அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புன்னகை தேசம்:
உலகத்தின் எந்தத் தேசத்தில் நாம் வாழ்ந்தாலும், நமக்குள் இருக்கும் மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் முகம் என்னும் புன்னகை தேசம் மலர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த மலர்ச்சி மற்றவர் மலர்வதற்கும் காரணமாக இருந்து சூழலையும் இனிமையாக்குகிறது.
இவ்வாறு நம்முடைய மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்ற சூழலையே நாம் எப்போதும் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்கிறோம். இந்த முயற்சியில் நம்முடைய வெளிப்பாடுகளாகச் செயல்படுகின்ற எண்ணம், சிந்தனை, பேச்சு, செயல், அணுகுமுறை போன்றவை அனைத்தும் நம்முடைய மகிழ்ச்சிக்கு மிகமுக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
இவைப்போலவே மற்றவர்களின் வெளிப்பாடுகளும் நமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதால் அவற்றை நாம் திறம்பட கையாள்வதும் நம்முடைய மகிழ்ச்சிக்கு அவசியமானதாக இருக்கிறது. Emotional Intelligence எனப்படும் உணர்வுகளைக் கையாளும் திறன், நாம் சந்திக்கும் சூழலுக்கும் நமக்கும் இடையில் செயல்பட்டு விளைவுகளை நாம் விரும்பும் வகையில் உருமாற்றம் செய்ய வல்லது.
மகிழ்ச்சி = 10:
மகிழ்ச்சிக்கான காரணத்தை வெளியில் தேடாமல் நமக்குள்ளே கண்டறிய வேண்டும் என்று கூறிய ஒரு ஆலோசகர், அதற்கான ஒரு நுட்பத்தையும் அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகக் கூறினார். எனக்குள் பதிவு செய்துகொண்ட அந்தச் சிந்தனையை, நம்முடைய மொழியில் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒரு உதாரணத்திற்காக, 10 என்ற எண்ணை மகிழ்ச்சி என்று நினைத்துக்கொள்வோம். நேரடியாக 10 கிடைத்தால் மட்டுமே முழுமையான மகிழ்ச்சி என்று எதிர்பார்ப்பதால் பெரும்பாலும் அது அரிய வாய்ப்பாக இருக்கிறது.
எனவே, 3+7=10 என்பது போல, பல செயல்களின் கூட்டாகவோ, 12-2=10 என்பது போல தேவையற்றதை நீக்குவதன் விளைவாகவோ, 2×5=10 என்ற முயற்சிகளின் பெருக்கமாகவோ மகிழ்ச்சியைப் பெறலாம். இவ்வாறு சூழ்நிலைக்கு ஏற்ப, முயற்சிசெய்து மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளும் திறனே உணர்வுகளைக் கையாளும் அறிவாக வெளிப்படுகிறது.
எண்களையும் குறியீடுகளையும், பலவாய்ப்புகளாக மாற்றிமாற்றி பயன்படுத்தி 10 என்ற விடையை வரவைப்பது போல, சூழ்நிலைகளையும் emotional intelligence என்ற அறிவோடு பலவகையில் வகுத்துப் பார்த்து மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து மிக நல்ல சிந்தனையாக இருந்தது.
சிலவற்றை முயற்சி செய்து அடைவதால் மகிழ்ச்சி ஏற்படுவது போலவே, சிலவற்றை தவிர்ப்பதும், தள்ளி வைப்பதும்கூட மகிழ்ச்சியே என்ற கருத்தை உள்ளடக்கியதாக இருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஆகமொத்தம், நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கும் மலர்ச்சியைத் தரக்கூடிய நேர்மறையான மகிழ்ச்சி என்பது +10 என்ற விடையை வரவைப்பதுதான் நம்முடைய முயற்சியாக இருக்க வேண்டும் என்று புரிகிறது.
எனவே, மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய இந்தச் சிந்தனை நம்முடைய தனிப்பட்ட இயற்பண்புகளை (Personal Attributes) மேலும் உள்ளார்ந்து சீர்செய்வதற்கும் உதவுவதாக இருக்கிறது.
மேலும், பழகிப்போன சில தேவையற்ற பதிவுகளிலிருந்து மனதை விடுவித்து, ஆரோக்கியமான புத்தம்புது சிந்தனைகளுக்கும் வழி காட்டுகிறது. இதை ஆற்றலுடன் செயல்படுத்தும் முயற்சியே நம்மை எப்போதும் உற்சாகமாக இயங்க வைக்கிறது. இந்த உற்சாகம் தருகின்ற மகிழ்ச்சியே மனதில் நிறைந்து முகத்திலும் புன்னகை பூவாய் மலர்கிறது.
அன்பான நண்பர்கள் அனைவரும் என்றும் மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து, அந்த மகிழ்சியை அன்பானவர்களுடன் பகிர்ந்து சிறப்பாக வாழவேண்டும் என்ற வாழ்த்துகளுடன் நன்றி கூறுகிறேன்.
# நன்றி.