வானம் வசப்படும்! வழிகாட்டும் சிபாங்கிலே சேம்போ. The Skies Will be Conquered! Sibongile Sambo Shows the Way. Vaanam Vasappadum! Vazhikaattum Sibongile Sambo.

வானம் வசப்படும்! வழிகாட்டும் சிபாங்கிலே சேம்போ. The Skies Will be Conquered! Sibongile Sambo Shows the Way. Vaanam Vasappadum! Vazhikaattum Sibongile Sambo.

சிபாங்கிலே சேம்போ (Sibongile Sambo):

1974ல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த சிபாங்கிலே, தன்னுடைய குழந்தைப் பருவத்தில்,  பறக்கும் விமானத்தைக் கண்டதும் உற்சாகம் அடைந்து தான் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். வளரும் பருவத்தில், அந்த விமானமே தனது வாழ்க்கையின் பிடிமானம் என்ற தீர்மானத்தோடு மனதில் நிலையான குறிக்கோளை அமைத்துக்கொண்டார்.  

எனவே, தன்னுடைய குறிக்கோளுக்கு ஏற்றபடி, தன்னைத் தகுதிப் படுத்திக்கொள்ளும் முனைப்போடு கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுத்து, முறையான கல்வித் தகுதியைப் பெற்றார்.  பின்னர், Flight Attendant எனப்படும் விமான பணிப்பெண் பணிக்கு விண்ணப்பித்தார். 

பணிக்கு ஏற்ற முழுமையான கல்வித் தகுதியும், திறனும் இருந்தாலும் அவருடைய உயரம் அந்தத் துறையின் தேவைக்குப் பொருத்தமாக இல்லை என்று மதிப்பிட்ட ஏவியேஷன் துறை, அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது.  அந்த நிராகரிப்பு தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல உலகத்தின் பெரும்பாலான விமான போக்குவரத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிராகரிப்பாகவும் இருந்தது.

வலியில் பிறந்த வலிமை:

சிபாங்கிலே சந்தித்த அந்த நிராகரிப்பு அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அந்த நிராகரிப்பைப் பெரிதாக்கி தான் சிறுத்துப் போகாமல், தனக்குள் விதையாக இருக்கும் குறிக்கோளை விருட்சமாக வளர்க்கும் வீரியமாக அதை ஏற்றுக்கொண்டார்.  

எனவே, நிராகரிப்பைத் தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக மாற்ற நினைத்த சிபாங்கிலே, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நின்றார்.  சிறுவயது முதல் தான் கொண்டிருக்கும் குறிக்கோளின் விமானத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினால் புதிய உயரத்தை அடைய முடியும் என்று உறுதியாக நம்பினார்.  

இதனால், மேகங்களைக் கடந்து மேலே பறக்கும் இராஜாளியைப் போலச் சிந்தித்த அவர் தடைகளைக் கடந்து தனிவழி படைக்க நினைத்தார்.  எனவே, தானே சொந்தமாக ஏவியேஷன் இண்டஸ்ட்ரீ தொடங்க வேண்டும் என்று தனது குறிக்கோளின் இலக்கை துல்லியமாக நிர்ணயித்தார்.

ஆனால், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சிபாங்கிலேவுக்கு, பெரிதினும் பெரிதான அவருடைய எண்ணத்தை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமான சவாலாக இருந்தது.  

மனசக்தி: 

ஏவியேஷன் தொடங்குவதற்குத் தேவையான பொருளாதாரமோ, வங்கியில் கடன் பெறுவதற்கேற்ற சொத்துகளோ இல்லாத நிலையில், தனியார் வங்கி நிறுவனங்களும் தங்கள் விதிமுறைகளைக்கூறி அவருக்குக் கடன் உதவி செய்ய மறுத்தன. 

வேறுவழியேதும் தெரியாத அந்த நிலையிலும், அவரிடம் குறையாமல் இருந்த தன்னம்பிக்கையும், குறிக்கோளின் மீதிருந்த உறுதியான நம்பிக்கையும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தும் திறனும், கடினஉழைப்பும், நேர்மையான அணுகுமுறைகளும், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற திடமான மனஉறுதியும் தன்னிடம் எப்போதும் நிறைவாக இருக்கும் பண்புகள் என்பதை உணர்ந்தார்.  

இந்தத் தன்னிறை உணர்வு (நன்றியுணர்வு.Gratitude) என்னும் மனசக்தியின் விளைவால், பொருளாதாரத்திற்குப் புதிய வாய்ப்புகளைத் தேடினார். தன்தரப்பில் முழுத்தகுதியான மனநிலையோடு தயார்நிலையில் இருந்தவருக்கு அன்பானவர்களின் ஒத்துழைப்பும், தேவையான பணஉதவியும் கிடைத்தவுடன், அவர் விசையுறு பந்து போல ஆற்றலோடு இயங்கினார்.

போதிய அளவு பணமோ, வயதோ, துறைசார்ந்த அனுபவமோ இல்லாமல் இந்தத் துறையில் நுழையவே முடியாது என்று இருந்த நிலையில், சிபாங்கிலேயின் கடுமையான முயற்சியை அறிந்த பலர் தங்களது வியப்பை ஏளனமாக வெளிப்படுத்தினார்கள்.

ஆனால், தன்னுடைய மனபலத்தையும், குறிக்கோளின் பலத்தையும், நடைமுறையில் சந்திக்கும் கடினமான சூழலையும் சரியாகப் புரிந்துகொண்ட சிபாங்கிலே, தன்னுடைய உணர்வுகளைத் திறம்பட நிர்வகித்து, நகர்வுகளைத் திட்டமிட்டு, நேரத்தை மதித்து, குறிக்கோளை நோக்கிக் கவனமாக உழைத்தார்.   

இரும்புப் பறவை: 

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் 

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பத்தை இன்பம் எனக்கருதும் மனவுறுதி கொண்டவருக்கு அவரது எதிரியும் போற்றும்படியான பெருமை உண்டாகும், என்ற வள்ளுவரின் வார்த்தைகளை வாழ்த்துகளாகப் பெற்றவர் சிபாங்கிலே. 

நிலையான மனஉறுதியும், திடமான குறிக்கோளும், ஆற்றல் மிக்க செயலும் கொண்ட சிபாங்கிலே, SRS ஏவியேஷன் என்ற  நிறுவனத்தைத் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, ஏவியேஷன் துறையில் முதல் பெண்ணாகக் கால்பதித்து, இத்துறையின் இளம் தொழிலதிபர் என்ற சாதனைப் படைத்தார்.  

2004ல் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்திடமிருந்து முதல் விமானத்திற்கான ஆணையைப் பெற்ற அவர், தன்னுடைய கடுமையான உழைப்பால் கிடைத்த முதல் வெற்றியின் மகிழ்ச்சியை உணர்ந்தார்.  அந்த மகிழ்ச்சியில் கிடைத்த ஊக்கத்தால் மேலும் பல வாய்ப்புகளுக்காக ஆற்றலுடன் உழைத்து, தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்கிறார்.

கைவசமாகிய வானம்: 

எந்த வெற்றியும் அதன் தொகுப்புகளுடன்தான் (with packages) இணைந்திருக்கும் என்ற விவேகத்தால், அணுகும் வாய்ப்புகளைச் சிறப்பாகக் கையாளுகின்ற திறனால், 300க்கும் மேற்பட்ட விமான சேவைகளுக்குத் தேவையான, போக்குவரத்துக்கு விமானங்கள், ஜெட் விமானங்கள், ஆடம்பர விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றைச் சொந்தமாக நிர்வகித்துத் தலைமை தாங்குகிறார். 

“What I’m proud of about our company is that we have managed to penetrate the Male dominated industry”, என்று கூறும் சிபாங்கிலே, நீண்ட அனுபவம் கொண்ட பல ஏவியேஷன் நிறுவனங்கள் தன்னை பலமான போட்டியாளராக நினைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.    

VIPகளின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், சுற்றுலாத் தேவைக்காகவும் உலகம் முழுவதும் பறக்கும் தன்னுடைய விமானங்களின் மூலம் தனது  பிரமாண்ட வளர்ச்சியை நிரூபித்து, வெற்றிகரமான சிறந்த தொழிலதிபராகத் திகழ்கிறார்.  

துல்லியமான குறிக்கோளும், திடமான நம்பிக்கையும், உறுதியான மனமும், நேர்மையான அணுகுமுறையும் இருந்தால் நம் உழைப்புக்கு ஏற்றபடி வானம் வசப்படும் என்று வாழ்ந்து காட்டுகின்றார்.

உயர்த்தும் உயரிய பண்பு:

“I’m where I am today because somebody invested in me” என்று தன்னை உயர்த்திய உதவிகளை தன்னுடைய மனதிலிருந்து கூறும் அவர், “It’s my opportunity now to invest in other people” என்று, தான் மற்றவர்களுக்கு உதவுகின்ற நல்ல வாய்ப்பைப் பெற்றிருப்பதாக மகிழ்ச்சியோடு கூறுகிறார்.   

“வளரும் ஏவியேஷன் துறையின் மூலம், ஆப்பிரிக்காவின் வளர்ச்சியோடு இணைந்து தன்னுடைய விமானப் போக்குவரத்துத் தொழில் மேலும் வளர்ச்சிப் பெறும்”, என்று நம்பிக்கையோடு கூறும் சிபாங்கிலே, தன்னுடைய வளர்ச்சியை, முயற்சி உள்ள மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் அமைத்து, மண் பயனுற வாழும் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறார்.

வழிகாட்டும் விளக்கு:

2017ல் இந்தியாவில் நடந்த Global Entrepreneurship Summit என்ற ஒரு கருத்தரங்கில் சிபாங்கிலே பேசியபோது, “உங்கள் குறிக்கோள் மீது திடமான நம்பிக்கை வைத்து, எந்நிலையிலும் அதை உயிர்ப்போடு வளர்க்க வேண்டும்” என்று கூறுகிறார்.  

மேலும், “குறிக்கோளில் வெற்றிப் பெறுவதற்கான முயற்சியில் பல சவால்களைச் சந்தித்தாலும், அதை வெல்வதற்கான மாற்று வழிகள் நிச்சயம் இருக்கும்”, என்று கூறும் அவர், “குறிக்கோளை வெல்வதற்கான காலம் நாம் திட்டமிட்டதைவிட சற்றுக் கூடுதலான நேரம் எடுத்துக்கொண்டாலும் தன்னம்பிக்கையோடு உழைப்பவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்று மலர்ந்த முகத்துடன் உறுதியாகக் கூறுகிறார்.

வாழ்க்கை சூழலுக்கும், விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்றபடி, ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஒரு தனிப்பட்ட உலகமும், அவர் தொடநினைக்கும் வானமும் வெவ்வேறாக இருக்கும்.  

இவ்வாறு, ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் என்று வேறுபட்டு இருந்தாலும், அந்தக் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான பண்புகளும், தன்னம்பிக்கையும், மனவுறுதியும், அணுகுமுறைகளும் அனைவருக்கும் பொதுவான வழிமுறைகளாக இருக்கின்றன.  

இந்த வழிமுறைகளே, உள்ளத்தில் இருக்கும் குறிக்கோளை உலகறியச் செய்யும் வாய்ப்பைத் தந்து உயர்த்துகின்றன.  சிபாங்கிலேயின் வாழ்க்கையும், அவரது அனுபவத்தின் வார்த்தைகளும் இந்தக் கருத்துகளுக்குச் சாட்சியாக நின்று வலியுறுத்திக் கூறுகின்றன.    

# அன்பான நண்பர்கள் அனைவரும் தங்களது நேர்மையான குறிக்கோளில் வெற்றிபெற்று வளமாக வாழவேண்டும் என்ற வாழ்த்துகளுடன் நன்றி கூறுகிறேன். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *