இல்லாமல் கேட்ட ஷைலாக்கின் மீது, ஆன்டனியோவை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார்.
அந்தக் குற்றத்திற்கு, வெனிஸ் நகரச் சட்டப்படி, ஷைலாக்கின் சொத்து முழுவதும் ஆன்டனியோவுக்கே சேரவேண்டும் என்று கூறுகிறார்.
அப்போது, அதை மறுத்த ஆன்டோனியோ ஷைலாக்கின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை வெனிஸ் நகரத்து அரசாங்கத்துக்கும், மறுபாதியை லாரன்ஸோவுக்கு வாரிசுரிமையாகக் கொடுக்கும்படியும் ஆன்டோனியோ கூறுகிறான்.
ஆபத்தான சூழ்நிலையில் சிறப்பாக வாதாடி, தன்னுடைய மாற்று சிந்தனையால் ஆன்டோனியோவைக் காப்பற்றிய வக்கீல் பால்தசாரை அனைவரும் பாராட்டுகிறார்கள். அப்போது அவர் விரும்பி கேட்கும் மிக முக்கியமான பரிசை (தவிர்க்க முடியாத நிலையில்) அவரிடம் பசானியோ தருகிறான். இறுதியில் அந்த வக்கீல் பால்தசார் பசானியோவின் மனைவி போர்ஷியாதான் என்பது கதையின் மிக சுவாரஸ்யமான திருப்பம்.
அதன் பின்னர், காணாமல் போயிருந்த மூன்று கப்பல்களும் ஆன்டோனியோவுக்குத் திரும்பவும் கிடைத்து விடுகின்றன. அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்ற நிறைவோடு நேர்மறையான உணர்வுகளைத் தூண்டும் இந்த நாடகம் நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மனதில் பதிந்த மங்கை:
நல்ல சிந்தனை உள்ளவர்கள் என்றும் நன்மையடைவார்கள் என்று கூறும் இந்தக் கதையில், எதிர்மறையான சூழ்நிலையிலும் தனது lateral thinking மூலம் சூழ்நிலையை நேர்மறையாக மாற்றி, கதையின் நாயகனைக் காப்பாற்றிய போர்ஷியா இத்தனை ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் வகையில் வலிமை மிகுந்த, மிகவும் இரசிக்கத்தக்க கதாபாத்திரமாக இருக்கிறாள்.
Lateral Thinking என்பதற்கு விளக்கம் கூறுவது போல, Out of the Box சிந்தித்து, சிக்கலைத் தீர்க்கும் புதுவழியைக்(Creativity) கண்டுபிடித்த போர்ஷியாவின் அணுகுமுறை, சிந்தனை சரியாக இருந்தால் எந்த நொடியிலும் வெற்றியடையலாம் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
# நன்றி.