புத்தம்:
பல ஆண்டுகளுக்கு முன்பு பாங்காங்கில் ஒரு பெரிய புத்தர் சிலை இருந்தது. மண்ணாலான அந்தச் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில், சிறிது தூரம் நகர்த்தும்போதே அந்தச் சிலையின் மேற்புறத்தில் கீறல், வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மேலும் நகர்த்த முடியாத நிலையில் அந்தச் சிலை வெளியில் அப்படியே இருந்தது.
பின்னர், ஒருநாள் பெய்த பெருமழையில் நனைந்த அந்தச் சிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சிலையின் மேலிருந்த மண் கரைந்த இடத்தில் உள்ளேயிருந்து தங்கத்தாலான புத்தர் சிலை வெளிப்பட்டதைக்கண்டு மக்கள் வியப்படைந்தார்கள்.
அக்காலச் சூழ்நிலையால் தங்கச்சிலைக்கு ஏதேனும் பாதகம் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தால் பலநூறு ஆண்டுகளாக அந்தப் புத்தர் சிலை மண்ணால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்திருப்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
தங்கத்தாலான புத்தர்சிலை மண்ணால் ஆனதாக ஒருகாலத்தில் கருதப்பட்டது என்றாலும் அதுவும் புத்தர் சிலையாகவே வெளிப்பட்டது. புத்தம் என்ற நிலைக்கு அடையாளமான சிலை எந்தப்பொருளால் செய்யப்பட்டிருந்தாலும் அது சொல்லும் செய்தியில் எந்த மாறுபாடும் இல்லை என்பதால் எப்போதும் வணக்கத்திற்கு உரிய நிலையிலேயே வெளிப்பட்டது.
சமூகச் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட மேற்பூச்சு கரைந்த நிலையில் உள்ளிருக்கும் சிலை மேலும் அதிக வலிமை உடையதாக, மக்களின் பார்வையில் மேலும் உயர்ந்த மதிப்புடையதாக, உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கிய அமைதியின் வடிவமாக நிலைபெற்றது.
மனிதம்:
பலவிதமான உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இந்த உலகில், கல்வி, பொருளாதாரம், முன்னேற்றம் போன்ற உலகியல் சார்ந்த வாழ்க்கையில் விழிப்புடன் இயங்கும் எச்சரிக்கை உணர்வும், கண்டிப்பான சில அணுகுமுறைகளும், நடைமுறைக்கு ஏற்ற நுட்பமும் அனைவருக்குமே அவசியம் தேவைப்படுகின்ற, பாதுகாப்புத் தருகின்ற மேற்பூச்சாக இருக்கின்றன.
அவ்வாறு ஏற்றுக்கொள்கின்ற சில அணுகுமுறைகள், உள்ளேயிருக்கும் அன்பான, நல்ல குணங்களை மாற்றிவிடாமலும், உயர்வான உண்மை தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், நடைமுறையோடு ஒருங்கிணைந்து இயங்கும் நிலையிலும் உள்ள அணுகுமுறைகளே மனிதம் என்ற நிலையான பண்பின் அடையாளமாக வெளிப்படுகின்றன.
தங்கச்சிலையாக இருந்தாலும், அதை மூடியிருந்த மண்ணால் செய்யப்பட்ட சிலையாக இருந்தாலும் புத்தம் என்ற நிலைமட்டும் இரண்டிலும் நிலையாக இருந்ததுபோலவே, உள்ளும் புறமும் மனிதம் என்ற நேர்மையான நிலையாக இருப்பதுதான் மனசாட்சி என்ற உரைகல் கூறும் உயர் மதிப்பாக விளங்கும்.
# நன்றி.